இந்தியாவே தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய காரின் விற்பனை நிறுத்தம்! அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்!
இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் கார்களில் (Electric Cars) ஒன்று மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6). இதன் லிமிடெட் எடிசன் (Limited Edition) மாடல் பேட்மேன் எடிசன் (Batman Edition) என்ற பெயரில் கடந்த 2025ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
லிமிடெட் எடிசன் என்பதால், 999 பேருக்கு மட்டுமே மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக முன்பதிவு தொடங்கிய 135 வினாடிகளிலேயே, அதாவது 2 நிமிடம் மற்றும் 15 வினாடிகளிலேயே, 999 மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் மாடல்களும் விற்பனையாகி விட்டன.

எனவே மஹிந்திரா நிறுவனம் பிஇ 6 பேட்மேன் எடிசன் மாடலை மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்தது. இதனை ஏற்று கொண்ட மஹிந்திரா நிறுவனம் 2வது பேட்ஜ் பேட்மேன் எடிசன் மாடலை வெகு சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வந்தது.
இதற்கு ஒரு பக்கம் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், முதல் பேட்ஜ் உரிமையாளர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. லிமிடெட் எடிசன் என கூறி விட்டு மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்வது சரியான நடைமுறை கிடையாது என முதல் பேட்ஜ் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கு மத்தியில் 2வது பேட்ஜ் ஆக விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட 999 மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் கார்களும் வெறும் 7 நிமிடங்களிலேயே விற்பனையாகி விட்டன. இதை தொடர்ந்து 2வது பேட்ஜ் பிஇ 6 பேட்மேன் எடிசன் கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளை மஹிந்திரா நிறுவனம் தற்போது தொடங்கியுள்ளது.
அத்துடன் இனிமேல் பிஇ 6 பேட்மேன் எடிசன் கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படாது எனவும் மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்த காரணத்தால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த சூழலில், பிஇ 6 பேட்மேன் எடிசன் கார்களின் உற்பத்தி நிறுத்தப்படுவதாக மஹிந்திரா நிறுவனம் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எனவே இந்திய சாலைகளில் ஒட்டுமொத்தமாக 1,998 மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் கார்கள் மட்டுமே இருக்கும். மஹிந்திரா நிறுவனம் பிஇ 6 பேட்மேன் எடிசனின் முதல் பேட்ஜ் விலையை 27.79 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்திருந்தது. அதே நேரத்தில் 2வது பேட்ஜ் விலை 28.49 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் மாடலில் 79 kWh பேட்டரி தொகுப்பு (Battery Pack) பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 683 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் கருதப்படுகிறது. எனவேதான் அதற்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது விற்பனை நிறுத்தப்பட்டிருப்பதன் மூலம், அதன் தனித்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் காரின் தற்போதைய உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய விஷயமாகவே இருக்கும். ஆனால் எதிர்காலத்தில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், வாங்கி விடலாம் என நினைத்து கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு இது நிச்சயம் கவலையை ஏற்படுத்த கூடிய விஷயமாகவே இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








