இனி சாலைகளில் பார்க்கலாம் மஹிந்திரா XEV 9e! இருப்பதிலேயே ரொம்ப கம்மி விலையில் வாங்கினால் லுக் எப்படி இருக்கும்
இந்திய கார் பிரியர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பிரீமியம் தரத்திலான கூபே எலக்ட்ரிக் எஸ்யூவி காரான மஹிந்திரா XEV 9e, இறுதியாக விற்பனையகங்களை வந்தடையத் துவங்கியுள்ளது. பிரீமியம் அம்சங்கள், அசத்தலான செயல்திறன் மற்றும் நியாயமான விலை என சரியான கலவையில் உருவாகி இருக்கும் இந்த எலக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டான 'பேஸ் பேக் ஒன்' எக்ஸ்-ஷோரூம் விலை வெறும் ரூ.21.9 லட்சம் மட்டுமே எனும்போது யாருக்குத்தான் ஆவல் வராது?
மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் மற்றொரு எலெக்ட்ரிக் காரான XEV 9S குறைந்த விலையில் கிடைத்தாலும், இந்த XEV 9e தரும் அதே கவர்ச்சியையும் கம்பீரத்தையும் தந்துவிடுமா என்பது சந்தேகமே. இதன் சாய்வான கூபே மேற்கூரை வடிவமைப்பு, பிற சாதாரண எஸ்யூவி கார்களில் இருந்து இதனை முற்றிலும் தனித்துவப்படுத்தி காட்டுகிறது.

இதனால், சாலையில் செல்லும் அனைவரையும் XEV 9e திரும்பிப் பார்க்க வைக்கும். இந்த எலக்ட்ரிக் காரின் பேஸ் வேரியண்ட்டில் பிரம்மாண்டமான 19-இன்ச் ஸ்டைலைஸ்டு ஸ்டீல் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன. இந்த சக்கரங்கள் அலாய் சக்கரங்கள் போன்று இருந்தாலும் இவை உண்மையில் அலாய் சக்கரங்கள் இல்லை.
எல்இடி ஹெட்லைட்கள், முன்பக்க ஃபாக் விளக்குகள், கண்களைக் கவரும் கனெக்டட் எல்இடி டிஆர்எல்-கள் மற்றும் டெயில் லைட்கள் என முன்பக்கத்தில் ஆடம்பர அம்சங்கள் நிறைந்துள்ளன. பயணங்களின் போது கூடுதல் பொருட்களை எடுத்துச் செல்ல ஏதுவாக, இந்த காரில் 663 லிட்டர் கொள்ளளவில் பெரிய பூட் ஸ்பேஸ் மற்றும் முன்பக்கத்தில் 150 லிட்டர் கொள்ளளவில் தனியாக ஃபிராங்க் இடவசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இரண்டாவது வரிசை இருக்கைகளை மடக்கிக் கொள்ளும் வசதி, பறித்து இழுக்கக்கூடிய கதவு கைப்பிடிகள், தானியங்கி ஹெட்லைட்கள், மழையை உணர்ந்து செயல்படும் வைப்பர்கள் மற்றும் ரிவர்ஸ் கேமரா போன்ற ஆச்சரியமூட்டும் அம்சங்களும் இந்த ஆரம்ப வேரியண்ட்டிலேயே வழங்கப்பட்டுள்ளன என்பது உங்களை வியப்பில் ஆழ்த்தும். இந்த காரின் உட்புறம் ஒரு விண்கலத்திற்குள் நுழைந்தது போன்ற உணர்வைத் தருகிறது.
ஆம், இதன் டேஷ்போர்டில் 12.3-இன்ச்சில் மூன்று திரைகள் ஸ்டாண்டர்டாக அமைகின்றன என்பது பெரும் ஆச்சரியமே. ஓட்டுநர் தனது கவனத்தைச் சிதறவிடாமல் இருக்க பிரத்யேக ஃபில்டர் வசதியுடன் கூடிய மூன்றாவது திரை முன் இருக்கை பயணிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒளிரும் லோகோ உடன் கூடிய பிரத்யேக ஸ்டீயரிங் சக்கரம், க்ரூஸ் கண்ட்ரோல், பேடில் ஷிஃப்டர்கள் மற்றும் அதிரடி பூஸ்ட் மோட் ஆகியவை டிரைவிங்கின் மகிழ்ச்சியைப் பல மடங்கு உயர்த்துகின்றன.
சாஃப்ட்-டச் மெட்டீரியல்கள் கொண்ட ஆர்ம்ரெஸ்ட், கூல்டு ஸ்டோரேஜ், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே, மற்றும் பின் இருக்கை பயணிகளுக்கான பிரத்யேக ஏசி வென்ட்டுகள், இரு 65 வாட்ஸ் டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜர்கள் என சகல வசதிகளும் இந்த காரில் நிறைந்துள்ளன. XEV 9e காரின் பேக் ஒன் வேரியண்ட்டில் 59 kWh பேட்டரி பேக் பொருத்தப்படுகிறது.
இந்த பேட்டரி பேக் ஒரே சார்ஜில் 542கிமீ ரேஞ்ச் தரும் என மஹிந்திரா உறுதி அளிக்கிறது. இதன் ரியர்-வீல் டிரைவ் மோட்டார் 228 பிஎச்பி ஆற்றலையும், 380 என்.எம் டார்க் திறனையும் வாரி வழங்குகிறது. XEV 9S காரின் பேஸ் வேரியண்ட்டில் 79kWh பேட்டரி வழங்கப்படும் வேளையில், XEV 9e பேஸ் வேரியண்ட்டில் தற்போதைக்கு 59kWh பேட்டரி மட்டுமே கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனத்தில் XEV 9S எலெக்ட்ரிக் கார் இன்னும் 2 லட்ச ரூபாய் அளவிற்கு குறைவான விலையில் கிடைத்தாலும், XEV 9e எலெக்ட்ரிக் காரின் பிரீமியம் தோற்றத்திற்கு ஈடாக வராது என்பது தற்போது டீலர்ஷிப் ஷோரூமுக்கு வர துவங்கியிருக்கும் பேக் ஒன் வேரியண்ட்டை பார்த்தாலே தெரிகிறது. அதிநவீன தொழில்நுட்பமும், சொகுசும் நிறைந்த இந்த புதிய எலக்ட்ரிக் கூபே எஸ்யூவி காரை வரும் நாட்களில் நேரில் சாலைகளில் காணலாம்.


Click it and Unblock the Notifications