படத்துல காட்ற மாதிரிலாம் இல்ல! மஹிந்திரா கார் தொழிற்சாலையில் ஏகப்பட்ட நல்ல விஷயம் நடக்குது! புதிய சாதனை!
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவிற்கு அருகே உள்ள சஹானில் மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு மஹிந்திரா நிறுவனத்தின் ஐசி இன்ஜின் கார்கள், எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் என மொத்தம் 19 வகையான மாடல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் சஹான் தொழிற்சாலை தற்போது உற்பத்தியில் மிக பிரம்மாண்டமான மைல்கல் ஒன்றை கடந்துள்ளது. மொத்தம் 3 மில்லியன் (30 லட்சம்) வாகனங்கள் உற்பத்தி என்பதுதான் அந்த மைல்கல் ஆகும். சஹான் தொழிற்சாலையில் மஹிந்திரா நிறுவனம் கடந்த 2009ம் ஆண்டுதான் உற்பத்தி பணிகளை தொடங்கியது.

இங்கு முதல் ஒரு மில்லியன் (10 லட்சம்) வாகனங்களை உற்பத்தி செய்வதற்கு 107 மாதங்கள் ஆனது. அதாவது 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான் 1 மில்லியன் வாகனங்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை சஹான் தொழிற்சாலை கடந்தது. இதை தொடர்ந்து 2 மில்லியன் (20 லட்சம்) வாகனங்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை கடக்க சஹான் தொழிற்சாலை 65 மாதங்களை எடுத்து கொண்டது.
அதாவது கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம்தான் 2 மில்லியன் வாகனங்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை சஹான் தொழிற்சாலை கடந்தது. ஆனால் கடைசி 1 மில்லியன் வாகனங்களை உற்பத்தி செய்வதற்கு, அதாவது 20 லட்சத்தில் இருந்து 30 லட்சம் வாகனங்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை எட்டுவதற்கு வெறும் 27 மாதங்கள் மட்டுமே தேவைப்பட்டுள்ளது.

2024ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து நடப்பு 2026ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு உள்ளாகவே கடைசி 1 மில்லியன் வாகனங்களை உற்பத்தி ஒட்டுமொத்தமாக 3 மில்லியன் வாகனங்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை சஹான் தொழிற்சாலை கடந்துள்ளது. இது 2 விஷயங்களை நமக்கு மிகவும் தெளிவாக உணர்த்துகிறது.
ஒன்று மஹிந்திரா நிறுவனத்தின் வாகனங்களுக்கு சந்தையில் மிகப்பெரிய 'டிமாண்ட்' ஏற்பட்டுள்ளது. மற்றொன்று உற்பத்தி திறன் வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதாகும். தற்போது எல்லாம் ஒரு சில மாதங்களில் இந்தியாவிலேயே அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் மாருதி சுஸுகிக்கு (Maruti Suzuki) அடுத்தபடியாக மஹிந்திரா நிறுவனம் 2வது இடத்தை பிடிக்க தொடங்கியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
மஹிந்திரா நிறுவனம் சமீப காலமாக விற்பனைக்கு அறிமுகம் செய்து வரும் வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதுதான் இதற்கு காரணம். இதன் காரணமாக மஹிந்திரா நிறுவனம் சஹான் தொழிற்சாலையின் உற்பத்தி திறனையும் அவ்வப்போது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. சஹான் தொழிற்சாலையில் 30 லட்சமாவது வாகனமாக உற்பத்தி செய்யப்பட்டிருப்பது மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6) ஆகும்.
இது எலெக்ட்ரிக் கார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சரி, இனி மஹிந்திரா நிறுவனத்தின் சஹான் தொழிற்சாலை பற்றிய ஒரு சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம். சஹான் தொழிற்சாலை 657 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மஹிந்திரா நிறுவனத்தின் வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதுடன் மட்டுமல்லாது, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற சர்வதேச சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இங்கு வாகன உற்பத்தி உள்ளிட்ட பணிகளில் சுமார் 1,500 ரோபோட்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. பாடி ஷாப் உள்ளிட்ட பிரிவுகளில் 98 சதவீத 'ஆட்டோமேஷன்' எட்டப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த தொழிற்சாலைக்கு தேவையான 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மின்சாரம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் வழியாக பெறப்படுகிறது.
அதே நேரத்தில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி பிரிவிற்கு தேவையான 100 சதவீத மின்சாரமும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் வழியாகவே பெறப்படுகிறது. அத்துடன் இந்த தொழிற்சாலை ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 9.91 லட்சம் கிலோ லிட்டர்கள் மழை நீரை சேகரித்து, பூமிக்கடியில் அனுப்புகிறது. நிலத்தடி நீரை வளப்படுத்துவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல் மஹிந்திரா நிறுவனத்தின் வாகனங்களுக்கு இந்திய சந்தையில் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் பிரம்மாண்டமான வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. எனவே சஹான் தொழிற்சாலை எதிர்காலத்தில் உற்பத்தியில் இன்னும் பல்வேறு மைல்கற்களை கடக்கும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications