டாடா மோட்டார்ஸ்-க்கு இந்த விஷயத்தில் சரியான போட்டினா அது மஹிந்திரா தான்! 1.5 வருடத்தில் மக்கள் கொடுத்த பேரதரவு
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விஷயத்தில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. அதற்கேற்ப மஹிந்திராவின் எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) மற்றும் பிஇ 6 (BE 6) எலெக்ட்ரிக் கார்களுக்கு மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எந்த அளவிற்கு என்றால், அறிமுகம் செய்யப்பட்டு 1.5 வருடங்களில் மஹிந்திராவின் இந்த எலெக்ட்ரிக் ஒரிஜின் எஸ்யூவி கார்களின் விற்பனை 50 ஆயிரம் என்கிற மைல்கல்லை கடந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
முதலில், மஹிந்திரா எலெக்ட்ரிக் ஒரிஜின் எஸ்யூவி கார்கள் (Electric Origin SUV Cars) என்றால் என்ன என்பதை பற்றி பார்ப்போம். மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் கடந்த பல வருடங்களாகவே எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது. 1994ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ரெவா (REVA) என்கிற எலெக்ட்ரிக் கார் நிறுவனத்தை கைப்பற்றி 2010ஆம் ஆண்டிலேயே மஹிந்திரா ரெவாய் (REVAi) எலெக்ட்ரிக் காரை விற்பனை செய்ய ஆரம்பித்தது.

ரெவா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மூலம் கிடைத்த அனுபவத்தில் 2013இல் தனது சொந்த முயற்சியில் இ2ஒ (e2o) என்கிற 2-கதவுகளை மட்டுமே கொண்ட எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தது. அதன்பின், இ2ஒ பிளஸ், இவெரிடோ (eVerito), எக்ஸ்யூவி400 (XUV400), எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி (Mahindra XUV 3XO EV) உள்ளிட்ட புது, புது எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்தாலும், 2024ஆம் ஆண்டில்தான் எலெக்ட்ரிக் கார்களில் தனது வியாபார யுக்திகளை மஹிந்திரா மாற்றியது.
இன்றைய கால இந்திய மக்கள் எதிர்பார்ப்பதை போல், அளவில் பெரியதான எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை மஹிந்திரா எலெக்ட்ரிக் ஒரிஜின் எஸ்யூவி கார்களாக அறிமுகப்படுத்தியது. அவ்வாறான மஹிந்திரா எலெக்ட்ரிக் ஒரிஜின் எஸ்யூவி கார்களாக தற்சமயம் பிஇ 6, எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் கார்களுடன், எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காரும் விற்பனை செய்யப்படுகிறது.

எக்ஸ்இவி 9எஸ் ஆனது விலைமிக்க எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் காருக்கு கிடைத்த நல்ல வரவேற்பை பார்த்து அதன் விலை குறைவான வெர்சனாக மஹிந்திரா அறிமுகப்படுத்தியது ஆகும். இந்த மூன்று கார் மாடல்கள் அடங்கிய மஹிந்திரா எலெக்ட்ரிக் ஒரிஜின் எஸ்யூவி கார்களின் விற்பனை எண்ணிக்கை குறுகிய காலத்தில் 50 ஆயிரம் என்கிற மைல்கல்லை கடந்துள்ளது.
இத்தனைக்கும் பிஇ 6, எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் கார்கள் மட்டும்தான் 2024ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டவை ஆகும்; எக்ஸ்இவி 9எஸ் கிட்டத்தட்ட 1 வருடத்திற்கு பின் சமீபத்தில்தான் கடந்த 2025ஆம் ஆண்டின் நவம்பர் மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டது. 7 இருக்கைகளை கொண்ட விலை குறைவான எலெக்ட்ரிக் எஸ்யூவி காராக எக்ஸ்இவி 9எஸ் விற்பனை செய்யப்படுகிறது.
இவற்றுடன், பிஇ 6 எலெக்ட்ரிக் காரின் பேட்மேன் எடிஷன் (Batman Edition)-ஐயும் வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியாக மஹிந்திரா அறிமுகப்படுத்தியது. இந்த லிமிடெட் எடிஷன் கார் சில வினாடிகளில் விற்று தீர்ந்தது. அதன்பின், ஃபார்முலா இ எடிஷன், சினி லக்ஸ் எடிஷன் என சில ஸ்பெஷல் எடிஷன்கள் மஹிந்திரா எலெக்ட்ரிக் ஒரிஜின் எஸ்யூவி கார்களில் அறிமுகப்படுத்தப்பட்டன.
மஹிந்திராவின் இந்த எலெக்ட்ரிக் ஒரிஜின் எஸ்யூவி கார்களில் 59kWh-இல் இருந்து 79kWh வரையில் திறன் கொண்ட பேட்டரிகள் பொருத்தப்படுகின்றன. மஹிந்திரா பிஇ 6 எலெக்ட்ரிக் கார் குறைந்த விலையில் ரூ.18.90 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்தே கிடைக்கிறது. அதுவே, எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.19.95 லட்சத்தில் இருந்தும், எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.21.90 லட்சத்தில் இருந்தும் துவங்குகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸ், எம்ஜி மோட்டார் நிறுவனங்கள் உடன் ஒப்பிடுகையில், மஹிந்திரா கொஞ்சம் தாமதமாகவே எலெக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் முனைப்பு காட்ட துவங்கியது என்றாலும், குறுகிய காலத்தில் இந்திய எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆரம்பித்துவிட்டது. 50 ஆயிரம் எலெக்ட்ரிக் ஒரிஜின் எஸ்யூவி கார்கள் குறுகிய காலத்தில் விற்பனையானதுதான் இதற்கு சாட்சியாகும்.


Click it and Unblock the Notifications








