மேட்-இன்-இந்தியா காரா என்று சொல்லி சொல்லி சிரிக்க போறாங்க... ஆந்திராவில் உருவாக்கப்படும் கியா கார்!
இந்தியாவில் உருவாக்கப்பட்டு பின்னர் ஆப்பிரிக்காவுக்கு கொண்டுச் செல்லப்பட்டு அங்கு விற்பனை செய்யப்படும் கியா சொனெட் கார், பாதுகாப்பு சோதனையில் மண்ணை கவ்வி இருப்பது கியா நிறுவனத்திற்கும், மேட்-இன்-இந்தியா தயாரிப்புகளுக்கும் தலை குனிவாக அமைந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
தென்கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் 2019ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் நுழைந்தது. செல்டோஸ் கார் மூலம் நுழைந்த கியா, தற்சமயம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுள் ஒன்றாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், இந்தியாவிலேயே கார் உற்பத்தி தொழிற்சாலையை இந்த நிறுவனம் கொண்டிருப்பதும், அதன் மூலமாக குறைந்த விலையில் கார்களை விற்பனை செய்வதும் ஆகும்.

ஆந்திராவில் உள்ள கியாவின் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் கியா கார்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த வகையில், மேட்-இன்-இந்தியா கியா கார்கள் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. குறிப்பாக, தென்னாப்பிரிக்கா மேட்-இன்-இந்தியா கியா கார்களுக்கு முக்கியமான சந்தையாக உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளுக்காக இந்தியாவில் உருவாக்கப்படும் கியா கார்களின் தரத்தை வெளிக்காட்டும் விதமாக புதிய சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்த சோதனைகளை நடத்தியது குளோபல் NCAP என்கிற கார்களின் தரத்தை கண்டறியும் உலகளாவிய அமைப்பாகும். ஆப்பிரிக்காவுக்காக இந்தியாவில் உருவாக்கப்பட்ட கியா சொனெட் காருக்கு குளோபல் NCAP-இல் 5க்கு வெறும் 1 நட்சத்திர மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 5க்கு 3 நட்சத்திரங்களை மட்டுமே ஆப்பிரிக்க கியா சொனெட் பெற்றுள்ளது.

இதற்கு முக்கிய காரணம், குளோபல் NCAP-இல் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட ஆப்பிரிக்க கியா சொனெட் காரில் வெறும் 2 ஏர்பேக்குகள் மட்டுமே வழங்கப்படுவது ஆகும். இந்தியாவிலும் சில வருடங்களுக்கு முன்பு வரையில் அவ்வாறுதான் 2 ஏர்பேக்குகள் மட்டுமே வழங்கப்பட்டன. ஆனால், தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கிட்டத்தட்ட அனைத்து கார்களிலும் 6 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்ட் அம்சமாக மாறிவிட்டது.
குளோபல் NCAP சோதனையில், காரை முன்பக்கமாக மோதவிட்டு சோதனை செய்து பார்த்ததில் டிரைவர் மற்றும் பயணிகளின் தலை, கழுத்து பகுதிகளுக்கு சிறந்த பாதுகாப்பு கிடைக்கிறது. மார்பு பகுதிக்கு போதுமான பாதுகாப்பு கிடைக்கிறது. ஆனால், காரின் முன்பக்கத்தில் வழங்கப்படும் வலிமையான பாகங்களினால் முன் இருக்கை பயணிகளின் கால்களுக்கு போதுமான அளவு பாதுகாப்பு கிடைக்கவில்லை என சோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு காரணம், காரின் தரைப்பகுதி வலுவானதாக இல்லை மற்றும் காரின் ஒட்டுமொத்த உடலமைப்பையும் அதிக எடை தாங்கும் வகையில் இன்னும் வலிமையானதாக உருவாக்க வேண்டும் என்பது குளோபல் NCAP-இன் சோதனைகளின் மூலம் அறிய முடிகிறது. காரின் பக்கவாட்டில் மோதவிட்டு பார்த்ததில் பயணிகளின் தலை மற்றும் இடுப்பு பகுதிக்கு சிறப்பான பாதுகாப்பு கிடைத்துள்ளது.
இதேபோல், பயணிகளின் வயிற்று பகுதிக்கான பாதுகாப்பு ஓரளவிற்கு கிடைத்தாலும், மார்பு பகுதிக்கான பாதுகாப்பு மிகவும் கீழ்தரமானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒரு காரணத்தினாலேயே காரின் பெரியவர்களின் பாதுகாப்புக்கான ஒட்டுமொத்த மதிப்பெண் 34க்கு வெறும் 21.29 ஆக பதிவாகி உள்ளது. குழந்தைகள் பாதுகாப்பிலும் 49க்கு 28.57 மதிப்பெண்களை மட்டுமே ஆப்பிரிக்க கியா சொனெட் கார் பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சொனெட் காரை ஐரோப்பிய நாடுகளுக்காகவும், இந்தியாவிற்காகவும், ஆப்பிரிக்க நாடுகளுக்காகவும் கியா நிறுவனம் எந்தெந்த தரநிலைகளில் உருவாக்கிறது என்பதை இவ்வாறான சோதனை முடிவுகளின் மூலம் அறிய முடிகிறது. அதேநேரம் நாம் கியாவையும் குற்றம் சொல்ல முடியாது. குறைவான செலவில் காரை உருவாக்கினால் எல்லாவற்றையும் வழங்க முடியாது. இந்த ஆப்பிரிக்க சொனெட் காரில் 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டு இருந்தால், குளோபல் NCAP-இன் மதிப்பெண் அதிகரித்து இருக்கும்.


Click it and Unblock the Notifications