679 கிமீ ரேஞ்ச் போதாது... XEV 9S எலெக்ட்ரிக் காரில் Range Extender தொழில்நுட்பம்... மஹிந்திரா திட்டம்?
இந்தியாவில் எலெக்ட்ரிக் எஸ்யூவி சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், நீண்ட தூரப் பயணங்களில் எலெக்ட்ரிக் கார்களுக்கு இருக்கும் முக்கிய சவாலான ரேஞ்ச் கவலையை சமாளிக்க மஹிந்திரா புதிய வழியை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மஹிந்திரா நிறுவனம் தனது INGLO தளத்தில் உருவாக்கப்பட்ட எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு கூடுதல் ரேஞ்ச் வழங்கும் Range Extender தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தற்போது விற்பனையில் உள்ள XEV 9S முழுமையான பேட்டரியில் இயங்கும் தொழில்நுட்பத்துடன் கிடைக்கிறது. இந்த மாடலானது 59kWh, 70kWh மற்றும் 79kWh பேட்டரி ஆப்ஷன்களுடன் விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்சமாக 79kWh பேட்டரி கொண்ட மாடல் 679 கிமீ வரை ரேஞ்ச் வழங்கும் என ARAI சான்று தெரிவிக்கிறது. மேலும், 79kWh பேட்டரியை 180kW DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 20 முதல் 80 சதவீதம் வரை சுமார் 20 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும் வாய்ப்பும் உள்ளது.

இந்த நிலையில், கூடுதல் ரேஞ்ச் பெறுவதற்காக Range Extender என்ற தொழில்நுட்பத்தை எக்ஸ்இவி 9எஸ் காரில் மஹிந்திரா பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்காக சிறிய பெட்ரோல் எஞ்சின் ஒன்று இந்த காரில் பொருத்தப்படும். இந்த பெட்ரோல் எஞ்சின் அவசர சமயங்களில் சக்கரங்களுக்கு பவரை அளிக்கும் என்று நினைக்க வேண்டாம்.
பெட்ரோல் ஜெனரேட்டர் அமைப்பு
இந்த பெட்ரோல் எஞ்சின் மின் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் போல செயல்பட்டு பேட்டரியை சார்ஜ் செய்யும். இதனால், பேட்டரியில் இருக்கும் சார்ஜ் தவிர்த்து, கூடுதலாக இந்த பெட்ரோல் எஞ்சின் மூலமாகவும் பேட்டரி சார்ஜ் பெறும். இதன்மூலமாக அதிக தூரம் பயணிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இது ஹைப்ரிட் கார் தொழில்நுட்பமாக இருக்காது. அதற்கு பதிலாக பேட்டரிக்கு மற்றொரு மூலம் வழியாக மின் ஆற்றல் பெறும் வாய்ப்பாக அமையும்.
முழுமையான பயணிகள் அமர்ந்து செல்லும்போதும், ஓவர்டேக் செய்யும் சூழல்களில் மற்றும் ஏற்றமான சாலைகளில் செல்லும்போது அதிக திறன் தேவைப்படும். அப்போது எலெக்ட்ரிக் கார்களில் பேட்டரியில் இருக்கும் மின் ஆற்றல் வேகமாக தீர்ந்து போகும் வாய்ப்பு இருக்கிறது.
ஆனால், இதுபோன்ற சமயங்களிலும், வாகனம் இயங்கும்போது பெட்ரோல் எஞ்சின் ஜெனரேட்டர் மூலமாக பேட்டரிக்கு மின் ஆற்றல் கிடைப்பதால், அதிக பிக்கப் கிடைப்பதுடன், கூடுதல் ரேஞ்ச் செல்வதற்கும் வழி வகுக்கும். இதனால், ஓட்டுனருக்கும் நம்பிக்கையான ஓட்டுதல் அனுபவத்தை பெற முடியும்.
ரேஞ்ச் பயத்திற்கு தீர்வு
மேலும், இந்த தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய பயன்களில் ஒன்றாக நீண்ட தூர பயணம் செல்லும்போது பேட்டரியில் சார்ஜ் தீர்ந்து விடுமோ என்ற அச்சத்துடன் செல்வதையும் தவிர்க்க முடியும். சில சமயங்களில் வழியில் உள்ள சார்ஜ் ஏற்றும் நிலையங்களில் ஏதேனும் தொழில்நுட்ப பிரச்னையால் செயல்படவில்லை என்றாலும், அதிக நேரம் காத்திருக்க வேண்டி இருக்கும் சூழல்களையும் இந்த ரேஞச் எக்ஸ்டென்டர் தொழில்நுட்பம் மூலம் தவிர்க்கும்.
இதன் மூலம் சார்ஜிங் நிலையங்களை மட்டுமே நம்பியிருக்கும் நிலை ஓரளவு குறையலாம். குறிப்பாக இந்தியாவில் இன்னும் ஃபாஸ்ட் சார்ஜிங் கட்டமைப்பு இன்னமும் எல்லா நெடுஞ்சாலைகளிலும் போதுமான அளவு கிடைக்காத சூழலில், இப்படிப்பட்ட தொழில்நுட்பம் நடைமுறையில் பயனுள்ளதாக இருக்கலாம்.
INGLO தளத்தில் மாற்றங்கள் தேவை
இருப்பினும், XEV 9S ஏற்கனவே முழுமையான எலெக்ட்ரிக் காருக்கான பிரத்யேக கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால், Range Extender அமைப்பை சேர்ப்பது எளிதான மாற்றமாக இருக்காது. பெட்ரோல் எஞ்சின், எரிபொருள் கலன், எரிபொருள் செலுத்தும் அமைப்பு, புகைப்போக்கி அமைப்பு ஆகியவற்றுக்காக வாகனத்தின் கட்டமைப்பில் மாற்றங்கள் தேவைப்படும். அதே நேரத்தில் பாதுகாப்பு மற்றும் எடை வினியோக உத்திகளையும் கவனிக்க வேண்டி இருக்கும்.
இந்த நிலையில், தற்போது Range Extender கொண்ட XEV 9S குறித்து மஹிந்திரா இதுவரை அதிகாரப்பூர்வமாக அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும், இந்த தொழில்நுட்பம் வந்தால் நிச்சயம் வாகன உரிமையாளர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக அமையும். மேலும், குடும்பப் பயன்பாட்டுக்காக வாங்கப்படும் இந்த 7 சீட்டர் எலெக்ட்ரிக் காருக்கு இது நிச்சயம் மிகப்பெரிய தீர்வாகவும் இருக்கும்.


Click it and Unblock the Notifications


