வெறும் ஏழே நிமிடங்களில் விற்று தீர்ந்த இந்திய நிறுவன கார்! இனி டொனால்டு ட்ரம்ப்பே ஆசப்பட்டாலும் வாங்க முடியாது
கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி, மஹிந்திரா நிறுவனம் தனது பிஇ 6 எலெக்ட்ரிக் காரின் பேட்மேன் எடிசனை (Mahindra BE 6 Batman Edition) விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அப்போது இது லிமிடெட் எடிசன் (Limited Edition) மாடல் என மஹிந்திரா நிறுவனம் அறிவித்தது. அதாவது 300 பேருக்கு மட்டுமே மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த காரணத்தால், பின்னர் இந்த எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. அதாவது 300 பேருக்கு பதிலாக 999 பேருக்கு மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் கார்கள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. முன்பதிவுகள் தொடங்கப்படுவதற்கு 2 நாட்கள் முன்னதாக, அதாவது கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதை தொடர்ந்து, மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் மாடலுக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி தொடங்கப்பட்டன. ஆனால் முன்பதிவு தொடங்கப்பட்ட வெறும் 135 வினாடிகளிலேயே (2 நிமிடங்கள் மற்றும் 15 வினாடிகள்), 999 மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் மாடல்களும் விற்பனையாகி விட்டன.
இதனால் வாடிக்கையாளர்கள் பலரும் அதிருப்தியடைந்தனர். எனவே மஹிந்திரா நிறுவனம் பிஇ 6 பேட்மேன் எடிசன் மாடலை மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என சமூக வலை தளங்களில் அவர்கள் கோரிக்கை எழுப்பினர். இதற்கு செவி சாய்த்த மஹிந்திரா நிறுவனம், பிஇ 6 பேட்மேன் எடிசன் மாடலை, கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

கடந்த 2025ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டபோது, மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் மாடலின் விலை 27.79 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இம்முறை 28.49 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இம்முறை 70 ஆயிரம் ரூபாய் அதிகம். இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
முன்னதாக மஹிந்திரா நிறுவனம் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்த பிஇ 6 பேட்மேன் எடிசன் மாடலுக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள், இன்று (மார்ச் 10) காலை 11 மணிக்கு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சரியாக இன்று காலை 11 மணிக்கு, மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் மாடலுக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
முன்பை போலவே இம்முறையும் மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் மாடலுக்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் முன்பை போலவே இம்முறையும் 999 பிஇ 6 பேட்மேன் எடிசன் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அவை அனைத்தும் இன்று காலை முன்பதிவு தொடங்கப்பட்ட வெறும் 7 நிமிடங்களிலேயே விற்பனையாகி விட்டன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நல்ல வரவேற்பு கிடைத்துள்ள போதிலும், பிஇ 6 பேட்மேன் எடிசன் மாடலை மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்த காரணத்தால், மஹிந்திரா நிறுவனம் தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கி கொண்டுள்ளது. அதாவது நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி இது லிமிடெட் எடிசன் மாடல் ஆகும். இது போன்ற லிமிடெட் எடிசன் மாடல்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்படுவதால், அவை மிகவும் அரிதானவையாக இருக்கும்.
இந்த 'அரிது' என்ற காரணத்திற்காகவே லிமிடெட் எடிசன் மாடல்களை வாங்க பலரும் போட்டி போடுகின்றனர். மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் மாடல் கடந்த 2025ம் ஆண்டில் முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட போதும் அதுதான் நடந்தது. ஆனால் லிமிடெட் எடிசன் எனக்கூறி விட்டு, மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் மாடலை மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பதால், அதை கடந்த 2025ம் ஆண்டில் வாங்கியவர்கள் தற்போது அதிருப்தியடைந்துள்ளனர்.
அத்துடன் இது 'நம்பிக்கை துரோகம்' எனவும், 'மார்க்கெட்டிங் யுக்தி' எனவும் மஹிந்திரா நிறுவனத்தை சமூக வலை தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். எனவே மஹிந்திரா நிறுவனத்திற்கு இது தர்மசங்கடமான சூழலாகவே இருக்கும் என நாங்கள் நினைக்கிறோம். உண்மையில் மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் மீண்டும் விற்பனைக்கு வர வேண்டும் என அதன் ரசிகர்கள் எழுப்பிய கோரிக்கைகளை கண் கூடாக காண முடிந்தது.
இவை எல்லாவற்றுக்கும் ஒரு படி மேலே போய், மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் மீண்டும் விற்பனைக்கு வர வேண்டும் என 'மனு' போட்ட சம்பவங்கள் எல்லாம் நடந்தன. ஆனால் அந்த கோரிக்கையை ஏற்று எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை இப்படி ஒரு கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். எனவேதான் இதை மஹிந்திரா நிறுவனத்திற்கு தர்மசங்கடமான சூழல் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








