வெறும் ரூ.11.45 லட்சத்தில் மஹிந்திரா பிஇ6 ஸ்போர்டெக் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... AI வசதிகளுடன் வேற லெவல்!!
யாரும் எதிர்பாராத விலையில் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட மஹிந்திராவின் பிஇ6 எலெக்ட்ரிக் எஸ்யூவியின் ஸ்போர்டெக் என்ற புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்டீரியரில் டிசைன் மாற்றங்கள், ஏஐ தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த காரின் பேட்டரிக்கு சந்தா திட்டமும் கொடுக்கப்படுகிறது. இதனால், ரூ.11.45 லட்சம் ஆரம்ப விலையிலேயே இந்த காரை வாங்கும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.
தற்போது விற்பனையில் உள்ள மஹிந்திரா பிஇ6 எலெக்ட்ரிக் காரைவிட இந்த புதிய ஸ்போர்டெக் மாடலானது அதிக பிரிமீயம் அம்சங்களுடன் வந்துள்ளது. தவிரவும், 8 வேரியண்ட்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேக்1, பேக்2, பேக்3, பேக்3+, பேக்4, லான்ச் எடிசன், பேக் எஃப்இ மற்றும் எஃஃப்இ4 என பல வேரியண்ட்டுகளில் வாடிக்கையாளர்களின் தேர்வுக்கு வழங்கப்படுகிறது.

இந்த புதிய மாடலானது 12 விதமான வண்ணத் தேர்வுகளிலும் கிடைக்கும். இதில், ஏற்கனவே ஸ்டான்டர்டு மாடலில் வழங்கப்படும் 8 வண்ணத் தேர்வுகள் உள்பட ராஸோ இம்பல்ஸோ, ரூபி வெல்வெட், க்ராஃபைட் ஸ்டோர்ம், ஃபயர்ஸ்டோர்ம் ஆரஞ்ச் சாட்டீன் என புதிதாக 4 வண்ணத் தேர்வுகளும் கொடுக்கப்படுகின்றன.
மஹிந்திரா பி6 ஸ்போர்டெக் மாடலின் மிக முக்கிய விஷயமாக இதன் டேஷ்போர்டு அமைப்பை குறிப்பிடலாம். சென்டர் கன்சோல் டிசைன் மாறி இருப்பதுடன், பேக்2 முதல் மூன்று தொடுதிரை அமைப்புடன் கூடிய டேஷ்போர்டு இடம்பெற்றுள்ளது. இதில், இரண்டு ஓட்டுனரின் பயன்பாட்டிற்காகவும், மூன்றாவது தொடுதிரை அமைப்பு முன் இருக்கை பயணிக்கானதாகவும் இருக்கும். அதேநேரத்தில், ஃப்ரீடம் எடிசனை தேர்வு செய்பவர்களுக்கு ஸ்டான்டர்டு மாடலில் உள்ளது போன்று இரண்டு டிஜிட்டல் டிஸ்ப்ளே அமைப்புடன்தான் கிடைக்கும்.

மஹிந்திரா பிஇ6 ஸ்போர்டெக் மாடலில் ஓட்டுனர் மற்றும் பயணிகளுக்காக 6 விதமான டெக் சூட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. டெக் டாக் என்ற வசதியானது கூகுள் ஜெமினையுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் வழங்கப்பட்டுள்ள 17 ஏஐ ஏஜென்ட்டுகள் மூலமாக ஏராளமான வசதிகளை கட்டுப்படுத்த முடியும். மேலும், குரல்வழி கட்டளை வசதியும் முக்கியமானதாக இருக்கிறது.
டெக் ப்ளே என்ற வசதி மூலமாக கார் கேமிங், கரோக்கே, டால்பி அட்மாஸ் உள்ளிட்ட பொழுதுபோக்கு வசதிகளை பெறும் வாய்ப்பு கிடைக்கும். டெக் டிரைவ் மூலமாக காரின் இயக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. ஃபார்முலா இ ஃப்ரீடம் எடிசனில் ஆக்சிலரேசன் பூஸ் மோடும் உள்ளது. இதன்மூலமாக இந்த கார் 0 -100 கிமீ வேகத்தை வெறும் 6.44 வினாடிகளில் எட்டும் வல்லமையை பெறும் என்று மஹிந்திரா தெரிவிக்கிறது.
இந்த காரின் பேட்டரி பேக், மின் மோட்டார்களில் எந்த மாற்றங்கள் இல்லை. ஸ்டான்டர்டு மாடலில் வழங்கப்படும் அதே பேட்டரி பேக்குகள்தான் உள்ளன. 59kWh, 70kWh மற்றும் 79kW ஆகிய மூன்றுவிதமான பேட்டரி தேர்வுகளில் கிடைக்கும்.
இந்த காரின் விலைதான் முக்கிய ஹைலைட்டாக குறிப்பிட வேண்டும். ஆம், இதன் 59kWh பேட்டரி கொண்ட மாடலை Baas என்ற சந்தா திட்டத்தின் மூலமாக வாங்க முடியும். சந்தா திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த 59kWh பேட்டரி பேக் மாடலை ரூ.11.45 லட்சம் என்ற மிக சவாலான எக்ஸ்ஷோரூம் விலையில் வாங்கும் வாய்ப்பு உள்ளது. இந்த சந்தா திட்டம் ஸ்போர்டெக் மாடலின் பேக்2 என்ற அடுத்த வேரியண்ட்டுக்கும் உள்ளது. அதன் விலை ரூ.12.95 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கு மேல் விலை கொண்ட வேரியண்ட்டுகள் மற்றும் உயர்வகை பேட்டரி கொண்ட மாடல்களுக்கு இந்த சந்தா திட்டம் கிடையாது. மேலும், சந்தா திட்டம் வேண்டாம் என்று விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு 59kWh பேட்டரி மாடல் ரூ.19.45 லட்சம் விலையிலும், 70kWh பேட்டரி மாடலுக்கு ரூ.22.95 லட்சம் விலையும், 79kWh பேட்டரி மாடலுக்கு ரூ.24.95 ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய பிஇ6 ஸ்போர்டெக் சீரிஸ் எலெக்ட்ரிக் காரின் தொழில்நுட்ப வசதிகள் பிஇ6 ஸ்டான்டர்டு, எக்ஸ்இவி 9இ, எக்ஸ்இவி 9எஸ் ஆகிய உரிமையாளர்களுக்கும் ஓடிஏ அப்டேட் மூலமாக வழங்கப்பட உள்ளது. வரும் 2027ம் ஆண்டு ஜனவரியில் இந்த அப்டேட்டுகள் கொடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பிஇ6 ஸ்போர்டெக் மாடலை புக்கிங் செய்வோருக்கு வரும் ஆகஸ்ட் 26ந் தேதி முதல் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications