மஹிந்திரா பொலேரோவை தூக்கி சாப்பிட போகும் புதிய கார்... இரவில் யாருக்கும் தெரியாமல் சோதனை ஓட்டம்!
மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக விஷன் எஸ் கான்செப்ட்டில் இருந்து புதியதாக அளவில் சிறியதான காம்பாக்ட் எஸ்யூவி கார் ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த காரின் பெயர் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், அறிமுகத்திற்கு முன்னதாக இந்த புதிய மஹிந்திரா கார் பொது வெளியில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான படங்கள் ரெட்டிட் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த படங்களில் முழுவதும் மறைப்பால் மறைக்கப்பட்ட் நிலையில் நிறுத்தப்பட்டு இருக்கும் புதிய விஷன் எஸ் காம்பாக்ட் எஸ்யூவி காரை காணலாம். மஹிந்திராவின் பிரபலமான பொலேரோ காரை போன்று பெட்டகம் வடிவிலான தோற்றத்தை இந்த கார் கொண்டுள்ளது.

மஹிந்திராவின் புதிய ஃப்ரீடம்_என்.யு பிளாட்ஃபாரத்தில் இந்த கார் உருவாக்கப்படுகிறது. எலெக்ட்ரிக் வெர்சனில் இந்த கார் வருமா அல்லது பெட்ரோல்/ டீசல் என்ஜின் ஆப்ஷனில் வருமா என்கிற சந்தேகம் இருந்து வந்த நிலையில், இவ்வாறான முந்தைய படங்கள் இந்த புதிய மஹிந்திரா கார் பெட்ரோல்/ டீசல் என்ஜின் ஆப்ஷனில் தான் அறிமுகம் செய்யப்பட உள்ளதை உறுதிப்படுத்தி இருந்தன.
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் படங்களில், காரில் அட்ப்ளூ ஃபில்லர் மூடி இடம்பெற்றிருப்பதை பார்க்க முடிகிறது. இதை வைத்து பார்க்கும்போது, இந்த குறிப்பிட்ட கார் ஆனது டீசல் என்ஜினை கொண்ட வேரியண்ட்டாக இருக்கலாம். தற்போது வெளியாகி இருக்கும் படங்களில் வாகனம் முழுவதுமாக மறைக்கப்பட்டு இருப்பினும், காரின் ஹெட்லைட்களை பார்க்க முடிகிறது.

இந்த புதிய விஷன் எஸ் கான்செப்ட் காரின் ஹெட்லைட் செட்-அப் ஆனது மஹிந்திரா தார் வாகனத்தில் இருப்பதை போன்று உள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் படங்களில் வாகனத்தின் உட்புறத்தை பார்க்க முடியவில்லை என்றாலும், முந்தைய படங்களில் கேபினின் தோற்றத்தை பார்க்க முடிந்தது. காருக்குள் நிறைய பாகங்கள், விஷன் எஸ் கான்செப்ட்டில் இருந்து வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, தனித்துவமான ஏசி காற்றுத்துளைகள், அழுத்தக்கூடிய பொத்தான் கண்ட்ரோல்கள், ரீடிசைன் செய்யப்பட்ட இருக்கைகள், 3-ஸ்போக் ஸ்டீயரிங் சக்கரம், 60:40 என்கிற விகிதத்தில் பிரிக்கக்கூடிய பின் வரிசை இருக்கைகள் மற்றும் பனோராமிக் சன்ரூஃப் உள்ளிட்டவற்றுடன் இந்த புதிய மஹிந்திரா கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஆனால், விஷன் எஸ் கான்செப்ட்டில் வழங்கப்பட்ட அனைத்தையும் அதன் மூலம் உருவாக்கப்படும் இந்த புதிய காரில் எதிர்பார்க்க முடியாது. இந்த காரில் எந்தெந்த மாதிரியான மெக்கானிக்கல் பாகங்கள் வழங்கப்பட உள்ளன என்பதை மஹிந்திரா இன்னும் உறுதி செய்யவில்லை. ஆனால் எப்படியிருந்தாலும், பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் தான் முதலாவதாக இந்த கார் அறிமுகம் செய்யப்படும்.
மஹிந்திராவின் ஃப்ரீடம்_என்யு பிளாட்ஃபாரத்தில் பெட்ரோல், டீசல் கார்கள் மட்டுமின்றி, எலெக்ட்ரிக் கார்களையும் உருவாக்க முடியும். 2027ஆம் ஆண்டில் இருந்து அதிக எண்ணிக்கைகளில் உற்பத்தி செய்யபடலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த புதிய கார் ஆனது மஹிந்திராவின் தற்போதைய எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரை விட அளவில் பெரியதாகவும், அதேநேரம் மஹிந்திரா ஸ்கார்பியோ கார்களை விட அளவில் சிறியதாகவும் இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா பொலேரோ மற்றும் ஸ்கார்பியோ கார்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், அதன் உடலமைப்பில் கொண்டுவரப்படும் விஷன் எஸ் கான்செப்ட் காருக்கும் நல்ல மார்க்கெட் உள்ளது. ஃப்ரீடம்_என்யு பிளாட்ஃபாரத்தில் எலெக்ட்ரிக் கார்களையும் உருவாக்க முடியும் என்பதால், விஷன் எஸ் கான்செப்ட் அடிப்படையிலான எலெக்ட்ரிக் கார்களும் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications