மிடில்-கிளாஸ் மக்களையும் கார் வாங்க வைக்க களமிறக்கப்படும் 4 எஸ்யூவிகள்! சைஸில் சின்னதாக இருந்தாலும் வேற லெவல்!
மிடில்-கிளாஸ் மக்களின் கார் கனவை நிஜமாக்கும் வகையில் அளவில் சிறியதான கார்களை பட்ஜெட் விலையில் கொண்டுவர பல கார் நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. எஸ்யூவி (SUV) வகை கார்களுக்கு சிறப்பான வரவேற்பு மக்களிடம் இருந்து கிடைத்து வருவதால், அளவில் சிறியதான புதிய சப்-காம்பாக்ட் (Sub-Compact) எஸ்யூவி கார்களை உருவாக்கும் பணிகளில் பல கார் நிறுவனங்கள் ஈடுப்பட்டு வருகின்றன. அவற்றுள், முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட எஸ்யூவி கார்களை உருவாக்கும் பணியில் ஈடுப்பட்டுவரும் நிறுவனங்களையும், அவற்றின் கார்களை பற்றியும் தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
புதிய மஹிந்திரா தார் (Mahindra Thar): இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனமான மஹிந்திரா தார் ஆனது 3-கதவு மற்றும் 5-கதவு என இரு விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகிறது. கதவுகளின் எண்ணிக்கை மாறுப்பட்டாலும், இரண்டுமே தார் வாகனங்கள் தானே என கூறினாலும், தோற்றத்தில் இரண்டுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.

ஏனெனில், 5 கதவுகளை கொண்ட தார் ராக்ஸ் (Thar ROXX) ஆனது கடந்த 2024ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட லேட்டஸ்ட் தார் வாகனமாகும். அதுவே, 3-கதவு தார் 2020ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின், 3-கதவு தாருக்கு சில அப்கிரேட்கள் வழங்கப்பட்டாலும், விரைவில் 3-கதவு தார் ஆனது தார் ராக்ஸ் வாகனத்தின் தோற்றத்திற்கு மாற்றப்பட உள்ளது. இதன் அறிமுகம் இந்த ஆண்டின் இறுதியில், தீபாவளி பண்டிகை சமயத்தில் இருக்கலாம்.
மஹிந்திரா விஷன் எஸ் (Mahindra Vision S): முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட எஸ்யூவி கார்களை உருவாக்குவதில் மஹிந்திரா நிறுவனம் கைத்தேர்ந்தது. தொடர்ச்சியாக அவ்வாறான எஸ்யூவி கார்களை உருவாக்கிவரும் மஹிந்திரா அடுத்ததாக விஷன் எஸ் கான்செப்ட்டில் உருவாக்கிய எஸ்யூவி காரை களமிறக்க தயாராகி வருகிறது.

இது பார்க்க லேண்ட் ரோவர் (Land Rover) கார்கள் போன்று இருக்கும் என்பதினாலேயே இதனை பேபி லேண்ட் ரோவர் என அழைக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இந்த மஹிந்திரா எஸ்யூவி கார் பல முறை சோதனை ஓட்டங்களின்போதும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அளவில் சிறியதாக, நிமிர்ந்த கம்பீரமான தோற்றத்தை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுவரும் இந்த கார் இந்த 2026ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2027ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.
ரெனால்ட் பிரிட்ஜர் (Renault Bridger): இந்திய கார்கள் சந்தையில் வலுவான கம்பேக் கொடுக்க முயற்சித்துவரும் ரெனால்ட் நிறுவனம் அதன் ஒருபகுதியாக பெட்டகம் வடிவில், முரட்டுத்தனமான தோற்றத்தில் ஒரு எஸ்யூவி காரை களமிறக்க உள்ளது; அதுதான் பிரிட்ஜர் ஆகும். அதன் ஒருபகுதியாகவே புதிய டஸ்டர் (Duster) சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து பிரிட்ஜர் காரை உருவாக்கும் பணிகள் ரெனால்ட் ஈடுப்பட்டு வருகிறது.
ரெனால்ட் பிரிட்ஜர் எஸ்யூவி கார் குறித்த விபரங்கள் வெளிவந்துக் கொண்டிருந்தாலும், இந்த காரின் அறிமுகம் இன்னும் 1 வருடத்திற்கு பிறகே இருக்கும் என கூறப்படுகிறது. ரூ.10 லட்சம் அளவிலான விலையில் ரெனால்ட்டின் கைகர் (Kiger) மற்றும் டஸ்டர் கார்களுக்கு இடையில் பிரிட்ஜர் நிலைநிறுத்தப்பட உள்ளது.
ரெனால்ட் பிரிட்ஜர் சார்ந்த நிசான் கார்: நிசான் (Nissan) நிறுவனமும், ரெனால்ட் நிறுவனம் கூட்டணியில் இருப்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். இந்த கூட்டணியின்படி, பல கார்களை இந்த இரு நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து உருவாக்கி, தங்களது இரு பிராண்ட்களிலும் தனித்தனியாக விற்பனை செய்கின்றன. இதன் மூலமாக, இந்த இரு நிறுவனங்களுக்கும் கார்கள் உற்பத்தியில் கணிசமான செலவு மிச்சமாகிறது.
இதன்படி, ரெனால்ட் பிரிட்ஜர் கார் அறிமுகம் செய்யப்பட்ட பின் அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட காரை நிசான் நிறுவனமும் தனது பிராண்டில் அறிமுகப்படுத்தும். இதனால், இந்த புதிய நிசான் காரின் அறிமுகத்துக்கு எப்படியிருந்தாலும் 2028ஆம் ஆண்டு வந்துவிடும். விலையை பொறுத்தவரையில், ரெனால்ட் பிரிட்ஜரின் விலையில் அல்லது அதனை காட்டிலும் 50 ஆயிரம் ரூபாய் அதிகமான விலையில் இது அறிமுகம் செய்யப்படலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் எதிர்கால போக்குவரத்து எஸ்யூவி வகை கார்களை சார்ந்தே இருக்கும். ஆதலால், அனைத்து விதமான மக்களையும் கவரும் வகையில் சப்-காம்பாக்ட் எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்வது கார் நிறுவனங்களுக்கு இலாபகரமான முடிவாக இருக்கும். இருப்பினும், ஒரு எலெக்ட்ரிக் கார் (Electric Car) கூட இந்த லிஸ்ட்டில் இடம்பெறாதது சற்று ஆச்சிரியத்தை தருகிறது.


Click it and Unblock the Notifications