மஹிந்திராவை போட்டிக்கு கூப்பிடும் எம்ஜி... ரூ.25 லட்சத்தில் சொகுசு காரை அறிமுகம் செய்ய திட்டம்!
JSW MG மோட்டார் நிறுவனம் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'அடாப்ட்' (ADAPT) என்கிற புதிய பிளாட்ஃபாரத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பிளாட்ஃபாரத்தில் இருந்து எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமின்றி, ஹைப்ரீட் கார்களையும் உருவாக்கி அறிமுகம் செய்ய MG நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, மஹிந்திராவின் XEV 9S எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக ஒரு எலெக்ட்ரிக் கார் இந்த பிளாட்ஃபாரத்தில் இருந்து வெளிவர உள்ளது.
இதில் ஆச்சிரியமான தகவல் என்னவென்றால், மஹிந்திராவுக்கு போட்டியாக கொண்டுவரப்படும் இந்த புதிய MG எலெக்ட்ரிக் கார் ஆனது அடுத்த ஆகஸ்ட் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, இன்னும் ஒரு மாதத்தில் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளதாம்.

அப்படியென்றால், இந்த புதிய எலெக்ட்ரிக் காரை உருவாக்க MG நிறுவனம் ஏற்கனவே துவங்கிவிட்டதா? என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். மஹிந்திரா XEV 9S எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக கொண்டுவரப்படும் MGயின் இந்த எலெக்ட்ரிக் கார் ஆனது புதியதாக உருவாக்கப்பட்டதாக இல்லாமல், இந்தோனிஷியா நாட்டில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் வுலிங் எக்சியன் எலெக்ட்ரிக் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக இருக்கும்.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், வுலிங் எக்சியன் எலெக்ட்ரிக் காரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அப்படியே இந்திய சந்தையில் MG பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்படலாம். வுலிங் ஆனது சீனாவை சேர்ந்த எலெக்ட்ரிக் கார் நிறுவனம் ஆகும். ஆனால், MG மோட்டார் பிரிட்டிஷ் நாட்டில் தோன்றிய நிறுவனம் ஆகும்.

அப்படியென்றால், இவை இரண்டிற்கும் இடையே எப்படி பிணைப்பு ஏற்பட்டது என கேட்டால், MG மோட்டார் நிறுவனம் சீனாவை சேர்ந்த மிகப் பெரும் SAIC குழுமத்தின் கீழ் செயல்படுகிறது. இதே SAIC குழுமத்தின் கீழ்தான் வுலிங் நிறுவனமும் செயல்படுகிறது. ஆதலால், இந்த இரு நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று கார் பாகங்களை பரிமாறிக் கொள்வதில் பெரியதாக பிரச்சனை இருக்காது.
நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, MGயின் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் ஆனது நிமிர்ந்த தோற்றம் கொண்ட எலெக்ட்ரிக் SUV ரக காராக ரூ.25 லட்சத்தில் ஆரம்ப விலையை கொண்டதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள மஹிந்திரா XEV 9S எலெக்ட்ரிக் கார் 70kWh பேட்டரி உடன் ரூ.25.8 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த மஹிந்திரா எலெக்ட்ரிக் காரில் 59kWh மற்றும் 79kWh பேட்டரி பேக் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. வுலிங் எக்சியனில் இருந்து உருவாக்கப்படும் MGயின் புதிய எலெக்ட்ரிக் காரில் 69kWh திறன் கொண்ட பேட்டரி வழங்கப்படலாம். இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 600கிமீ தொலைவிற்கு இயங்கும் வகையில் வழங்கப்படும்.
XEV 9S காரில் வழங்கப்படும் எலெக்ட்ரிக் மோட்டார் ஆனது அதிகப்பட்சமாக 245 எச்பி மற்றும் 380 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும் நிலையில், வுலிங் எக்சியன் காரின் சிங்கிள் எலெக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 201 எச்பி மற்றும் 380 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்துகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வுலிங் எக்சியன் காரின் அடிப்படையிலான எலெக்ட்ரிக் கார் தான் MG நிறுவனத்தில் இருந்து அறிமுகம் செய்யப்படும். மாறாக, எக்சியன் கார் அப்படியே MG பிராண்டில் அறிமுகம் செய்யப்படாது. ஏனெனில், MGயின் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் ஆனது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அடாப்ட் பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டதாகவே இருக்கும். ஆனால், வுலிங் எக்சியன் ஆனது வேறொரு SAIC பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications