வெண்கல நிற அலங்காரங்களுடன் புதிய மஹிந்திரா பொலிரோ Bold Edition... என்னென்ன புதுசு?
இந்தியாவில் எஸ்யூவி கார் வாங்க நினைப்பவர்கள் மத்தியில் மஹிந்திரா பொலிரோவுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. கம்பீரமான தோற்றம், கரடுமுரடான சாலைகளிலும் சமாளிக்கும் திறன், எளிமையான வடிவமைப்பு எனப் பல காரணங்களால் இந்த கார் பிரபலமாக உள்ளது. இந்நிலையில், வழக்கமான பொலிரோவுக்கு கூடுதல் கவர்ச்சியை சேர்க்கும் வகையில் புதிய பொலிரோ Bold Edition அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய பொலிரோ Bold Edition காரில் வெண்கல நிற அலங்கார அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இது காருக்கு தனித்துவமான தோற்றத்தை வழங்குகிறது. முன்பக்க கிரில், பம்பர் பகுதி மற்றும் பனி விளக்குகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெண்கல நிற வேலைப்பாடுகள் இடம்பெற்றுள்ளன. இதனால் வழக்கமான பொலிரோவுடன் ஒப்பிடும்போது இந்தப் பதிப்பு சற்று வித்தியாசமான தோற்றத்தைப் பெற்றுள்ளது. இருப்பினும், காரின் அடிப்படை வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை.

காரின் பக்கவாட்டுப் பகுதிகளிலும் புதிய அலங்காரங்கள் இடம்பெற்றுள்ளன. ரியர் வியூ மிரர்கள், அலாய் சக்கரங்கள் மற்றும் ரூஃப் ரெயில் உள்ளிட்ட பகுதிகளில் வெண்கல நிற அம்சங்களுடன் காட்சி அளிக்கிறது. பொலிரோவின் வழக்கமான பெட்டி வடிவத் தோற்றத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, இந்த மாற்றங்கள் கூடுதல் கவர்ச்சியை வழங்குகின்றன.
காரின் உட்புறத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கருப்பு நிற லெதரெட் இருக்கைகளில் வெண்கல நிற அலங்காரங்கள் இடம்பெற்றுள்ளன. இருக்கைகளின் ஓரங்கள் மற்றும் தலைப்பகுதிகளில் செய்யப்பட்டுள்ள இந்த வேலைப்பாடுகள் உட்புறத்திற்கு புதிய தோற்றத்தை வழங்குகின்றன. முன்பக்க இருக்கைகளில் பொலிரோ பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனுடன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தரை விரிப்புகளும் வழங்கப்படுகின்றன.

இந்தப் பதிப்பில் ரியர் வியூ கேமராவும் இடம்பெற்றுள்ளது. காரை பின்னோக்கி இயக்கும்போது பின்னால் உள்ள தடைகளைக் கவனிக்க இது உதவும். வண்ண வழிகாட்டுக் கோடுகள் இடம்பெற்றுள்ளதால், குறுகிய இடங்களில் காரை நிறுத்தும்போதும் ஓட்டுனருக்கு உதவியாக இருக்கும். குறிப்பாக, நகர்ப்புறப் போக்குவரத்து நெரிசலில் வாகனத்தை நிறுத்தவும் வெளியே எடுக்கவும் இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்.
புதிய Bold Edition காரில் எஞ்சினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வழக்கமான பொலிரோவில் இடம்பெற்றுள்ள 1.5 லிட்டர், மூன்று சிலிண்டர் டீசல் எஞ்சின்தான் இதிலும் தொடர்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 75 எச்பி பவரையும், 210 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
பொலிரோ Bold Edition என்பது முற்றிலும் புதிய வேரியண்ட்டாக இல்லாமல், கூடுதல் அலங்காரங்கள் மற்றும் வசதிகளைக் கொண்ட தொகுப்பாக அறிமுகமாகியுள்ளது. இதன் விலை மற்றும் எந்தெந்த வேரியண்ட்களில் இந்தத் தொகுப்பு கிடைக்கும் என்பது குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
தற்போதைய மஹிந்திரா பொலிரோ ரூ.8.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய Bold Edition தொகுப்பின் விலை அறிவிக்கப்பட்ட பின்னரே, வழக்கமான மாடலைவிட எவ்வளவு கூடுதல் செலவு ஏற்படும் என்பது தெரியவரும். தோற்றத்தில் தனித்துவத்தையும் கூடுதல் வசதிகளையும் எதிர்பார்க்கும் பொலிரோ வாடிக்கையாளர்களுக்கு இந்தப் புதிய பதிப்பு கவனிக்கத்தக்க தேர்வாக அமையும்.
மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி சத்தமில்லாமல் விற்பனையில் அசத்தி வருகிறது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி மாடல்களில் மஹிந்திரா பொலிரோவும் முக்கியமான இடத்தில் உள்ளது. கடந்த மாதம் மட்டும் 9,710 மஹிந்திரா பொலிரோ எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications


