3 மாடல்களில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிக்கப் டிரக்... உங்களுக்கு எது சரியான சாய்ஸ்?
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மஹிந்திரா நிறுவனம் தனது ஸ்கார்ப்பியோ பிக்கப் டிரக் மாடலை சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. ஸ்கார்ப்பியோ லைஃப்ஸ்டைலர் பிக்கப் என்ற பெயரில் வந்துள்ள இந்த மாடலானது வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பரிசீலனையிலும் எடுக்க வைத்துள்ளது.
மிக நேர்த்தியான பிரம்மாண்டமான முகப்பு வடிவமைப்பு, பிரிமீயம் அம்சங்களுடன் வாகன பிரியர்களை கவர்ந்துள்ள இந்த மாடலானது வாடிக்கையாளர்களின் விருப்பம், பயன்பாட்டிற்கு ஏற்ப Reef, Trail மற்றும் Valley என்று மூன்று விதமான மாடல்களில் வந்துள்ளது. இந்த வாகனத்தை பயன்படுத்துவதற்கான நிலப்பரப்புக்கு ஏற்ற அலங்காரங்களுடன் கூடிய வண்ணத் தேர்வுகள், சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மூன்று மாடல்களின் தனித்துவமான அம்சங்கள், பயன்பாடு குறித்த விஷயங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

1. ரீஃப் எடிசன் (Reef Edition)
புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ லைஃப்ஸ்டைலர் பிக்கப் டிரக்கில் மிகவும் தனித்துவமாக தெரியும் மாடலாக இதனை குறிப்பிடலாம். அக்வாரீஃப் (Aquareef) என்ற வண்ணத் தேர்வில் கடலோர சாகசத்திற்கு ஏற்ற அம்சங்களை இந்த மாடல் பெற்றிருக்கிறது. கடற்கரை சாகச முறையை பிரதிபலிக்கும் வகையில் கிராஃபிக் டிசைன் வெளிப்புறத்திற்கு அழகு சேர்க்கிறது. வார இறுதியில் கடலோரப் பகுதிகளில் கேம்பிங் மற்றும் நீர் சாகச விளையாட்டுகளை செய்ய விரும்புவோருக்கு ஏற்ற ஆக்சஸெரீகளும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

2. ட்ரெயில் எடிசன் (Trail Edition)
இந்த மாடலானது ஆஃப்ரோடு விரும்புவோருக்கு ஏற்ற அம்சங்களை பெற்றிருக்கிறது. மேலும், சஹாரா பீஜ் என்ற சிறப்பு வண்ணத்தில் கிடைக்கும். பாலைவனப் பகுதி, ஆஃப்ரோடு சாகசங்கள் பயன்பாட்டை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்கும் வகையில் பாடி கிராஃபிக் டிசைன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக, Roof Rack மற்றும் சரக்கு வைப்பதற்கான இடவத்தில் பெட்டக வசதிகளுடன் இடம்பெற்றுள்ளது.

3. வேலி எடிசன் (Valley Edition)
மூன்றாவது மாடலான வேலி மாடலில் ஆர்டெமிஸ் க்ரே என்ற அடர் சாம்பல் வண்ணத் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. மலைப்பாங்கான பகுதிகளில் பயன்பாட்டுக்கு ஏற்ற அம்சங்களை பெற்றிருக்கிறது. இதனால், இந்த மாடலும் தனித்துவமான அம்சங்களை பெற்றிருக்கிறது. கூரையில் பொருட்கள் வைப்பதற்கான பெட்டகம் இருப்பதுடன், வண்டி நீளத்திற்கும் ஃபுட்போர்டு இடம்பெற்றுள்ளது. தினசரி பயன்பாட்டிற்கும் இது ஏற்றதாக இருக்கும்.
எஞ்சின் தேர்வு
தொழில்நுட்ப விஷயங்கள் குறித்து மஹிந்திரா இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல்களை வெளியிடவில்லை. எனினும், இந்த பிக்கப் டிரக்கில் 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின் இடம்பெறும். இந்த எஞ்சின் 2 வீல் டிரைவ், 4 வீல் டிரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக வெளியானத் தகவல்களில் பெட்ரோல் எஞ்சின் தேர்வும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய தகவல்களின்படி, டீசல் எஞ்சின் தேர்வில் மட்டுமே வழங்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

ஸ்கார்ப்பியோ என் பிளாட்ஃபார்ம்
இது ஸ்ராப்பியோ என் எஸ்யூவி உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பிக்கப் டிரக் தனிநபர் பயன்பாட்டை மனதில் வைத்து பிரிமீயம் மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு இருக்கை வரிசையுடன் 5 பேர் பயணிப்பதற்கான வசதியையும், பின்புறத்தில் பொருட்களை வைப்பதற்கான கார்கோ பெட் இடவசதியும் உள்ளது. இதனால், ஸ்கார்ப்பியோ என் எஸ்யூவியை விட கூடுதல் நீளத்தை பெற்றுள்ளது.
இன்டீரியர்
மேலும், இதன் இன்டீரியரும் முற்றிலும் மாறுபட்ட வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, டேஷ்போர்டு அமைப்பு மாறி இருப்பதுடன், செங்குத்தான தொடுதிரையுடன் புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து, ஏராளமான நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த பிரிமீயம் பிக்கப் டிரக் வர இருக்கிறது.
விலை அடிப்படையில் நேரடியாக ஒப்பிட முடியாவிட்டாலும், இது அண்மையில் வந்த 9வது தலைமுறை டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக், இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் மாடல்களுடன் போட்டி போடும். விலையிலும், தோற்றத்திலும், வசதிகளிலும் போட்டியாளர்களைவிட மதிப்பு மிக்க தேர்வாக இருக்க வேண்டும் என்று மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.
ரூ.19.79 லட்சத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது. வரும் 2027ம் ஆண்டு ஏப்ரலில் முறைப்படி வேரியண்ட் வாரியான விலை அறிவிப்புடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். இந்தியா தவிர்த்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்க சந்தைகளிலும் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications
