2 நிமிடங்களில் விற்று தீர்ந்த காரை ரீ-லான்ச் பண்ண சொல்லி மனு! மக்களின் பாசத்தால் திணறும் இந்திய நிறுவனம்!
முன்பெல்லாம் உங்களது ஏதாவது ஒரு கோரிக்கை நிறைவேற வேண்டும் என்றால், அதனுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்திக்கவே நீங்கள் போராட வேண்டியதிருக்கும். குறிப்பாக அரசு அதிகாரிகள் என்றால் சொல்லவே வேண்டாம். ஒரு சில அரசு அதிகாரிகளை நேரில் சந்திப்பதே குதிரை கொம்பு.
அதையும் மீறி அவர்களை சந்தித்து விட்டாலும் கூட, மனு அளித்து மனு அளித்தே காலம் உருண்டோடி விடும். மனு எழுதி மனு எழுதி உங்கள் கைககள் தளர்ந்து போயிருக்குமே தவிர, உங்களுடைய கோரிக்கை நிறைவேறியிருக்குமா? என்பது சந்தேகம்தான். ஆனால் தற்போது காலம் மாறி விட்டது.

உங்களது கோரிக்கைகளை பொது வெளியில் எழுதும் இணையதளங்கள் வந்து விட்டன. இதில் ஒன்றுதான் change.org தளம். இந்த தளத்தில் நீங்கள் உங்கள் கோரிக்கையை மனுவாக எழுதலாம். அது நியாயமாக இருக்கும்பட்சத்தில், பலரும் ஆதரவு தெரிவித்து கையெழுத்திடுவார்கள். இதன் விளைவாக உங்கள் கோரிக்கை, சம்பந்தப்பட்ட நபர்களை சென்றடைந்து, கூடிய விரைவில் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்த தளத்தில் பல ஆயிரக்கணக்கான மக்களின் கோரிக்கைகள் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளன. இந்த வரிசையில் வெற்றியடைந்தே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் Pamela Nygma என்பவர் எழுப்பியுள்ள ஒரு கோரிக்கை தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் (Mahindra BE 6 Batman Edition) மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அவர் எழுப்பியுள்ளார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் கார்களில் (Electric Cars) ஒன்று மஹிந்திரா பிஇ 6. இதன் பேட்மேன் எடிசன் மாடலை மஹிந்திரா நிறுவனம் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது ஒரு லிமிடெட் எடிசன் (Limited Edition) மாடல் ஆகும். அதாவது குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே உற்பத்தி செய்யப்படும்.
மஹிந்திரா நிறுவனம் முதலில் 300 பிஇ 6 பேட்மேன் எடிசன் கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் என அறிவித்திருந்தது. ஆனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்த காரணத்தால், 999 பிஇ 6 பேட்மேன் எடிசன் கார்கள் உற்பத்தி செய்யப்படும் என மஹிந்திரா நிறுவனம் தரப்பில் உற்பத்தி எண்ணிக்கை உயர்த்தி அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் முன்பதிவு தொடங்கப்பட்ட வெறும் 2 நிமிடங்கள் மற்றும் 15 வினாடிகளிலேயே, அதாவது வெறும் 135 வினாடிகளிலேயே, 999 மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் கார்களும் விற்று தீர்ந்து விட்டன. எனவே வாங்கலாம் என்ற ஆசையோடு இருந்த நிறைய பேருக்கு, மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் கிடைக்கவில்லை.
இதனால் விரக்தியடைந்த ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களில், Pamela Nygma என்பவரும் ஒருவர். எனவேதான் பிஇ 6 பேட்மேன் எடிசன் காரை மஹிந்திரா நிறுவனம் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அவர் தற்போது எழுப்பியுள்ளார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதன் சுருக்கம் பின்வருமாறு:
135 வினாடிகள் என்பது ஒரு டீ-ஷர்ட் வாங்க கூட போதாது. மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் என்பது வெறும் வாகனம் மட்டுமல்ல. அது எங்களின் உணர்வுடன் கலந்த ஒரு விஷயம். மஹிந்திரா நிறுவனம் எப்போதுமே தனது விசுவாசமான வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்டு வருகிறது. இந்த வரிசையில், பிஇ 6 பேட்மேன் எடிசன் காரை ரீ-லான்ச் செய்ய வேண்டும் என்ற என்னுடைய கோரிக்கையையும் மஹிந்திரா நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த கோரிக்கைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே இந்த கோரிக்கைக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் கையெழுத்திட்டுள்ளனர். அதாவது மஹிந்திரா நிறுவனம் பிஇ 6 பேட்மேன் எடிசன் காரை மறுபடியும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என பலரும் விரும்புகின்றனர். அவர்களின் கோரிக்கையை மஹிந்திரா நிறுவனம் நிறைவேற்றுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-showroom Price) 27.79 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. மிகவும் விலை உயர்ந்தது என்றாலும் கூட, பேட்மேனை மனதில் வைத்து உருவாக்கி, வணிக ரீதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உலகின் முதல் எஸ்யூவி ரக கார் இதுதான்.
எனவே மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசனை ரீ-லான்ச் செய்ய வேண்டும் என வாடிக்கையாளர்கள் ஆவலுடன் வலியுறுத்துவதில் நியாயம் இருக்கவே செய்கிறது. இருப்பினும் பிஇ 6 பேட்மேன் எடிசனை ரீ-லான்ச் செய்யும் விஷயத்தில், உற்பத்தி போன்ற அம்சங்களில், மஹிந்திரா நிறுவனம் முன் இருக்கும் சவால்களை நாம் புரிந்து கொள்வது அவசியம். ஆனால் மஹிந்திரா நிறுவனம் பிஇ 6 பேட்மேன் எடிசனை ரீ-லான்ச் செய்தால், நன்றாக இருக்கும் என்றுதான் நாங்களும் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








