24 வருடங்களுக்கு பின் ஸ்கார்பியோவுக்கு இந்த வசதி எல்லாம் கிடைக்குது! மஹிந்திராவுக்கு இப்போவாவது ஐடியா வந்ததே..
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் தனது புகழ்பெற்ற ஸ்கார்பியோ-என் (Scorpio-N) எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட புதிய ஃபேஸ்லிஃப்ட் (Facelift) காரை உருவாக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், புதிய ஸ்கார்பியோ-என் ஃபேஸ்லிஃப்ட் காரின் சோதனை ஓட்டங்கள் தொடங்கிவிட்டன. ஆரம்பக்கட்ட சோதனைகளில் தற்போதைய ஸ்கார்பியோ-என் காரை ஒத்திருந்த போதிலும், அடுத்தடுத்த மேம்பட்ட கட்டங்களில் பல மாற்றங்களுடன் சோதனை வாகனங்கள் வெளிவந்துள்ளன.
'தி கார் ஷோ' (The Car Show) வெளியிட்ட சமீபத்திய ஸ்பை படங்கள் (Spy Images), வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் பல அம்சங்களை 2026 ஸ்கார்பியோ-என் ஃபேஸ்லிஃப்ட் காரில் உறுதிப்படுத்தியுள்ளன. அவ்வாறு, 2026 மஹிந்திரா ஸ்கார்பியோ-என் ஃபேஸ்லிஃப்ட் காரில் உறுதிப்படுத்தப்பட்ட புதிய அம்சங்கள் குறித்து இங்கே காண்போம்.

இந்திய எஸ்யூவி கார் வாடிக்கையாளர்கள் சன்ரூஃப்களை அதிகம் விரும்புகின்றனர். இந்த விருப்பத்திற்கு ஏற்ப, மஹிந்திரா நிறுவனமும் ஸ்கார்பியோ-என் காரில் ஏற்கெனவே சன்ரூஃப் வசதியை வழங்குகிறது. எனினும், புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில், அதிக வெளிச்சத்தையும், விசாலமான உணர்வையும் தரும் பனோரமிக் சன்ரூஃப் (Panoramic Sunroof) வசதியை மஹிந்திரா வழங்குகிறது.
இது ஸ்கார்பியோ-என் கார் கேபினின் விசாலமான உணர்வை மேலும் மேம்படுத்தி, அதன் கவர்ச்சியை அதிகரிக்கிறது. மற்ற பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்இவி 9இ (XEV 9e) கார் மாடல்களைப் போல் அல்லாமல், ஸ்கார்பியோ-என் ஃபேஸ்லிஃப்ட் கார், திறக்கக்கூடிய இரட்டை-கண்ணாடி பனோரமிக் சன்ரூஃபைப் பெறுவது சிறப்பம்சமாகும். பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரையில், 2025 ஜூன் மாதத்தில், மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரின் இசட்8டி (Z8T) வேரியண்ட்டில் லெவல்-2 அடாஸ் (ADAS) அறிமுகப்படுத்தப்பட்டது.

இதில், காரின் முன்பக்கம் மோதலுக்கு உள்ளாக நேர்ந்தால் அதுகுறித்த எச்சரிக்கை, தானியங்கி அவசரகால பிரேக்கிங், ஸ்டாப் & கோ உடன் கூடிய அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஸ்மார்ட் பைலட் உதவி, பாதை விலகல் எச்சரிக்கை, ஒரே பாதையை தொடர்வதற்கான உதவி, போக்குவரத்து சிக்னலை கார் தானாக அடையாளம் காணும் வசதி, ஹை பீம் அசிஸ்ட், வரம்பை விட அதிவேகமாக சென்றாலோ மற்றும் காரை இயக்குவதற்கு முன்பே பழுதுகள் குறித்த எச்சரிக்கை போன்ற அம்சங்கள் அடங்கும்.
ஆனால், அளவில் பெரியதான இந்த எஸ்யூவி காரைச் சுற்றியுள்ள பகுதியைப் பார்க்க உதவும் 360-டிகிரி கேமராக்கள் இதில் இல்லை. தற்போது, 2026 ஸ்கார்பியோ-என் ஃபேஸ்லிஃப்ட் காரில் 360-டிகிரி கேமராக்கள் வழங்கப்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கண்ணாடிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள புடைப்பைப் தற்போது வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களில் காணலாம். இந்த கேமராக்கள் மூலம், டிரைவரால் காரை சுற்றி பார்க்க முடியாத பகுதிகளை கண்காணிக்கும் அம்சத்தையும் மஹிந்திரா வழங்கலாம்.

சமீபத்திய ஸ்பை படங்கள், 2026 மஹிந்திரா ஸ்கார்பியோ-என் ஃபேஸ்லிஃப்ட் கார் ஒரு கம்பீரமான முன்பக்க கிரில்லைப் பெறுவதைக் காட்டுகின்றன. இது முன் பம்பரின் அடிப்பகுதி வரை நீண்டுள்ளது. இந்தக் கிரில்லில் கிடைமட்ட ஸ்லாட்கள், வாகனத்திற்கு அகலமான மற்றும் ஆதிக்கம் செலுத்தும் தோற்றத்தை அளிக்கின்றன. எல்இடி ஹெட்லைட்கள் புதிய வடிவமைப்பில் இருக்கும்.
கார்னரிங் ஃபாக் விளக்குகளையும் மஹிந்திரா வழங்கக்கூடும். சக்கரங்கள் இப்போதும் 18 அங்குல அளவிலேயே உள்ளன; ஆனால் அலாய் சக்கரங்களின் வடிவமைப்பு முற்றிலும் புதியது. உட்புறத்தில், ஸ்கார்பியோ-என் ஃபேஸ்லிஃப்ட் கார் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதியுடன் கூடிய பெரிய 10.2 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் திரையைப் பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த மேம்பாடுகள் மூலம், புதிய ஸ்கார்பியோ-என் ஃபேஸ்லிஃப்ட் கார் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவி கார் என்கிற பெருமையை ஸ்கார்பியோ-என் தக்கவைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப, இந்த காரை மேலும் சிறப்பாக மாற்ற மஹிந்திரா தீவிரமாக உள்ளது.


Click it and Unblock the Notifications









