ரூ.10.32 லட்சத்தில் புதிய மஹிந்திரா தார் OG அறிமுகம்... அதிக வசதிகளுடன் வந்தாச்சு!
ஆஃப்ரோடு பிரியர்கள் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தியிருந்த மஹிந்திரா தார் 3 டோர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் தார் ஓஜி (Thar OG) என்ற பெயரில் சற்றுமுன் நடந்த நிகழ்ச்சியின் மூலமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. தோற்றத்தில் பழைய தார் எஸ்யூவியின் அடையாளங்களைத் தக்க வைத்துக்கொண்டு, புதுப்பொலிவுடன் அதிக சிறப்பம்சங்கள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு வசதிகளுடன் வந்துள்ளது. இந்த புதிய தார் ஓஜி மாடலுக்கு ரூ.10.32 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு அறிமுகமான மூன்று கதவுகள் கொண்ட தார் எஸ்யூவி உருவாக்கிய தனித்துவமான வாடிக்கையாளர் வரவேற்பை தொடர்ந்து, புதிய தார் ஓஜி மாடலை மஹிந்திரா அதிக சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தி உள்ளது. மஹிந்திரா தார் ராக்ஸ் 5 டோர் மாடலின் டிசைன் அம்சங்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

எல்இடி ஹெட்லைட்டுகள், C வடிவிலான பகல்நேர விளக்குகள், புதிய பம்பர் ஆகியவை அதே கம்பீரத்தை தக்க வைக்கவும், நவீனத்துவத்தையும் காட்டுகின்றன. தார் ராக்ஸ் போன்ற டிசைனில் 19 அங்குல அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. உட்புறத்தில் புதிய சென்டர் கன்சோல் அமைப்பு, பெரிய திரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பழுப்பு வண்ண செயற்கை லெதர் இருக்கைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. மேலும், வெளியிலிருந்து சப்தம் வருவதை தடுக்கும் அமைப்புகள் மிகவும் சிறப்பாக மேம்படுத்தப்பட்டு இருப்பதாக மஹிந்திரா தெரிவிக்கிறது.
புதிய தார் ஓஜி எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பவர் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 162 பிஎச்பி பவரையும், 330 என்எம் டார்க்கையும் வழங்கும். பழைய மாடலில் இருந்த இதே எஞ்சின் தற்போது 10 எச்பி பவரையும், 30 என்எம் டார்க்கை கூடுதலாக வழங்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது.

இதேபோன்று, 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் 152 எச்பி பவரையும், 330 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. பழைய மாடலைவிட 18 எச்பி பவரையும், 30 என்எம் டார்க்கையும் கூடுதலாக வழங்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது. பேஸ் வேரியண்ட்டுகளில் கொடுக்கப்படும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 119 எச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஸ்யூவியில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் உள்ளன. மேலும், ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட தேர்வுகளிலும் கிடைக்கும்.
மஹிந்திரா தார் எஸ்யூவியில் வழங்கப்பட்ட ஹைட்ராலிக் பவர் ஸ்டீயரிங் சிஸ்டத்திற்கு பதிலாக புதிய மாடலில் எலெக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, குறைவான வேகத்திலும், பார்க்கிங் செய்வதற்கும் இலகுவான அனுபவத்தை ஸ்டீயரிங் சிஸ்டம் கொடுக்கும். சிறப்பான பயண அனுபவத்திற்காக சஸ்பென்ஷனிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.
மேலும், புதிய தார் ஓஜி எஸ்யூவியில் எலெக்ட்ரானிக் லாக்கிங் டிஃபரன்ஷியல் (ELD) வழங்கப்படுகிறது. இதன் மூலம் பின்புற சக்கரங்களில் அதிக பிடிப்பு உள்ள சக்கரத்திற்கு எஞ்சின் சக்தியை அனுப்பி, சேறு அல்லது மணல் போன்ற வழுக்கும் பாதைகளில் தரைப் பிடிப்பை மேம்படுத்த உதவும். இதனுடன் சேறு, மணல், பனி ஆகிய நிலப்பரப்புகளுக்கு ஏற்ற மூன்று தனித்தனி டெர்ரெயின் மோடுகளும் வழங்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அம்சங்களிலும் தார் ஓஜி குறிப்பிடத்தக்க முன்னேற்றம் பெற்றுள்ளது. மொத்தம் ஆறு காற்றுப்பைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், முன் மற்றும் பின்புற பயணிகளுக்கான நான்கு எச்பிடிஎஸ் காற்றுப்பைகள் இதில் இடம்பெறுகின்றன. நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் மற்றும் முன்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. உயர்நிலை வகையில் டயர் அழுத்த கண்காணிப்பு மற்றும் பின்புற கேமராவும் கிடைக்கின்றன.
புதிய மஹிந்திரா தார் ஓஜி எஸ்யூவிக்கு ரூ.10.32 லட்சம் முதல் ரூ.18.99 லட்சம் லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும். வரும் அக்டோபர் 11ந் தேதி முதல் டெலிவிரிப் பணிகள் துவங்கப்பட உள்ளன. வரும் நவம்பர் 30ந் தேதி வரை மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அறிமுகச் சலுகை விலை பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, புதிய தார் ஓஜி எஸ்யூவியை வாங்க விரும்புவோர் கூடிய சீக்கிரம் முன்பதிவு செய்து கொள்வது அவசியமாகிறது.


Click it and Unblock the Notifications


