ரூ.9.99 லட்சத்தில் மஹிந்திரா XUV 3XO சிஎன்ஜி கார் அறிமுகம்! டர்போ எஞ்சின், இரட்டை சிலிண்டர் வசதி!
இந்தியாவில் கார் வாங்க நினைப்பவர்களிடம் பெட்ரோல் செலவைக் குறைப்பதற்கான மாற்று எரிபொருள் வாகனங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில், மஹிந்திரா நிறுவனம் தனது பிரபலமான XUV 3XO எஸ்யூவியின் சிஎன்ஜி (CNG) மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.9.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பெட்ரோல், டீசல் மற்றும் மின்சார வாகனமாகக் கிடைத்த XUV 3XO வரிசையில், தற்போது சிஎன்ஜி தேர்வும் இணைந்துள்ளது. குறைந்த எரிபொருள் செலவில் எஸ்யூவி தோற்றத்தையும் நவீன வசதிகளையும் விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்தப் புதிய மாடல் கூடுதல் தேர்வாக அமையும். டாடா நெக்ஸான் சிஎன்ஜி, மாருதி பிரெஸ்ஸா சிஎன்ஜி ஆகியவற்றுக்கு போட்டியாக இந்த புதிய மாடல் களமிறங்கியுள்ளது.

வடிவமைப்பு மற்றும் வசதிகள்
புதிய XUV 3XO சிஎன்ஜி மாடலின் வெளிப்புற வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. வழக்கமான மாடலில் இடம்பெறும் எல்இடி பகல்நேர விளக்குகள், இரட்டை வண்ண அலாய் சக்கரங்கள், பக்கவாட்டு கண்ணாடிகளில் இண்டிகேட்டர்கள் உள்ளிட்ட அம்சங்கள் இதில் தொடர்கின்றன. தோற்றத்தில் இது வழக்கமான XUV 3XO மாடலைப் போன்றே உள்ளது.
உட்புறத்திலும் ஏற்கெனவே உள்ள வடிவமைப்பே தொடர்கிறது. 10.25 அங்குல தொடுதிரை தகவல் மற்றும் பொழுதுபோக்கு அமைப்பு, 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், சன்ரூஃப், 2 ஸோன் குளிர்சாதன வசதி ஆகியவை குறிப்பிடத்தக்க அம்சங்களாக உள்ளன. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருளுக்கு இடையே மாறுவதற்கான தனி சுவிட்சும் வழங்கப்பட்டுள்ளது.
இரட்டை சிலிண்டர் அமைப்பு
இந்தக் காரில் சிஎன்ஜி எரிபொருள் சேமிப்புக்காக இரட்டை சிலிண்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலிண்டர்கள் பூட்ரூமில் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரே பெரிய சிலிண்டரைப் பயன்படுத்தும் அமைப்புடன் ஒப்பிடும்போது, பொருட்களை வைப்பதற்கான இடத்தை ஓரளவுக்குப் பயன்படுத்த முடியும்.
இருப்பினும், ஏற்கெனவே குறைவான கொள்ளளவு கொண்ட பூட்ரூம் இடத்தில் சிஎன்ஜி எரிபொருள் சிலிண்டர்கள் பொருத்தப்படுவதால், பொருட்களை வைக்கும் இடம் குறைவாக இருக்கிறது. குடும்பத்துடன் பயணம் செய்பவர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அன்றாடப் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் இந்த அமைப்பை உருவாக்கியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
டர்போ எஞ்சின்
மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO மாடலானது 1.2 லிட்டர் TMPFI பெட்ரோல் எஞ்சின், 1.2 லிட்டர் TGDI டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் ஏற்கனவே கிடைக்கிறது. ஆனால், சிஎன்ஜி மாடலில் 1.2 லிட்டர் (TMPFI) டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெட்ரோலில் இயங்கும்போது இந்த எஞ்சின் 111 எச்பி திறனையும் 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சிஎன்ஜியில் இயங்கும்போது 114 எச்பி திறன் மற்றும் 200 என்எம் டார்க் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சிஎன்ஜி மாடல் அதிக திறனை வெளிப்படுத்துவதாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இரண்டு எரிபொருளிலும் சிறப்பாகச் செயல்படும் வகையில் டர்போ சார்ஜர் அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களும், தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக மஹிந்திரா தெரிவிக்கிறது. மேலும், 10 பார் அழுத்தத்தில் சிஎன்ஜியை உட்செலுத்தும் தொழில்நுட்பம் இந்த மாடலில் இடம்பெறுகிறது. இது எரிபொருள் எரியும் திறனை மேம்படுத்தவும், மாசு வெளியேற்றத்தைக் குறைக்கவும் உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது.
விலை விபரம்
மஹிந்திரா XUV 3XO சிஎன்ஜி மாடலின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.9.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி மாடலின் ஆரம்ப விலை ரூ.9.30 லட்சமாகவும், டாடா நெக்ஸான் சிஎன்ஜியின் ஆரம்ப விலை ரூ.8.35 லட்சமாகவும் உள்ளது. எனவே, விலை அடிப்படையில் மஹிந்திராவின் இந்த முதல் சிஎன்ஜி கார் போட்டியாளர்களைவிட சற்று அதிக விலையில் களமிறங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications


