ஸ்பேர் சக்கரத்துடன் மீண்டும் மஹிந்திரா கார்! யாருக்கும் தெரியாமல் நடத்தப்பட்ட சோதனை ஓட்டம்!
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் புது, புது கார்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 2025ஆம் ஆண்டின் சுதந்திர தினத்தின் போது 4 எஸ்யூவி கார் (SUV Car)-களுக்கான கான்செப்ட் (Concept)-களை மஹிந்திரா வெளியீடு செய்திருந்தது. இதில், விஷன் எஸ் (Vision S) என்கிற சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் கான்செப்ட்டும் ஒன்றாகும்.
இந்த நிலையில், விஷன் எஸ் கார் கான்செப்ட்டில் இருந்து உருவாக்கப்பட்ட கார் உத்தரகாண்ட் மாநிலத்தின் மணாலியில் பனி படர்ந்த மலைகளுக்கு நடுவே ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டத்தில் கார் முழுவதுமாக மறைக்கப்பட்டு இருந்தாலும், விஷன் எஸ் கான்செப்ட்டில் இருந்து கார் கிட்டத்தட்ட தயாரிப்பு நிலைக்கு வந்துவிட்டது போலவே தோற்றமளிக்கிறது.

ஆதலால், விஷன் எஸ் கான்செப்ட்டில் இருந்து வடிவமைக்கப்படும் மஹிந்திரா எஸ்யூவி காரின் உற்பத்தி பணிகள் 2027ஆம் ஆண்டின் துவக்கத்தில் துவங்கப்படும் என்றும், அதே ஆண்டில் இந்த காரின் அறிமுகம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நமக்கு கிடைக்கப்பெற்றுள்ள சோதனை ஓட்ட ஸ்பை படங்களின் மூலம் பார்க்கும்போது, இந்த கார் நாம் எதிர்பார்ப்பதை போலவே பெட்டகம் வடிவிலான தோற்றத்தில் இருக்கும்.
மேலும், நிமிர்ந்த உடலமைப்புடன், எந்தவொரு பாதைக்கும் கொண்டு செல்லக்கூடியதாகவும், முன்பக்கத்தில் பிக்ஸல்-டைப் எல்இடி விளக்குகளை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தற்போது சோதனை ஓட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள விஷன் எஸ் காரில் வட்ட வடிவிலான ஹெட்லேம்ப்களே இருப்பதை காணலாம். எங்களுக்கு தெரிந்தவரையில், இது வெறும் சோதனை பணிகளுக்காக தற்காலிகமாக பொருத்தப்பட்டதாகவே இருக்கும்.

இந்த காரின் ஜன்னல் கண்ணாடிகள் சதுர வடிவிலான ஜன்னல்கள் உடன், தடிமனான ஷோல்டர் லைன், பெரிய சக்கரங்கள் மற்றும் பறித்து இழுக்கக்கூடிய வகையிலான கதவு கைப்பிடிகள் உள்ளிட்டவற்றுடன் மாடர்ன் தரத்தில் உள்ளது. அப்படியே காரின் பின்பக்கத்திற்கு வந்தால் தடிமனான பில்லர்கள் மற்றும் டெயில்கேட்டில் பொருத்தப்பட்ட ஸ்பேர் சக்கரம் உள்ளிட்டவை காட்சித் தருகின்றன.
இந்த சோதனை ஓட்ட ஸ்பை படங்களில் விஷன் எஸ் கான்செப்ட்டின் உட்புறமும் காட்சியளிக்கிறது என்றாலும், அது இன்னும் முழுமை அடைந்த நிலையில் இல்லை. விஷன் எஸ் கான்செப்ட்டில் நேவி நீலம் மற்றும் கிரே நிறத்திலான இரட்டை நிற கேபின், டாஷ்போர்டில் இரட்டை-திரை செட்-அப் உள்ளிட்டவற்றை காண முடிந்திருந்தது.
இவற்றுடன், 'விஷன் எஸ்' பிராண்டிங் லோகோ உடன் 3-ஸ்போக் ஸ்டேரியங் சக்கரம், சில்வர் நிற சரவுண்டிங்ஸ் உடன் முக்கோண வடிவில் ஏசி காற்றுக்கான துளைகள் மற்றும் பளபளப்பான கருப்பு நிறத்தில் செண்டர் கன்சோல் பகுதி உள்ளிட்டவற்றையும் இந்த கான்செப்ட்டில் இருந்து உருவாக்கப்படும் காரில் எதிர்பார்க்கிறோம்.
என்ஜின் ஆப்ஷன்களை பொறுத்தவரையில், விஷன் எஸ் கான்செப்ட்டில் என்ன மாதிரியான என்ஜின் & கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை வழங்க போகிறோம் என்பதை மஹிந்திரா இன்னும் வெளியிடவில்லை. எங்களுக்கு தெரிந்தவரையில், மஹிந்திராவின் என்.யு ஐ.க்யூ (NU IQ) பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் இந்த காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் அதன் விஷன் எஸ் கான்செப்ட்டின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை வைத்துள்ளது. அந்த அளவிற்கு, எல்லாருக்குமான பட்ஜெட் விலையிலான காராக இதனை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. தற்போது சோதனை ஓட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு இருப்பினும், அறிமுகம் 2027ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தான் எதிர்பார்க்க முடியும்.


Click it and Unblock the Notifications








