இரண்டிற்கும் 1 லட்சம் ரூபாய் விலை வித்தியாசம்... மஹிந்திராவின் புதிய எலக்ட்ரிக் காரை எப்படி வாங்குவது பெஸ்ட்?
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் தனது புதிய எலக்ட்ரிக் காராக 'எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி' (XUV 3XO EV)-ஐ மிக சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல், முன்னதாக அறிமுகமான எக்ஸ்யூவி400 (XUV400) எலெக்ட்ரிக் காருக்கு பதிலாக நவீன அம்சங்களுடன் களமிறக்கப்பட்டுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.13.89 லட்சம்- ரூ.15.46 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய மஹிந்திரா எலெக்ட்ரிக் கார் டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) எலெக்ட்ரிக் காருக்கு நேரடிப் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நகரப் பயணங்களை விரும்புபவர்களுக்காக இந்த எஸ்யூவி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி ஆனது ஏ.எக்ஸ்5 (AX5) மற்றும் ஏ.எக்ஸ்7எல் (AX7L) என இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று எந்த அளவிற்கு வேறுப்படுகின்றன என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

ஏ.எக்ஸ்5 வேரியண்டில் சிங்கிள்-பேன் சன்ரூஃப், 10.25 இன்ச் இரட்டைத் திரை அமைப்பு (இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர்), இன்-பில்ட் அலெக்ஸா உடன் கூடிய அட்ரெனோக்ஸ் (AdrenoX) சிஸ்டம் ஆகியவை சிறப்பம்சங்களாக கிடைக்கும். மேலும், ஆன்லைன் நேவிகேஷன், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே இணைப்பு வசதிகளும் இந்த வேரியண்டில் வழங்கப்பட்டுள்ளன.
ஓட்டுநர் மற்றும் பயணிகளின் வசதிக்காக டூயல்-சோன் க்ளைமேட் கன்ட்ரோல், ரியர்-வியூ கேமரா, லெதரெட் ஸ்டீயரிங் சக்கரம், ஆறு ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், சாவியில்லாமல் காரினுள் நுழையும் வசதி, புஷ்-பட்டன் ஸ்டார்ட், உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை, பின் இருக்கை வரிசையில் கப் ஹோல்டருடன் கூடிய ஆர்ம்ரெஸ்ட் & ஏசி வென்ட்கள் ஆகியவற்றையும் இந்த காரின் ஏஎக்ஸ்5 வேரியண்ட்டில் பெறலாம்.

பாதுகாப்பு அம்சங்களாக ஆறு ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் (EPB) மற்றும் ஆட்டோ ஹோல்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), க்ரூஸ் கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவை இந்த வேரியண்ட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. வெளிப்புறத்தில் 16-இன்ச் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்கள், டர்ன் இண்டிகேட்டர்களாகவும் செயல்படும் எல்இடி டிஆர்எல்-கள் மற்றும் கனெக்டட் எல்இடி டெயில் லைட்கள் ஆகியவை இந்த விலை குறைவான வேரியண்ட்டில் கிடைக்கும்.
ஆட்டோமேட்டிக் ஆக செயல்படும் ஹெட்லைட்கள், சென்சார்கள் மூலம் மழை பெய்வதை உணர்ந்து செயல்படும் வைப்பர்கள், மின்சாரம் மூலம் மடக்கக்கூடிய வெளிப்பக்க ORVM-கள், ரியர் வைப்பர் & வாஷர், ரூஃப் ரெயில்கள், ரியர் ஸ்பாய்லர், ரியர் டிஃபாகர் போன்ற அம்சங்களும் பயண அனுபவத்தை மேம்படுத்தும்.
இதுதவிர, பின் இருக்கை வரிசையில் மத்தியில் அமர்பவருக்கான அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட், ஓட்டுநர் பக்கத்தில் ஒன்-டச் பவர் விண்டோ, 60:40 என்கிற விகிதத்தில் பிரிக்கக்கூடிய பின் இருக்கை வரிசை, வயர்லெஸ் சார்ஜர், முன் & பின்பக்க USB போர்ட்கள் மற்றும் 3.3kW சார்ஜர் யூனிட்டும் ஏஎக்ஸ்5 வேரியண்டில் அடங்குகின்றன.

புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி எலெக்ட்ரிக் காரின் ஏஎக்ஸ்7எல் வேரியண்ட் ஆனது ஏஎக்ஸ்5 வேரியண்ட்டில் கிடைக்கும் அம்சங்களுடன் கூடுதலாக பல மேம்பாடுகளைக் கொண்டுள்ளது. லெவல்-2 அடாஸ் (ADAS) (அட்வான்ஸ்டு டிரைவர் உதவி சிஸ்டம்), பிளைண்ட்-வியூ மானிட்டர் உடன் கூடிய 360-டிகிரி கேமரா, பனோரமிக் சன்ரூஃப், ஆம்ப்ளிஃபையர் & சப்வூஃப்பர் உடன் கூடிய 7-ஸ்பீக்கர் ஹர்மான் கார்டன் சவுண்ட் சிஸ்டம் மற்றும் டால்பி அட்மாஸ் ஆகியவை குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஆகும்.
டேஷ்போர்டு மற்றும் உட்புற கதவு பேனல்களில் மென்மையான லெதரெட்கள், லெதரெட் இருக்கைகள், சற்று பெரியதாக 17-இன்ச் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள், ஆட்டோ-டிம்மிங் IRVM, எல்இடி முன்பக்க ஃபாக் விளக்குகள், குளிரூட்டப்பட்ட மற்றும் ஒளியூட்டப்பட்ட க்ளோவ் பாக்ஸ், மேக்கப் கண்ணாடியுடன் கூடிய ஒளியூட்டப்பட்ட சன் விசர் மற்றும் 65W USB-C சார்ஜிங் வசதியும் இதில் உண்டு.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் கடந்த 2024ஆம் ஆண்டில் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரை முன்பு விற்பனையில் இருந்த எக்ஸ்யூவி300 காருக்கு மாற்றாக அறிமுகம் செய்தது. அதேபோன்று, எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் இடத்தை நிரப்பும் பொருட்டு எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இரண்டே இரண்டு வேரியண்ட்களில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், இந்த இரண்டில் எந்த வேரியண்ட்டில் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி காரை வாங்குவது என்பதில் உங்களுக்கு பெரியதாக குழப்பம் இருக்காது என நினைக்கிறோம்.


Click it and Unblock the Notifications









