அலுங்கல், குலுங்கல் இல்லாத பயணம்.. புதிய தார் எஸ்யூவியின் பெண்டா லிங்க் சஸ்பென்ஷன்: எளிய விளக்கம்
மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி (SUV) கார்கள் என்றாலே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக, தார் எஸ்யூவியானது ஆஃப்ரோடு பயணத்தை விரும்புபவர்களின் முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. ஆனால், முந்தைய தலைமுறை தாரில் நீண்ட தூர நெடுஞ்சாலைப் பயணங்களின்போது, குறிப்பாக பின்சீட்டில் அமர்ந்திருப்பவர்களுக்கு அதிக குலுங்கல் மற்றும் சஸ்பென்ஷன் அதிர்வுகள் உணரப்படுவதாகக் கருத்து இருந்து வந்தது.
இதனை மனதில் வைத்து அண்மையில் அறிமுகமான புதிய தார் OG மாடலில் பின்புறத்தில் Watt's Linkage என்ற விசேஷ இணைப்புடன் கூடிய Penta Link சஸ்பென்ஷன் அமைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இரண்டு தொழில்நுட்பங்களும் இணைந்து பின்புற ஆக்சிலின் (Rear Axle) இயக்கத்தைக் கட்டுப்படுத்தி, வேகமாக செல்லும்போது கார் நிலைத்தன்மையுடன் செல்வதற்கும், ஆஃப்ரோடு பயணங்களில் குலுங்கல்களை வெகுவாக குறைப்பதற்கும் உதவுகின்றன. இந்த சஸ்பென்ஷன் குறித்த எளிய விளக்கத்தை தொடர்ந்து பார்க்கலாம்.

பெண்டா-லிங்க் சஸ்பென்ஷன்
பெண்டா (Penta) என்றால் கிரேக்க மொழியில் ஐந்து என்று பொருள்படுகிறது. அதன்படி, பெண்டா-லிங்க் சஸ்பென்ஷன் அமைப்பில் பின்புற ஆக்சிலை கட்டுப்படுத்த ஐந்து இணைப்புகள் (Links) அல்லது கட்டுப்பாட்டு கரங்கள் (Control Arms) பயன்படுத்தப்படுகின்றன. இவை ஆக்சில் தேவையில்லாமல் முன், பின் அல்லது பக்கவாட்டில் நகர்வதை கட்டுப்படுத்துகின்றன.
ஒரு கார் மேடு பள்ளமான சாலையில் செல்லும்போது, சக்கரங்கள் சஸ்பென்ஷனின் இயக்கத்துக்கு ஏற்ப மேலும் கீழும் நகர வேண்டும். அதே நேரத்தில், ஆக்சில் தனது கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருக்க வேண்டும். பெண்டா லிங்க் அமைப்பில் உள்ள ஐந்து இணைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்த இயக்கத்தை துல்லியமாகக் கட்டுப்படுத்துவதால், சக்கரங்களின் இயக்கம் மற்றும் கார் பாடியின் இயக்கம் சிறப்பாக மேம்படுத்தப்படுகிறது.

இந்த பெண்டா லிங்க் தொழில்நுட்ப அமைப்பு மூலமாக சஸ்பென்ஷன் வேலை செய்யும் போது பின்புற ஆக்சில் தேவையற்ற திசைகளில் நகர்வது குறைகிறது. இதனால் சாலையின் அதிர்வுகள் மற்றும் சக்கரங்களின் இயக்கம் காருக்குள் கடுமையாக உணரப்படாமல் தவிர்க்க உதவும். குறிப்பாக, கரடுமுரடான சாலைகள் மற்றும் ஆஃப் ரோடு பாதைகளில் இது முக்கியத்துவம் பெறுகிறது. அதேபோன்று, நெடுஞ்சாலைகளில் வேகமாக செல்லும்போது பாடி ரோல் குறைக்கும் வாய்ப்பையும் தருகிறது.
வாட்ஸ் லிங்கேஜ் அமைப்பு
பெண்டா லிங்க் அமைப்புடன் இணைந்து செயல்படும் மற்றொரு முக்கிய தொழில்நுட்ப அமைப்பாக Watt's Linkage கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் 18ம் நூற்றாண்டில் புகழ்பெற்ற விஞ்ஞானி ஜேம்ஸ் வாட் என்பவரால் நீராவி எந்திரத்திற்காக வடிவமைக்கப்பட்டது. பொதுவாக, ஆஃப் ரோடு வாகனங்களில் பான்ஹார்ட் ராடு என்ற ஒற்றை கம்பி பயன்படுத்தப்படும். ஆனால் அது வளைவுகளில் கார் திரும்பும்போது பின் ஆக்சிலை ஒரு பக்கமாக இழுக்கும் இயல்புடையது, இதனால் கார் நிலைதடுமாறுவது போல் தோன்றும்.

