தாரைப் போலவே குடும்பப் பயன்பாட்டிற்கு ஏற்ற புதிய காரை விற்பனைக்குக் கொண்டு வரும் மஹிந்திரா
சப்-4 மீட்டர் எஸ்யூவி பிரிவுக்கு புதிய கார் மூலம் புத்துணர்வு அளிக்கவுள்ளது மஹிந்திரா. கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தன்று இந்தியாவில் நான்கு புதிய கான்செப்ட் கார்களை மஹிந்திரா அறிமுகப்படுத்தியது. எஸ்யூவிக்களுக்குப் பெயர் போன அந்நிறுவனம், நான்கையுமே வெவ்வேறு வகையில் தனித்துவமான டிசைன் மற்றும் பயன்பாட்டுடன் வடிவமைத்திருந்தது.
அதில் ஒன்று 'விஷன் S' (Vision S) கான்செப்ட். சப்-4 மீட்டர் பிரிவில் வெளியிடும் நோக்கத்துடன் இந்த கான்செப்ட் காரை மஹிந்திரா உருவாக்கியிருந்தது. இந்நிலையில் தற்போது இந்தக் கார் அடிக்கடி சாலைகளில் சோதனை செய்யப்படும் போது ஸ்பைஷாட்டில் சிக்கி வருகிறது. மேலும், புதிதாக சோதனை செய்யப்படும் கார்கள், தயாரிப்பு நிலைக்கு அருகில் இருப்பது போல் இருக்கின்றன. இதனால் விரைவாகவே இந்தக் காரை மஹிந்திரா விற்பனைக்குக் கொண்டு வரவிருப்பதாகத் தெரிகிறது.

சப்-4 மீட்டர் எஸ்யூவி பிரிவில் ஏற்கனவே சில எஸ்யூவிக்களை மஹிந்திரா விற்பனை செய்து வருகிறது. அதில் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் தெரிந்த பிரபலமான கார் என்றால் XUV 3XO தான். இதனைத் தவிர்த்து தார் மற்றும் பொலேரோ ஆகிய சப்-4 மீட்டர் எஸ்யூவிக்களையும் மஹிந்திரா இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. அந்த வரிசையில் புதிதாக இணையவிருக்கிறது விஷன் S-ன் தயாரிப்பு நிலை வடிவம்.
எனக்கு மஹிந்திராவின் தார் மிகவும் பிடிக்கும். எனக்கு மட்டுமல்ல, தார் பிடிக்காத வாடிக்கையாளர்கள் மிகவும் குறைவு. ஆனால் அதனை வாங்கவோமா என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தார் குடும்பப் பயன்பாட்டிற்கு ஏற்ற முதன்மையான கார் கிடையாது. அதற்கான அம்சங்களை அது கொண்டிருக்கவில்லை. இந்த இடைவெளியை நிரப்பத் தான் விஷன் S மூலம் மஹிந்திரா முயல்கிறதோ எனத் தோன்றுகிறது.

தார் பிடிக்கும், ஆனால் குடும்பப் பயன்பாட்டிற்காக அதனை வாங்க முடியாதவர்கள், குடும்பப் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையிலான பயன்பாட்டு அம்சங்களுடன், தாரைப் போலவே பாக்ஸியான மற்றும் ரக்கடான டிசைன் கொண்ட காரான இந்தப் புதிய விஷன் S-ஐ பரிசீலனை செய்யலாம். மேலும் கான்செப்ட் வடிவில் விஷன் S மிரட்டலான ஒரு காராகவே இருந்தது. அதன் தயாரிப்பு நிலை வடிவம் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க இப்போதே ஆர்வம் அதிகமாகவே தான் இருக்கிறது.
இந்த விஷன் S எஸ்யூவியை NU_IQ என்ற புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கியிருக்கிறது மஹிந்திரா. இது புதிய பிளாட்ஃபார்ம் என்பதால், தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப மஹிந்திரா இதனை உருவாக்கியிருக்கிறது. அந்த வகையில், இந்தப் பிளாட்ஃபார்மை பெட்ரோல், டீசல், ஹைபிரிட் மற்றும் முழுமையான எலெக்ட்ரிக் என அனைத்து வகையான கார்களுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
எனவே பெட்ரோல் மற்றும் டீசலைத் தவிர்த்து, எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் விஷன் S எஸ்யூவியை கூட மஹிந்திராவிடமிருந்து நாம் எதிர்பார்க்கலாம். தற்போது இந்த விஷன் S எஸ்யூவியில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல இன்ஜின் தேர்வுகளை மஹிந்திரா பயன்படுத்தலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன. இதே இன்ஜின் தேர்வுகள் தான் XUV 3XO எஸ்யூவியிலும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
விலையை இப்போதே சொல்வது அல்லது இந்த விலையில் தான் இந்தக் கார் வெளியாகும் என யூகிப்பதும் கடினம் தான். ஏனெனில் இதன் வடிவமைப்பு அப்படி. தாரின் வடிவமைப்பை ஒற்று இருப்பதால், இதன் விலையும் அதனை ஒற்றே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சப்-4 மீட்டர் எஸ்யூவியாக இருந்தாலும், தாரைப் போலவே 10 லட்சம் ரூபாய் என்ற விலையில் தொடங்கி இந்த விஷன் S கான்செப்டின் தயாரிப்பு நிலை வடிவம் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விஷன் S என்ற இந்த ஒரு காரோடு மஹிந்திராவின் புதிய எஸ்யூவி அணிவகுப்பு நின்று விடாது. இன்னும் மூன்று கான்செப்ட் எஸ்யூவிக்களும் அதன் லைன்-அப்பில் இருக்கிறது. வரிசையாக ஒவ்வொன்றையும் அந்நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இப்போதைய ஹைலைட் விஷன் S தான். 2027ல் இதன் வெளியீடு எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications