டாடா, ஹூண்டாய் எல்லாம் இனி அவ்ளோ தான்.. விற்பனையில் வெளுத்து வாங்கும் மஹிந்திரா
இந்தியாவில் தாங்களது மே மாத விற்பனை குறித்த தகவல்களை வெளியிட்டிருக்கிறது மஹிந்திரா. கடந்தாண்டு மே மாதம் மற்றும் கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது விற்பனையை வளர்ச்சியையே பதிவு செய்துள்ளது அந்நிறுவனம். 2026 மேயில் 58,021 கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது 10.66 சதவீதம் விற்பனை உயர்வாகும். கடந்தாண்டு மே மாதம் 52,431 கார்களையே இந்தியாவில் மஹிந்திரா விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போதும் மஹிந்திராவின் விற்பனை கணிசமான அளவில் உயர்ந்திருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 56,331 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது மஹிந்திரா. அதனுடன் ஒப்பிடும் போது 3.5 சதவீதம் அளவிற்கு கடந்த மே மாதம் மஹிந்திராவின் விற்பனை உயர்ந்திருக்கிறது.

கார்களைத் தவிர்த்து ஒட்டுமொத்தமாக வாகன விற்பனையை எடுத்துக் கொண்டாலும், மஹிந்திராவின் விற்பனை சிறப்பான அளவில் உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் கார்களை மட்டுமில்லாமல், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களையும் மஹிந்திரா விற்பனை செய்து வருகிறது. கடந்த மே மாதம் மொத்தமாக 99,636 வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது மஹிந்திரா.
கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது இது 20 சதவீதம் வரை விற்பனை உயர்வாகும். கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது மூன்று சக்கர வாகன விற்பனையே கிட்டத்தட்ட இருமடங்கு, அதாவது 89% வரை உயர்ந்திருக்கிறது. கடந்தாண்டு மே மாதம் 6,635 மூன்று சக்கர வாகனங்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த மே மாதம் அது 12,536 யூனிட்டுகளாக உயர்ந்திருக்கிறது.

இந்தியாவில் விற்பனை செய்வது மட்டுமின்றி பயணிகள் வாகனங்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது மஹிந்திரா. கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது கடந்த மே மாதம் இந்த ஏற்றுமதி அளவும் 37 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. கடந்தாண்டு மே மாதம் 3,646 கார்களை மஹிந்திரா ஏற்றுமதி செய்திருந்த நிலையில், கடந்த மே மாதம் 5,000 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது.
மாருதி சுஸுகிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்திற்கு டாடாவுடன் போட்டி போட்டு வருகிறது மஹிந்திரா.
டாடாவின் விற்பனை நிலவரம் சில தினங்களில் தெரிய வரும் போது, இந்த மாத விற்பனையில் மஹிந்திரா இரண்டாம் இடத்திற்கு முன்னேறியிருக்கிறதா அல்லது மூன்றாம் இடத்தில் அப்படியே நிலை கொண்டிருக்கிறதா என்பது தெரிய வரும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஹூண்டாயே தொடர்ச்சியாக இரண்டாமிடத்தைப் பிடித்து வந்தது. தற்போது ஹூண்டாயை நான்காம் இடத்திற்குத் தள்ளி மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்து வருகின்றன.
2027ம் நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களை சிறப்பான விற்பனையுடனே மஹிந்திரா தொடங்கியிருக்கிறது. ஏப்ரல் மாதம் 56,331 கார்களையும், மே மாதம் 58,021 கார்களையும் விற்பனை செய்துள்ளது. இரண்டு மாதங்களும் சேர்த்து 1.14 லட்சம் கார்களை மஹிந்திரா விற்பனை செய்திருக்கிறது. இது கடந்தாண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும் போது 10,000 யூனிட்டுகள் வரை கூடுதல் விற்பனை அளவாகும். 2026ம் நிதியாண்டின் முதலிடண்டு மாதங்களில் 1.04 லட்சம் கார்களையே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போது வாடிக்கையாளர்களிடையே எஸ்யூவி மோகம் தான் அதிகம் இருக்கிறது. இந்தியாவில் எஸ்யூவி கிங் என்றால் அது மஹிந்திரா தான். சிறிதில் இருந்து பெரிது வரை சப்-காம்பேக்டில் இருந்து ஃபுல்-சைஸ் வரை அனைத்து வகையான எஸ்யூவிக்களையும் மஹிந்திரா விற்பனை செய்து வருகிறது. எனவே அதன் விற்பனை தொடர்ந்து உயர்ந்து வருவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. இந்தியாவில் தற்போது 11 எரிபொருள் எஸ்யூவிக்களையும், 5 எலெக்ட்ரிக் எஸ்யூவிக்களையும் மஹிந்திரா விற்பனை செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications