மஹிந்திராவின் அடுத்த 'தார்' இதுதானா? விஷன் டி மாடலுக்கு காப்புரிமைக்கு விண்ணப்பம்
மஹிந்திரா நிறுவனத்தின் விஷன் டி என்ற புத்தம் புதிய டிசைனிலான எஸ்யூவி மாடலுக்கு காப்புரிமை பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு மஹிந்திரா நிறுவனம் தனது விஷன் 2027 என்ற நிகழ்ச்சியில் புதிய டிசைன் தாத்பரியங்களுடன் உருவாக்கப்பட்ட விஷன் டி கான்செப்ட் எஸ்யூவியை பொது பார்வைக்கு கொண்டு வந்தது. அப்போதே, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளையும், டிசைன் குறித்த பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த புதிய விஷன் டி எஸ்யூவியின் வடிவமைப்புக்கு தற்போது இந்தியாவில் காப்புரிமை (Design Patent) பதிவு செய்யப்பட்டிருப்பது ஆட்டோமொபைல் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட் மாடலின் வடிவமைப்பே உற்பத்தி நிலைக்கு உகந்த மாடலிலும் பெரும்பாலும் தொடரும் என்பதை இந்த காப்புரிமை படங்கள் மூலமாக உணர முடிகிறது.
'பாக்ஸி' டிசைன்
மஹிந்திரா நிறுவனத்தின் டிசைன் நம்பர். 469067-001 காப்புரிமை விண்ணப்பத்தில் இடம்பெற்றுள்ள அதிகாரப்பூர்வ வடிவமைப்பு படங்களைப் பார்த்தால், Vision T கான்செப்ட்டில் காணப்பட்ட முக்கிய தோற்ற அம்சங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட மாற்றமின்றி உள்ளது. செவ்வக வடிவிலான பாக்ஸி உடலமைப்பு, உயரமான நிலைப்பாடு, குறுகிய ஓவர்ஹேங்குகள், அகலமான வீல் ஆர்ச்சுகள், தட்டையான பானெட் மற்றும் ஆஃப்-ரோடு பயன்பாட்டை உணர்த்தும் வலுவான தோற்றம் ஆகியவை அப்படியே தொடர்கின்றன. இதனால் கான்செப்ட்டில் காணப்பட்ட அடையாள வடிவமைப்பை மஹிந்திரா உற்பத்தி மாடலிலும் அதிக அளவில் தக்கவைக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

புதிய கான்செப்ட் மாடல்கள்
கடந்த ஆண்டு சுதந்திரத் தினத்தன்று மஹிந்திரா நிறுவனம் தனது விஷன் 2027 நிகழ்ச்சியில் விஷன் டி மட்டுமின்றி, விஷன் எஸ், விஷன் எக்ஸ் மற்றும் விஷன் எஸ்எக்ஸ்டி ஆகிய மூன்று கான்செப்ட் நிலையிலான மாடல்களுடன் சேர்த்து அறிமுகப்படுத்தியது. இந்த நான்கு மாடல்களும் நிறுவனத்தின் புதிய NU_IQ மல்டி-எனர்ஜி என்ற புதிய பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மஹிந்திரா நிறுவனத்தின் எதிர்கால எஸ்யூவிகளுக்கான முன்னோட்டமாக வெளியிடப்பட்டன. இந்த புதிய கட்டமைப்புக் கொள்கையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், ஹைபிரிட் மற்றும் முழுமையான மின்சார பவர்டிரெயின்களை கொண்ட பல்வேறு புதிய மாடல்கள் உருவாக்கப்படும் என மஹிந்திரா தெரிவித்தது.

அடுத்த தலைமுறை தார்?
காப்புரிமை பெற்றுள்ள விஷன் டி வடிவமைப்பைப் பார்த்தவுடன் பலருக்கும் தார் நினைவுக்கு வருவது இயல்புதான். காரணம், நேராக நிமிர்ந்த உடலமைப்பு, வலுவான வீல் ஆர்ச்சுகள், ஆஃப்-ரோடு பயன்பாட்டை வலியுறுத்தும் வடிவமைப்பு மற்றும் சதுர வடிவ விளக்கு அமைப்பு போன்ற அம்சங்கள் அனைத்தும் தார் குடும்பத்தின் டிஎன்ஏ-வை பிரதிபலிக்கின்றன. இருப்பினும் இது தற்போதைய லேடர்-ஃப்ரேம் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தார் எஸ்யூவி போல அல்லாமல், புதிய NU_IQ 'மோனோகோக்' பிளாட்ஃபார்மில் உருவாகும் தனித்துவமான லைஃப்ஸ்டைல் எஸ்யூவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தார் குடும்பத்தின் அடுத்த தலைமுறை மாடலாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எரிபொருள் வகை
மஹிந்திரா இதுவரை Vision T-யின் தொழில்நுட்ப விவரங்களை முழுமையாக வெளியிடவில்லை. இருப்பினும், NU_IQ பிளாட்ஃபார்ம் பல்வேறு பவர்டிரெயின்களை ஆதரிப்பதால், இந்த எஸ்யூவி பெட்ரோல், டீசல், ஹைபிரிட் மற்றும் மின்சார பதிப்புகளுடன் அறிமுகமாகும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், ஆஃப்-ரோடு திறனை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக சில வேரியண்ட்களில் நான்கு சக்கர இயக்க (4WD) அமைப்பும் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

எப்போது அறிமுகம்?
தற்போது காப்புரிமை பதிவு செய்யப்பட்டிருந்தாலும், வாகனம் விரைவில் அறிமுகமாகும் என்பதற்கான உறுதியான தகவல் இல்லை. இருப்பினும், உற்பத்தி நிலை மாடலின் வடிவமைப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதை இது சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக கான்செப்ட் மாடலுக்கும் காப்புரிமை படங்களுக்கும் இடையே மிகக் குறைந்த மாற்றங்களே இருப்பதால், விஷன் டி உற்பத்தி மாடலும் இதே தோற்றத்தில் சந்தைக்கு வரும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
மஹிந்திரா வெளியிட்டுள்ள திட்டங்களின்படி, புதிய NU_IQ பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்ட வாகனங்கள் வரும் 2027 முதல் படிப்படியாக அறிமுகமாக உள்ளன. அதில் Vision S முதலில் வரலாம் என்றும், Vision T 2027 இறுதியில் அல்லது 2028 தொடக்கத்தில் சந்தைக்கு வரக்கூடும் என்றும் ஆட்டோமொபைல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. இந்த காப்புரிமை பதிவு மூலமாக மஹிந்திரா தனது திட்டத்தை குறித்த காலத்தில் செயல்படுத்துவதில் முனைப்புக் காட்டுவதை தெளிவுபடுத்துகிறது.


Click it and Unblock the Notifications
