மாருதி, டொயோட்டா சோலி முடிஞ்சுது.. புதிய திட்டத்துடன் வரும் நிறுவனம்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக தற்போது இந்தியாவில் அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனமாக உருவெடுத்திருக்கிறது மஹிந்திரா. இதுவரை இரண்டாவது இடத்தில் இருந்து வந்த எம்ஜி மோட்டாரை பின்தள்ளி தற்போது அதிக எலெக்ட்ரிக் கார்களை மஹிந்திராவே இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது எலெக்ட்ரிக் கார்களுடன், ஹைபிரிட் கார்களின் மீதும் மஹிந்திரா அதிக கவனம் செலுத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்காலம் எலெக்ட்ரிக் கார்கள் தான் என்று ஓடிக் கொண்டிருக்கும் போது திடீரென ஏன் ஹைபிரிட் பக்கம் வண்டியைத் திருப்ப வேண்டும்? இதற்கு ஒரு காரணங்கள் இல்லை, பல்வேறு காரணங்கள் சேர்ந்து நிறுவனங்களை ஒட்டுமொத்தமாக இந்த முடிவை எடுக்க வைக்கின்றன. மஹிந்திரா மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் பல்வேறு நிறுவனங்கள் ஹைபிரிட் கார்கள் மீது இப்போது தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Mahindra XUV 7XO

எலெக்ட்ரிக் கார்களே இனி எதிர்காலம் என முற்றிலும் புதிதாக INGLO என்ற எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பிற்கான பிளாட்ஃபார்மை 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் உருவாக்கியது மஹிந்திரா. 2028ம் நிதியாண்டில் தங்களது மொத்த வாகன விற்பனையில் 20-30% வரை எலெக்ட்ரிக் கார்களாக இருக்கும் என மதிப்பிட்டிருந்தது மஹிந்திரா. ஆனால் அந்த அளவை எட்ட முடியாத நிலை போல இப்போது இருந்து வருகிறது.

கடந்த 2026ம் நிதியாண்டில் மஹிந்திராவின் மொத்த வாகன விற்பனையில் எலெக்ட்ரிக் கார்களின் அளவு 9% மட்டும் தான். எதிர்பார்த்ததை விட குறைவாகவே மக்கள் எலெக்ட்ரிக் கார்களுக்கு மாறி வருகிறார்கள். இது இந்தியாவில மட்டுமல்ல, உலகளவிலும் தான். இந்திய பயணிகள் வாகன சந்தையில் 4.25% மட்டுமே எலெக்ட்ரிக் கார்களின் பங்காக இருக்கிறது.

Mahindra XEV 9e

ஒரு பக்கம் எலெக்ட்ரிக் வாகனஙகளின் விற்பனை குறைவாக இருக்கும் அதே நேரத்தில், அனைத்து நாடுகளிலும் ஆட்டோமொபைல் மூலம் ஏற்படும் காற்று மாசுபாட்டைத் தடுக்க கடும் மாசுக் காட்டுப்பாட்டு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் அப்படி BS மற்றும் CAFE என விதமான மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. BS விதிமுறைகளானது ஒரு தனிப்பட்ட வாகனத்தில் இருந்து வெளியேறும் மாசு அளவைக் கட்டுப்படுத்துவதற்காக அமல்படுதப்பட்ட விதிமுறையாகும்.

CAFE என்பது ஒரு நிறுவனமாக அது விற்பனை செய்யும் வாகனங்களின் சராசரி காற்று மாசு அளவைக் கட்டுப்படுத்துவதற்கான விதிமுறையாகும். உதாரணத்திற்கு குறிப்பிட்ட கால அளவில் ஒரு நிறுவனம் விற்பனை செய்யும் கார்களின் சராசரி காற்று மாசு அளவு இவ்வளவு தான் இருக்க வேண்டும் என அரசு நிர்ணயம் செய்து விடும். அந்தக் காலக்கட்டத்தில் ஒரு நிறுவனம் அதிகப்படியான எலெக்ட்ரிக் கார்களையும், குறைவான எரிபொருள் கார்களையும் விற்பனை செய்திருந்தால் அந்த நிறுவனத்தின் சராசரி காற்று மாசு அளவு குறைவாகவே இருக்கும்.

இதுவே அதிக எரிபொருள் கார்களையும், குறைவான எலெக்ட்ரிக் கார்களையும் விற்பனை செய்திருந்தால் சராசரி அளவு அதிகமாக இருக்கும். இதன் மூலமாக நிறுவனங்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்று குறைவான காற்று மாசுவை வெளியிடக்கூடிய வாகனங்களை விற்பனை செய்ய முன்வர வேண்டும் என்பது தான் திட்டம்.

மேலே கூறியது போல எலெக்ட்ரிக் வாகனங்கள் குறைவாக விற்பனையாகும் நிலையில், எரிபொருள் கார்களை தொடர்ந்து அதிகளவில் நிறுவனங்களால் விற்பனை செய்ய முடியாது. எனவே தான் எரிபொருள் கார்களை விட குறைவான காற்று மாசுவை வெளியிடும் வகையில் ஹைபிரிட் கார் மாடல்களின் உருவாக்கத்தில் நிறுவனங்கள் ஈடுபட விரும்புகின்றன. இதனால் தான் மஹிந்திராவும் ஹைபிரிட் கார் உருவாக்கத்தை திட்டமிட்டு வருகிறது.

