விற்பனையில் மஹிந்திரா வரலாற்று சாதனை.. ஒரே மாதத்தில் 1.31 லட்சம் வாகனங்கள் விற்பனை!
இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா, கடந்த அக்டோபர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வாகனங்களை விற்பனை செய்து புதிய சாதனையை படைத்துள்ளது. பண்டிகைக் கால விற்பனை மற்றும் புதிய மாடல்களின் வருகை நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
அக்டோபர் மாதத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த வாகன விற்பனை 1,31,109 யூனிட்டுகளாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுடன் ஒப்பிடும்போது இது 9 சதவீத வளர்ச்சியாகும். உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டையும் சேர்த்து இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது.

எஸ்யூவி விற்பனை அசத்தல்
மஹிந்திராவின் எஸ்யூவி கார் பிரிவு விற்பனையில் மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. அக்டோபர் மாதத்தில் மட்டும் உள்நாட்டில் 73,338 எஸ்யூவி ரக கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 71,624 கார்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 2.39 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது நிறுவனத்தின் இதுவரையிலான அதிகபட்ச மாதாந்திர எஸ்யூவி கார் விற்பனை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் 64,092 எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதனுடன் ஒப்பிடும்போது அக்டோபர் மாத விற்பனை 14.43 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது ஒரே மாதத்தில் 9,246 கார்கள் கூடுதலாக விற்பனையாகியுள்ளன. பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர்கள் புதிய கார்களை வாங்க ஆர்வம் காட்டியதே இதற்கு முக்கிய காரணமாகும்.
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 3XO, எக்ஸ்யூவி7XO, ஸ்கோடார்ப்பியோ என், ஸ்கார்ப்பியோ கிளாசிக், தார் மற்றும் பொலிரோ உள்ளிட்ட எஸ்யூவி மாடல்கள் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. சமீபத்தில் அறிமுகமான எக்ஸ்யூவி 3XO ZNG நிறுவனத்தின் முதல் CNG வாகனமாகவும் வந்துள்ளது. இந்த காருக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

வர்த்தக வாகன விற்பனை
மஹிந்திராவின் வர்த்தக வாகனப் பிரிவிலும் சிறப்பான விற்பனை வளர்ச்சி பதிவாகியுள்ளது. அக்டோபர் மாதத்தில் உள்நாட்டில் 33,037 இலகுரக வர்த்தக வாகனங்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 31,741 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 4 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் 2 டன் முதல் 3.5 டன் வரையிலான வர்த்தக வாகனங்கள் விற்பனை 5 சதவீதம் அதிகரித்து 28,654 யூனிட்டுகளாக பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் 2 டன்னுக்கு குறைவான வாகனங்கள் விற்பனை 4 சதவீதம் சரிந்து 4,383 யூனிட்டுகளாக பதிவாகி உள்ளது.
மூன்று சக்கர வாகன விற்பனையில் மஹிந்திரா மிகப்பெரிய வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மின்சார வாகனங்களையும் சேர்த்து அக்டோபரில் 17,632 மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 12,762 யூனிட்கள் விற்பனையான நிலையில், தற்போது 38 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஏற்றுமதியில் 77% வளர்ச்சி
மஹிந்திரா நிறுவனத்தின் ஏற்றுமதி விற்பனையும் அக்டோபர் மாதத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 4,015 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அக்டோபரில் 7,102 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது 77 சதவீத வளர்ச்சியாகும். ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் மஹிந்திராவின் உள்நாட்டு SUV விற்பனை 17 சதவீதம் அதிகரித்து 4,31,480 யூனிட்களாக உயர்ந்துள்ளது. மூன்று சக்கர வாகன விற்பனை 50 சதவீதம் அதிகரித்து 99,690 யூனிட்களாக பதிவாகியுள்ளது.

டிராக்டர் விற்பனையில் சரிவு
தனிநபர், வர்த்தக வாகனப் பிரிவில் சாதனை படைத்திருந்தாலும், மஹிந்திராவின் டிராக்டர் விற்பனையில் அக்டோபர் மாதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. உள்நாட்டில் 62,626 டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 72,071 டிராக்டர்கள் விற்பனையான நிலையில், தற்போது 13 சதவீதம் குறைந்துள்ளது.
தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கு மாறியதே டிராக்டர் விற்பனை குறைவுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களின் ஒட்டுமொத்த டிராக்டர் விற்பனை கடந்த ஆண்டை விட வளர்ச்சிப் பாதையிலேயே உள்ளது.


Click it and Unblock the Notifications