வாட்ஸ் லிங்கேஜ் இதில் முற்றிலும் மாறுபட்ட முறையில் இயங்குகிறது. காரின் பின் ஆக்சிலின் நடுவில் ஒரு மைய சுழல் புள்ளி அமைக்கப்பட்டு, அதிலிருந்து இரண்டு உலோகக் கரங்கள் காரின் சேஸியுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதன் முக்கிய பணி, பின்புற ஆக்சில் மேலும் கீழும் சஸ்பென்ஷனுடன் இயங்கும்போது, அது தேவையில்லாமல் இடது அல்லது வலது பக்கம் நகர்வதை கட்டுப்படுத்துகிறது.
இதன் அமைப்பை மிகவும் எளிமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், பின்புற ஆக்சிலின் நடுவில் ஒரு மைய இணைப்பு (Centre Pivot) இருக்கும். இந்த மையப் பகுதியில் இருந்து இரண்டு லிங்குகள் இருபுறமும் சென்று காரின் சேஸியுடன் இணைக்கப்பட்டிருக்கும். அதாவது, இடது பக்கத்தில் ஒரு லிங்கும், வலது பக்கத்தில் மற்றொரு லிங்கும் இருக்கும். இந்த மூன்று பகுதிகளும் சேர்ந்து Watt's Linkage அமைப்பை உருவாக்குகின்றன.
துல்லியமான நகர்வு
கார் மேடு பள்ளத்தில் ஏறி இறங்கும்போது, வாட்ஸ் லிங்கேஜில் உள்ள இரண்டு கரங்களும் ஒன்றுக்கொன்று எதிரெதிர் திசையில் நகர்ந்து, பின் ஆக்சிலை இடது அல்லது வலது பக்கவாட்டில் நகர விடாமல், துல்லியமாகச் செங்குத்து நேர்கோட்டில் மட்டுமே ஏறி இறங்க அனுமதிக்கின்றன. இந்த நவீன சஸ்பென்ஷன் அமைப்பினால் வாகன ஓட்டிக்கும் பயணிகளுக்கும் பல நன்மைகள் கிடைக்கின்றன.
இதை ஒரு எளிய உதாரணத்தில் புரிந்துகொள்ளலாம். ஒரு பெட்டியை மேலேயும் கீழேயும் மட்டும் நகர்த்த வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் பெட்டி மேலே செல்லும்போது இடதுபுறமும், கீழே வரும்போது வலதுபுறமும் நகரத் தொடங்கினால் அதன் இயக்கம் நிலையாக இருக்காது. அந்தப் பெட்டியை இருபுறமும் இருந்து இரண்டு இணைப்புகள் கட்டுப்படுத்தினால், அது மேலேயும் கீழேயும் செல்லும்போது பக்கவாட்டில் நகர்வது குறையும். வாட்ஸ் லிங்கேஜ் அமைப்பு இதே அடிப்படைக் கொள்கையில் பின்புற ஆக்சிலின் பக்கவாட்டு நகர்வை கட்டுப்படுத்துகிறது.

பாடி ரோல் கட்டுப்படுத்தப்படும்
அதிவேக வளைவுகளில் கார் திரும்பும்போது பின் பக்கம் அளவுக்கு அதிகமாகச் சாய்வது முற்றிலும் கட்டுப்படுத்தப்படுகிறது. இரண்டாவதாக, மணிக்கு 100 கி.மீ வேகத்தில் நெடுஞ்சாலையில் செல்லும்போது கார் மிதப்பது போல இல்லாமல், சிறந்த நிலைத்தன்மையையும் தன்னம்பிக்கையையும் ஓட்டுனருக்கு
அளிக்கிறது.
அதேபோன்று பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்களுக்கு தூக்கிப் போடும் உணர்வு பெருமளவில் குறைவதுடன், குலுங்கல் இல்லாத பயணத்தை வழங்கும். குடும்பத்துடன் நீண்ட தூரம் பயணிக்கும்போது அதிக சவுகரியத்தை இந்த சஸ்பென்ஷன் அமைப்பு வழங்கும். மறுபுறத்தில் கரடுமுரடான பாதைகளிலும் காரின் சக்கரங்கள் தரையோடு சிறந்த பிடிமானத்தை பெறுவதற்கான வாய்ப்பும் ஏற்படுகிறது. இதனை சுருக்கமாக சொன்னால் இந்த சஸ்பென்ஷன் மூலமாக ஆஃப்ரோடு மட்டுமின்றி, நெடுஞ்சாலை பயணங்களுக்கும் ஏற்ற ஃபேமிலி காராகவும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை புதிய தார் OG பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications



