வாங்குறதுக்கு குடுத்து வெச்ச 999 குடும்பங்களில் இவங்களும் ஒருத்தவங்க! ஷோரூமில் களைக்கட்டிய கொண்டாட்டம்!
மஹிந்திரா (Mahindra) நிறுவனம், 2024ஆம் ஆண்டின் இறுதியில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகப்படுத்திய எலெக்ட்ரிக் கார் (Electric Car), பிஇ 6 (BE 6) ஆகும். முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில், மஹிந்திராவின் புதிய லோகோ உடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த எலெக்ட்ரிக் காரின் முதலாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக கடந்த 2025 நவம்பரில் பிஇ 6 ஃபார்முலா இ எடிஷன் (Formula e Edition) காரை மஹிந்திரா அறிமுகப்படுத்தியது.
இந்த நிலையில், இந்த ஸ்பெஷல் பிஇ 6 எடிஷன் காரின் டெலிவரிகள் (Deliveries) மூன்று மாத காத்திருப்புக்குப் பிறகு தற்போது இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. சமீபத்தில், இந்தியாவின் முதல் மஹிந்திரா பிஇ 6 ஃபார்முலா இ எடிஷன் காரின் டெலிவரி தொடர்பான வீடியோ (Video) ஒன்று 'இட்ஸ் மகேஷ் ரதி' (Its Mahesh Rathi) என்கிற இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், மஹிந்திரா டீலர்ஷிப் ஷோரூமுக்கு வரும் ஒரு குடும்பத்தினர், அங்கே தாங்கள் டெலிவிரி பெறவிருந்த சிவப்பு நிற பிஇ 6 ஃபார்முலா இ எடிஷன் காரைச் சுற்றி வந்து ஆர்வத்துடன் பார்வையிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, குடும்பத்தின் இளைய உறுப்பினர் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார். அவர் தனது தந்தையுடனும் மற்ற உறவினர்களுடனும் காரின் அம்சங்கள் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்த இளைஞரின் தந்தை டீலர்ஷிப் ஊழியர்களுடன் உரையாடிய பின், காரின் சாவியுடன் திரும்பி வந்து, சாதாரணமாக தனது மகனிடம் அதைக் கொடுத்தார். இந்த எதிர்பாராத தருணம், இளைஞரை அளவில்லாத மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. தந்தை சாவியை கொடுத்தவுடன், இந்த அற்புதமான தருணத்தைக் கொண்டாட வண்ணக் காகிதங்கள் (confetti) வெடிக்கப்பட்டன.

மஹிந்திரா பிஇ 6 ஃபார்முலா இ எடிஷன் கடந்த ஆண்டு நவம்பரில் அதிகாரப்பூர்வமாக வெளியானது. ரூ.23.69 லட்சம் என்கிற ஆரம்ப விலையுடன் அறிமுகமான இந்தச் சிறப்பு எடிஷன் மாடல், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பிஇ 6 எலெக்ட்ரிக் காரின் ஃபார்முலா இ எடிஷன் எஃப்.இ2 (FE2) மற்றும் எஃப்.இ3 என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது.
மேலே கூறப்பட்ட ரூ.23.69 லட்சம் ஆனது எஃப்.இ2 வேரியன்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். எஃப்.இ3 வேரியன்ட் சற்று விலை அதிகமாக, ரூ.24.49 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது. பிஇ 6 ஃபார்முலா இ எடிஷன் காருக்கான முன்பதிவுகள் ஜனவரி 14 அன்று தொடங்கப்பட்டன.
ஃபார்முலா இ பந்தயங்களில் பயன்படுத்தப்படும் கார்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பிஇ 6 ஃபார்முலா இ எடிஷன் காரின் முன்பக்கத்தில் வட்ட வடிவில், இரு விதமான பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஃபயர்ஸ்டார்ம் ஆரஞ்சு நிற ஹைலைட்களுடன் கூடிய வலிமையான முன்பக்க பம்பர் மற்றும் பொனெட்டில் பன்னிரண்டு கோடுகள் கொண்ட தனித்துவமான கிராஃபிக்ஸ் ஆகியவை இதன் தனித்துவமான தோற்றத்திற்கு காரணமாக அமைகின்றன.
எஃப்.இ2 ஆனது 19-அங்குல அலாய் சக்கரங்களுடனும், எஃப்.இ3 பெரிய 20-அங்குல அலாய் சக்கரங்களுடனும் கிடைக்கிறது. உட்புறத்தில், ஆரஞ்சு நிறத் தீம் கொண்ட இருக்கைகள், வெளியே தெரியும் வகையிலான கதவுப் பேனல்கள் மற்றும் ரேஸ் கார் பாணி ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் போன்ற அம்சங்கள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபார்முலா இ எனப்படும் எலெக்ட்ரிக் கார் பந்தயங்களில் மஹிந்திரா நிறுவனத்தின் வெற்றியைப் போற்றும் வகையில், இந்தச் சிறப்பு பதிப்பு வெளியிடப்படப்பட்ட நிலையில், அது தற்போது சாலைகளை வந்தடைய துவங்கியுள்ளன. இருப்பினும், 999 யூனிட்கள் மட்டுமே ஃபார்முலா இ எடிஷன் உற்பத்தி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த லிமிடெட் எடிசன் எலெக்ட்ரிக் காரை சாலையில் காண்பது கொஞ்சம் அரிதாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications








