டாடா, ஹூண்டாயை எல்லாம் ஓரங்கட்டிய மஹிந்திரா! இந்திய கார் நிறுவனமாக உலகளவில் கிடைக்கும் வரவேற்பு!
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 94 ஆயிரத்து 627 வாகனங்களை விற்பனை செய்து 14% வளர்ச்சியை விற்பனையில் சந்தித்துள்ளது. இந்த 94,627 வாகனங்களில் பாதிக்கும் மேல் மஹிந்திரா கார்கள் ஆகும். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் (Automobile) நிறுவனங்களுள் ஒன்றான மஹிந்திரா, நடந்து முடிந்த 2026 ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை குறித்த விபரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி பார்க்கும்போது, மஹிந்திரா நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 94,627 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

இது கடந்த 2025ஆம் ஆண்டில் மஹிந்திரா விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில் 14% அதிகமாகும். இந்த 94,627 வாகனங்களில் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா வாகனங்கள் உள்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 4,970 யூனிட் மஹிந்திரா வாகனங்களும் அடங்குகின்றன. அதுவே, 2025 ஏப்ரல் மாதத்தில் 3,381 யூனிட் வாகனங்களை மட்டுமே இந்தியாவில் உற்பத்தி செய்து மஹிந்திரா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்தது.
மஹிந்திரா கடந்த மாதத்தில் விற்பனை செய்த வாகனங்களில் பெரும்பாலானவை மஹிந்திரா கார்கள் ஆகும். கடந்த மாதத்தில் மொத்தம் 56 ஆயிரத்து 331 கார்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 52 ஆயிரத்து 330 ஆக மட்டுமே பதிவாகி இருந்தது.
| Category | April F27 | April F26 | % Change |
| Cars | 56,331 | 52,330 | 8% |
| LCV | 2,984 | 2,652 | 13% |
| LCV 2T - 3.5 T | 20,443 | 19,141 | 7% |
| 3W | 9,899 | 5,470 | 81% |

இந்த வகையில் பார்த்தால், மஹிந்திரா கார்கள் விற்பனை ஆனது 8% அதிகரித்துள்ளது. 56,331 மஹிந்திரா கார்கள் விற்பனை ஆனது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டவை மட்டுமே ஆகும். இவை இல்லாமல், ஆயிரத்து 502 மஹிந்திரா கார்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
கார்களுக்கு அடுத்து, மஹிந்திராவின் லாரிகள், பேருந்துகள் உள்ளிட்ட கமர்ஷியல் வாகனங்கள் அதிகமாக விற்பனையாகுகின்றன. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 23 ஆயிரத்து 427 யூனிட் மஹிந்திரா கமர்ஷியல் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் 2 டன்களில் இருந்து 3.5 டன்கள் வரையில் எடை கொண்ட மஹிந்திரா கமர்ஷியல் வாகனங்கள் 20 ஆயிரத்து 443 யூனிட்களும், 2 டன்களுக்கும் அதிகமான கமர்ஷியல் வாகனங்கள் 2 ஆயிரத்து 984 யூனிட்களும் அடங்குகின்றன.
அதுவே, 2025 ஏப்ரல் மாதத்தில் 2 டன் - 3.5 டன் வரையில் எடை கொண்ட மஹிந்திரா கமர்ஷியல் வாகனங்கள் 19 ஆயிரத்து 141 யூனிட்களும், 2 டன்களுக்கும் அதிகமான கமர்ஷியல் வாகனங்கள் 2 ஆயிரத்து 652 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இவை மட்டுமின்றி, மஹிந்திராவில் இருந்து மூன்று-சக்கர வாகனங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
மற்ற வாகனங்களை விட மஹிந்திரா 3-வீலர்களின் விற்பனை சுமார் 81% அதிகரித்துள்ளது. 2025 ஏப்ரலில் 5 ஆயிரத்து 740 மஹிந்திரா 3-வீலர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், 2026 ஏப்ரலில் 9 ஆயிரத்து 899 யூனிட் மஹிந்திரா 3-வீலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் மஹிந்திராவின் எலெக்ட்ரிக் 3-வீலர்களின் விற்பனை எண்ணிக்கைகளும் அடங்குகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2026-27ஆம் நிதியாண்டை மஹிந்திரா & மஹிந்திரா சிறப்பாக துவங்கியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக, கார்கள் விற்பனையில் மாதத்திற்கு மாதம் வளர்ச்சியை பதிவு செய்துவரும் மஹிந்திரா தற்சமயம் இந்தியாவின் 2வது பெரிய கார் பிராண்ட் ஆக விளங்குகிறது. முதலிடத்தில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) உள்ளது.


Click it and Unblock the Notifications