வெறும் 2 நிமிடங்களில் விற்று தீர்ந்த கார் மறுபடியும் விற்பனைக்கு வருது! மக்களின் பாசத்தை ஏற்ற இந்திய நிறுவனம்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் கார்களில் (Electric Cars) ஒன்று மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6). பேட்மேன் எடிசன் (Batman Edition) என்ற பெயரில் இந்த எலெக்ட்ரிக் காரின் லிமிடெட் எடிசன் மாடல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இது லிமிடெட் எடிசன் மாடல் என்பதால், முதலில் 300 பேருக்கு மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் 999 பேருக்கு விற்பனை செய்யப்படும் என மாற்றி அறிவிக்கப்பட்டது. வெறும் 999 மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் என்பதால், இதை வாங்க வாடிக்கையாளர்கள் மத்தியில் மிக கடுமையான போட்டி நிலவியது.

இதன் காரணமாக முன்பதிவுகள் (Bookings) தொடங்கிய வெறும் 2 நிமிடங்கள் மற்றும் 15 வினாடிகளிலேயே, அதாவது வெறும் 135 வினாடிகளிலேயே, 999 மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் கார்களும் விற்று தீர்ந்து விட்டன. இது முன்பதிவு செய்ய முடியாத வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக மஹிந்திரா நிறுவனம் பிஇ 6 பேட்மேன் எடிசனை மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை மஹிந்திரா நிறுவனம் நிறைவேற்ற வேண்டும் என சமூக வலை தளங்களில் மனுக்கள் கூட எழுதப்பட்டன. இது தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் செய்தி வெளியிட்டிருந்தது கூட உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த சூழலில், வாடிக்கையாளர்களின் கோரிக்கைக்கு மஹிந்திரா நிறுவனம் செவி சாய்த்துள்ளது. ஆம், பிஇ 6 பேட்மேன் எடிசனை மறுபடியும் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் 'Add Your Preference' விண்டோ தற்போது திறக்கப்பட்டுள்ளது.
இன்றில் இருந்தே விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் இதில் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசனுக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் வரும் மார்ச் 10ம் தேதி காலை 11 மணிக்குதான் தொடங்கவுள்ளன. இம்முறை ஒரு நாள் முழுவதும் இந்த புக்கிங் விண்டோ திறந்திருக்கும். எனவே வாடிக்கையாளர்கள் ஒரு நாள் முழுவதும் மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசனை முன்பதிவு செய்து கொள்ள முடியும்.
அதே நேரத்தில் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசனை டெலிவரி (Deliveries) செய்யும் பணிகள் வரும் ஏப்ரல் 10ம் தேதியில் இருந்து தொடங்கப்படவுள்ளன. மஹிந்திரா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான பத்திரிக்கை செய்தியில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மஹிந்திரா பிஇ 6 எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டான பேக் த்ரீ வேரியண்ட் (Pack Three Variant) அடிப்படையில், பேட்மேன் எடிசன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், 79 kWh பேட்டரி தொகுப்பு (Battery Pack) வழங்கப்பட்டிருக்கும். இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 683 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) என்பதில் சந்தேகம் இல்லை. அத்துடன் 175 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், இந்த பேட்டரியை, வெறும் 20 நிமிடங்களில், 20 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும். அத்துடன் லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), 7 ஏர்பேக்குகள் போன்ற வசதிகளையும், மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் கொண்டிருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் காரின் விலை 28.49 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பு என்பதால், இம்முறையும் மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் காருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என கருதப்படுகிறது. சாலையில் தங்களது கார் தனித்து தெரிய வேண்டும் என விரும்பும் வாடிக்கையாளர்கள், மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசனை தேர்வு செய்யலாம்.


Click it and Unblock the Notifications