தற்போது இரண்டு விதமான ஹைபிரிட் கார்கள் திட்டம் மஹிந்திராவிடம் இருக்கிறது. ஒன்று ரேஞ்சு எக்ஸ்டண்டர் ஹைபிரிட் (Range Extender Hybrid), மற்றொன்று ஸ்ட்ராட் ஹைபிரிட் (Strong Hybrid). இதில் ரேஞ்சு எக்ஸ்டண்டர் ஹைபிரிட் என்பது எலெக்ட்ரிக் காரை ஹைபிரிட்டாக மாற்றும் திட்டமாகும். அதாவது ஒரு எலெக்ட்ரிக் காரில், பெட்ரோல் இன்ஜினைக் கொடுத்து, அந்த பெட்ரோல் இன்ஜினை நேரடியாக காரை இயக்கப் பயன்படுத்தாமல், அதனை ஒரு ஜெனரேட்டர் போலப் பயன்படுத்தி காருக்கான மின்சாரத்தை உருவாக்கி, அதன் மூலம் காரின் எலெக்ட்ரிக் மோட்டார் இயக்கப்படுவது.

இதில் இன்ஜின் சீரான வேகத்தில் ஒரே மாதிரியாக இயங்கினால் போதும். நேரடியாக பெட்ரோல் இன்ஜினில் ஓடும் போது அதிக பெர்ஃபாமன்ஸ் வேண்டுமென்றால் கூடுதல் எரிபொருள் செலவாகும். குறைவான வேகம் என்றால் குறைவான எரிபொருளே செலவாகும். ஆனால் எலெக்ட்ரிக் கார்களில் ஜெனரேட்டர் போல செயல்படும் பெட்ரோல் இன்ஜினானது சீராக மிகவும் குறைவான வேகத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயங்கினால் போதும். எலெக்ட்ரிக் மோட்டாரை காரின் பெர்ஃபாமன்ஸை முடிவு செய்யப் போகிறது. இதனால் குறைவான எரிபொருள் செலவு, குறைவான காற்று மாசு.

இரண்டாவது ஸ்ட்ராங் ஹைபிரிட் மாடல். இதனைப் பற்றி தனியாகக் கூற வேண்டிதில்லை. ஹோண்டா சிட்டி e:HEV, மாருதி கிராண்டு விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய கார்களில் இந்தத் தொழில்நுட்பம் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு விற்பனையில் இருக்கிறது. எரிபொருள் கார்களை ஹைபிரிட்டாக மாற்றுவது தான் ஸ்ட்ராங் ஹைபிரிட். இதன் மூலம் எலெக்ட்ரிக் மோட்டார் காரின் பெர்ஃபாமன்ஸுக்கு கொஞ்சம் உதவும். இதனால் எரிபொருள் பயன்பாடு குறைந்து, அதிக மைலேஜ் கிடைப்பதுடன், காற்று மாசுவும் குறைவாக இருக்கும்.

தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி மஹிந்திராவின் XEV 9e எலெக்ட்ரிக் காரே ரேஞ்சு எக்ஸ்டண்டர் ஹைபிரிட்டாக முதலில் மாற்றப்படவிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இதற்கு INGLO பிளாட்ஃபார்மை அதிகம் மறுவடிவமைப்பு செய்ய வேண்டும் என்பதால் இதன் வெளியீட்டில் தாமதம் இருக்கலாம் எனத் தெரிகிறது. அதேபோல் XUV 7XO மாடலின் ஸ்ட்ராங் ஹைபிரிட் வெர்ஷனையே 2027ல் மஹிந்திரா முதலில் வெளியிடவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹைபிரிட் வாகனங்களின் வெளியீடு வரவேற்கத்தக்க விஷயம் தான். ஆனால் ஹைபிரிட் வாகனங்களிலும் ஒரு பிரச்சினை இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்களைப் போல அவையும் தொடக்கத்திலேயே அதிக விலையைக் கொண்டிருக்கும். இதுவரை குறைவான விலையில், குறிப்பாக 10 லட்சம் ரூபாய்க்கு உள்ளான அல்லது 15 லட்சம் ரூபாய்க்கு உள்ளான விலையில் விற்பனை செய்யப்படும் ஸ்ட்ராங் ஹைபிரிட் வாகனங்கள் என்று எதுவும் இல்லை.

எலெக்ட்ரிக் வாகனங்களைப் போல ஹைபிரிட் வாகனங்களுக்கு அரசிடம் இருந்து எந்தவிதமான வரிசலுகைகளும் இல்லை. இதனால் இவற்றையும் தற்சமயம் விலையைப் பொறுத்தவரை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு நிகராகவே நாம் கருத வேண்டும். ஆனால் பயன்பாட்டைப் பொறுத்தவரை எலெக்ட்ரிக் மற்றும் எரிபொருள் ஆகிய இரண்டின் நன்மைகளையுமே கிட்டத்தட்ட இந்த ஹைபிரிட் கார்கள் கொண்டிருக்கும். எனவே முழுமையாக எலெக்ட்ரிக்கிற்கு மாறுவதற்கு முன் சில காலத்திற்கு ஹைபிரிட்கள் ஒரு பாலமாக செயல்பட நிறையவே வாய்ப்புகள் இருக்கிறது.

Article Published On: Sunday, May 10, 2026, 13:46 [IST]
English summary
Mahindra developing hybrid cars for india to be launched from 2027
மேலும்... #mahindra #hybrid car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+