நேரம் பார்த்து விலைகளை உயர்த்தும் மஹிந்திரா! விவசாயிகளின் தலையில் விழுந்த பெரிய இடி!
மஹிந்திரா டிராக்டர்ஸ் (Mahindra Tractors) மற்றும் சுவராஜ் டிராக்டர்ஸ் (Swaraj Tractors) நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து தங்களது டிராக்டர்களின் விலைகளை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. மஹிந்திரா க்ரூப்பின் கீழ் செயல்படும் இந்த இரு டிராக்டர் நிறுவனங்கள் எதற்காக இந்த விலை அதிகரிப்பைக் கொண்டு வருகின்றன என்பதை பற்றியும், இந்த புதிய விலை உயர்வு எப்போதில் இருந்து அமலுக்குவர உள்ளன என்பதை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவின் முன்னணி டிராக்டர் நிறுவனங்களாக விளங்கும் மஹிந்திரா டிராக்டர்ஸ் மற்றும் சுவராஜ் டிராக்டர்ஸின் டிராக்டர்கள் இந்தியாவின் தொழில்துறையிலும், வேளாண் துறையிலும் முக்கிய பங்காற்றி வருகின்றன. குறிப்பாக சுவராஜ் டிராக்டர்ஸ் ஆனது 1974ஆம் ஆண்டிலேயே நிறுவப்பட்ட நாட்டின் முதல் உள்நாட்டு டிராக்டர் உற்பத்தி நிறுவனம் ஆகும்.

பஞ்சாப்பை சேர்ந்த சுவராஜ் டிராக்டர்ஸ் நிறுவனத்தின் 15 எச்பி முதல் 65 எச்பி வரையிலான டிராக்டர்கள் நாட்டின் பல பகுதிகளில் இயங்குகின்றன. குறிப்பாக, வட இந்தியாவில் சுவராஜ் டிராக்டர்களுக்கான மார்க்கெட் பெரியதாக உள்ளது. அதேநேரம், தென்னிந்தியாவில் மஹிந்திரா டிராக்டர்ஸ் நிறுவனத்திற்கு பெரிய அளவிலான மார்க்கெட் உள்ளது.
இதன் மூலமாக, இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் முன்னணி டிராக்டர் பிராண்ட் ஆக மஹிந்திரா டிராக்டர்ஸ் விளங்குகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து 74 எச்பி-க்கும் அதிகமாக ஆற்றல்மிக்க டிராக்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவ்வாறு மஹிந்திரா க்ரூப்பின் கீழ் செயல்படும் முன்னணி நிறுவனங்களாக இருப்பினும் இந்த இரு நிறுவனங்களும் தங்களது டிராக்டர்களின் விலைகளை அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

இதில் முதலாவதாக, மஹிந்திரா டிராக்டர்களின் விலைகள் ஏப்ரல் 8ஆம் தேதியான இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இந்த விலை அதிகரிப்பானது டிராக்டர்களின் மாடல்கள் மற்றும் நாட்டின் மாநிலங்களை பொறுத்து கொண்டுவரப்படுவதாக மஹிந்திரா டிராக்டர்ஸ் அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த விலை உயர்வானது எந்த அளவிற்கு, அதாவது எத்தனை சதவீதத்திற்கு இருக்கும் என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.
டிராக்டர் போன்ற வேளாண் கருவிகளை உற்பத்தி செய்வதில் தொடர்ந்து அதிகரித்துவரும் செலவுகளினால் இந்த விலை உயர்வை கொண்டுவருவதாக மஹிந்திரா டிராக்டர்ஸ் தெரிவித்துள்ளது. மறுப்பக்கம், சுவராஜ் டிராக்டர்ஸ் நிறுவனம் ஆனது இந்த புதிய விலை உயர்வை வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி முதல் அமலுக்கு கொண்டுவருவதாக அறிவித்துள்ளது.
சுவராஜ் டிராக்டர்ஸ் நிறுவனமும் டிராக்டர்களை உற்பத்தி செய்வதற்கான பாகங்களின் விலை அதிகரிப்பையும், போக்குவரத்து செலவுகளையும் தான் இந்த விலை உயர்வுக்கு காரணமாக சுட்டிக் காட்டியுள்ளது. அதேபோல், இந்த விலை உயர்வானது டிராக்டர் மாடல்கள் மற்றும் மாநிலத்தை பொறுத்து இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
சுவராஜ் டிராக்டர்ஸ் நிறுவனமும் இந்த விலை உயர்வானது எந்த அளவிற்கு இருக்கும் என்பதை தெரிவிக்கவில்லை. மஹிந்திரா குழுமத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால், 1945ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே துவங்கப்பட்ட இந்த குழுமம் தற்சமயம் இவ்வாறு வேளாண் சார்ந்த கருவிகள் மற்றும் வாகனங்கள் மட்டுமின்றி, கார்கள், எரிசக்தி ஆற்றல், பொருளாதார சேவைகள் என பல துறைகளில் செயல்பட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா மற்றும் சுவராஜ் டிராக்டர்களுக்கு இந்தியா முழுவதும் சிறப்பான வரவேற்பு உள்ளது. இருப்பினும் வேறு வழியில்லாமல் இந்த விலை உயர்வை கொண்டுவருகின்றன. இதனை சமாளிக்கும் விதமாக டிராக்டர்களுக்கு குறுகிய காலத்திற்கு சலுகைகள் அறிவிக்கப்படலாம். சுவராஜ் டிராக்டர்களின் விலைகள் ஏப்ரல் 21ஆம் தேதியில் இருந்துதான் அதிகரிக்கப்பட உள்ளதால், அதற்கு முன்னதாக குறைந்த விலையில் சுவராஜ் டிராக்டர்களை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம் ஆகும்.


Click it and Unblock the Notifications








