மஹிந்திரா XEV 9S காரின் 6 சீட்டர் மாடல் அறிமுகம்: வசதியாக பயணிக்க 'கேப்டன்' இருக்கைகளுடன் புதிய தேர்வு!
மஹிந்திரா எக்ஸ்வி 9எஸ் எலெக்ட்ரிக் காரில் 6 சீட்டர் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நடுவரிசையில் 3 பேர் அமர்வதற்கான பென்ச் இருக்கை அமைப்புக்கு பதிலாக கேப்டன் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், 6 பேர் வசதியாக அமர்ந்து பயணிக்கும் வாய்ப்பை இந்த புதிய மாடல் வழங்கும்.
இந்த புதிய மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காரின் 6 சீட்டர் மாடலானது Pack Two Above, Pack Three மற்றும் Pack Three Above வேரியண்ட்டுகளில் கிடைக்கும். Pack One Above என்ற ஆரம்ப விலை வேரியண்ட்டானது தொடர்ந்து 7 சீட்டர் மாடலில் மட்டுமே கிடைக்கும்.

விலை குறைவான 6 சீட்டர் பேஸ் வேரியண்ட்டானது 7 சீட்டர் வேரியண்ட்டைவிட ரூ.25,000 கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர வேரியண்ட்டுகள் அதன் இணையான 7 சீட்டர் வேரியண்ட்டைவிட ரூ.20,000 கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் காரின் 6 சீட்டர் மாடலின் 70kWh பேட்டரியுடன் கூடிய Pack Two Above பேஸ் வேரியண்ட்டிற்கு ரூ.25.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

இதுவே 79kWh பேட்டரி கொண்ட Pack Two Above வேரியண்ட்டிற்கு ரூ.26.15 லட்சமாகவும், Pack Three விலை ரூ.28.05 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன் டாப் வேரியண்ட்டான Pack Three Above 79kWh மாடலின் விலை ரூ.30.15 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலைகளில் 11.2kW AC வீட்டு சார்ஜருக்கான கட்டணம் சேர்க்கப்படவில்லை.
இந்த புதிய மாடலின் முக்கிய மாற்றமாக இரண்டாவது வரிசையில் இரு தனித்தனி கேப்டன் சீட்டுகள் உள்ளன. அதனுடன் தனிப்பட்ட ஆர்ம்ரெஸ்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டு சீட்களுக்கு இடையே இடைவெளி இருப்பதால் மூன்றாவது வரிசைக்கு எளிதாக செல்லும் வாய்ப்பும் உள்Mளது.
அடுத்து 7 சீட்டர் மாடலில் நடுவரிசையில் மூன்று பேர் அமரும் பென்ச் இருக்கை இருப்பதால், மூன்றாவது வரிசைக்கு செல்ல வேண்டுமென்றால் சீட்டை நகர்த்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.
புதிய 6 சீட்டர் மாடலில் இந்த பிரச்சினை ஓரளவு குறையும். குறிப்பாக குழந்தைகள் அல்லது வயதானவர்கள் மூன்றாவது வரிசையை அடிக்கடி பயன்படுத்தும் குடும்பங்களுக்கு இந்த மாற்றம் நடைமுறையில் பயனுள்ளதாக இருக்கும்.
இருக்கை அமைப்பு மாறினாலும் புதிய எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச், பவர் போன்றவற்றில் மாறுதல்கல் இல்லை. இந்த எஸ்யூவி 59kWh, 70kWh மற்றும் 79kWh பேட்டரி ஆப்ஷன்களுடன் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
இதன் 59kWh பேட்டரி மாடல் 521 கி.மீ., 70kWh மாடல் 600 கி.மீ. மற்றும் 79kWh மாடல் அதிகபட்சமாக 679 கி.மீ. MIDC சோதனைகளின் சான்றுபடி ரேஞ்ச் குறிப்பிடப்படுகிறது. அடுத்து 79kWh பேட்டரி கொண்ட உயர்நிலை மாடலில் 286எச்பி பவர் மற்றும் 380என்எம் டார்க்கையும் வழங்கும். அனைத்து மாடல்களிலும் ரியர் வீல் டிரைவ் அமைப்பு உள்ளது.
இதன் எக்ஸ்இவி 9எஸ் உயர்நிலை வேரியண்ட்டுகளில் மூன்று 12.3 அங்குலத்தில் 3 திரைகள் கொண்ட டேஷ்போர்டு, பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உள்ளிட்ட அம்சங்கள் தொடர்கின்றன. சில வேரியண்ட்டுகளில் வென்டிலேட்டட் இரண்டாவது வரிசை இருக்கைகள், இரண்டாவது வரிசைக்கு சன்ஷேடுகள் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.


Click it and Unblock the Notifications

