வெறும் ரூ.12.65 லட்சத்தில் மஹிந்திரா XEV 9S 7 சீட்டர் எலெக்ட்ரிக் கார் வாங்கலாம்!!
எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் சந்தைப் போட்டி கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப வாடிக்கையாளர்களை கவரும் திட்டங்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மஹிந்திரா நிறுவனம் தனது பிரீமியம் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களான XEV 9S மற்றும் XEV 9e ஆகிய கார்களுக்கு பேட்டரிக்கு தனி நிதி திட்டத்தை (BaaS) அறிவித்துள்ளது. ஏற்கனவே BE 6 Sporteq மாடலில் வழங்கப்பட்டு வந்த இந்த நிதித் திட்டம், இப்போது நிறுவனத்தின் அனைத்து எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களுக்கும் கிடைக்கிறது.
இதன்படி, மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் காரை ரூ.12.65 லட்சம் ஆரம்ப விலையிலும், எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காரை ரூ.13.90 லட்சம் ஆரம்ப விலையிலும், பிஇ6 ஸ்போர்டெக் காரை ரூ.11.45 லட்சத்திலும் வாங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. புதிய BaaS திட்டத்தின் மூலம் காரின் ஆரம்ப விலையிலிருந்து பேட்டரியின் விலையை தனியாகப் பிரித்து கடன் உதவி அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக, காரை வாங்குவதற்கான ஆரம்ப முதலீட்டுத் தொகை கணிசமாகக் குறைகிறது.

குறிப்பாக, மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காருக்கு சாதாரண முறையில் பேட்டரியுடன் சேர்த்து காரை வாங்குவதை விட, இந்த திட்டத்தில் ஆரம்ப விலை ரூ.8 லட்சம் வரை குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த BaaS முறையானது பேட்டரியை வாடகைக்கு எடுக்கும் திட்டம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த BaaS திட்டத்தை தேர்வு செய்யும் செவாடிக்கையாளர்களுக்கு காருக்கும், பேட்டரிக்கும் தனித்தனியாக இரண்டு கடன்கள் வழங்கப்படுகிறது. எனவே, இரண்டு மாதத் தவணையை செலுத்தும் முறையாக இருக்கும். மஹிந்திரா அறிவித்துள்ள கணக்கீட்டின்படி, பேட்டரிக்கான மாதத் தவணை ரூ.6,975ல் இருந்து தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் சராசரியாக 60 கி.மீ தூரம் பயணிப்பதை கணக்கில் வைத்து மாதத்திற்கு 1,860 கிமீ என்ற பயன்பாட்டை கணக்கிட்டு ஒரு கிலோமீட்டருக்கு ரூ.3.75 வீதம் கணக்கிடப்பட்டு இருக்கிறது.

இருப்பினும், வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் பேட்டரி திறன், முன்பணம் மற்றும் கடன் திருப்பிச் செலுத்தும் காலத்தைப் பொறுத்து இந்த மாதத் தவணை தொகை மாறுபடும். இந்த BaaS திட்டத்தின் கீழ் பேட்டரிக்கான சார்ஜர், சாலை வரி, காப்பீடு மற்றும் டிசிஎஸ் வரி ஆகியவற்றை தனியாக செலுத்த வேண்டிருக்கும். இதில் சேர்க்கப்படவில்லை என்றும் தெளிவுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா XEV 9S எலெக்ட்ரிக் கார் தற்போது 6 மற்றும் 7 சீட்டர் மாடல்களில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 6 சீட்டர் பதிப்பில் இரண்டாவது வரிசையில் கேப்டன் சீட்டுகள் உள்ளன. இதனால் குடும்ப பயன்பாடு மற்றும் நீண்ட தூர பயணத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வு கிடைத்துள்ளது.
மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் 7 சீட்டர் எலெக்ட்ரிக் காரில் முழு சார்ஜிற்கு 521 கிமீ ரேஞ்ச் தரும் 59 kWh, 600 கிமீ ரேஞ்ச் தரும் 70kWh மற்றும் 679 கிமீ ரேஞ்ச் தரும் 79 kWh என வாடிக்கையாளர்களின் பயன்பாட்டுக்கு ஏற்றாற்போல் பலதரப்பட்ட பேட்டரி பேக் தேர்வுகளுடன் கிடைக்கின்றன. எக்ஸ்இவி 9இ காரில் 542 கிமீ ரேஞ்ச் தரும் 59kWh மற்றும் 656 கிமீ ரேஞ்ச் தரும் 79kWh பேட்டரி தேர்வுகள் உள்ளன. மஹிந்திரா பிஇ6 ஸ்போர்டெக் எலெக்ட்ரிக் காரில் 573 கிமீ ரேஞ்ச் தரும் 59kWh 651 கிமீ ரேஞ்ச் தரும் 70kWh மற்றும் 708 கிமீ ரேஞ்ச் தரும் 79kWh பேட்டரி தேர்வுகளில் கிடைக்கிறது.
நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மஹிந்திரா XEV 9S எலெக்ட்ரிக் கார் இந்தியாவின் அதிகம் விற்பனையான எலெக்ட்ரிக் கார்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது, முதல் ஆறு மாதங்களில் மட்டும் 18,074 யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன. அதிக ரேஞ்ச், அதிநவீன கேபின் டிசைன், மூன்று டிஜிட்டல் டிஸ்ப்ளே வசதி, மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சிறந்த ஓட்டுதல் அனுபவத்தை வழங்கும் சஸ்பென்ஷன் ஆகியவை இந்த கார்களின் சிறப்பம்சங்களாக கூறலாம்.
இந்த நிலையில், இந்த சிறப்பு நிதி உதவித் திட்டங்கள் மூலமாக மஹிந்திராவின் எக்ஸ்இவி 9எஸ், எக்ஸ்இவி 9இ ஆகிய கார்களின் விற்பனையில் கூடுதல் ஏற்றம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எம்ஜி தோமஹாக் எலெக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் கார்களின் வருகையும் உடனடியாக இந்த திட்டத்தை மஹிந்திரா செயல்பாட்டுக்கு கொண்டு வந்ததற்கான காரணமாகவும் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

