ரூ.9.39 லட்சத்தில் புதிய மஹிந்திரா XUV 3XO REVX வரிசை அறிமுகம்... சன்ரூஃப் முதல் ஆட்டோமேட்டிக் வரை!
இந்திய காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் ஏற்கனவே கவனம் பெற்றுள்ள மஹிந்திரா XUV 3XO மாடலின் REVX வரிசை தற்போது மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. புதிய REVX EDGE மற்றும் REVX EDGE (O) ஆகிய இரண்டு வேரியண்ட்களை மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது. இதன் ஆரம்ப விலை எக்ஸ்ஷோரூம் விலை ரூ.9.39 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
இதுவரை அதிக விலை கொண்ட வேரியண்ட்டுகளில் கிடைத்த சில முக்கிய வசதிகள் தற்போது இந்த புதிய வேரியண்ட்டுகளில் அதனைவிட குறைந்த விலையில் கிடைக்கும்.

குறிப்பாக, REVX EDGE வேரியண்ட்டில் 26.03 செ.மீ HD டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, க்ரூஸ் கண்ட்ரோல், ரியர் வியூ கேமரா, செயற்கை லெதர் கொண்ட இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.
வெளிப்புற தோற்றத்திலும் REVX EDGE தனித்துவமான சில மாற்றங்களை பெறுகிறது. டூயல்-டோன் ரூஃப், பாடி-கலர் கிரில் மற்றும் பிளாக் வீல் கவர்கள் ஆகியவை இந்த வேரியண்ட்டின் முக்கிய வடிவமைப்பு அம்சங்களாக உள்ளன.
இதன் அடுத்த நிலையான REVX EDGE (O) வேரியண்ட்டின் முக்கிய அம்சங்களாக பனோரமிக் சன்ரூஃப் இடம்பெற்றுள்ளது. இதன் பெட்ரோல் மேனுவல் வேரியண்ட் ரூ.9.89 லட்சத்திலிருந்து கிடைக்கிறது. இதனால் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான எக்ஸ்ஷோரூம் விலையில் XUV 3XO எஸ்யூவியில் பனோரமிக் சன்ரூஃப் கொண்ட வேரியண்ட்டை தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது.
இதனுடன் ரூஃப் ரெயில்கள், எலக்ட்ரிக் ஃபோல்டு வசதியுடன் ரியர் வியூ மிரர்கள், புஷ்-பட்டன் ஸ்டார்ட், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள் மற்றும் ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் உள்ளிட்ட வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
எஞ்சின் தேர்வுகளிலும் மஹிந்திரா மாற்றம் செய்துள்ளது. புதிய REVX EDGE வரிசையில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகிறது. பெட்ரோல் எஞ்சினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும், டீசல் மாடலில் மேனுவல் மற்றும் AMT தேர்வுகளும் உள்ளன.
இதனுடன் REVX M(O) வேரியண்ட்டிலும் புதிய பெட்ரோல் ஆட்டோமேட்டிக் தேர்வு சேர்க்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.9.99 லட்சமாக உள்ளது. இதன் மூலம் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் XUV 3XO REVX வரிசையில் ஆட்டோமேட்டிக் காரை தேர்வு செய்யும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.
புதிய வேரியண்ட்டுகள் அறிமுகத்துடன் XUV 3XO எஸ்யூவியின் மொத்த வேரியண்ட் தேர்வுகளிலும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. சில பழைய வேரியண்ட்டுகள் நீக்கப்பட்டு, புதிய REVX EDGE மாடல்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், XUV 3XO அறிமுகமான இரண்டரை ஆண்டுகளுக்குள் 2.5 லட்சத்திற்கும் அதிகமான விற்பனையை கடந்துள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. புதிய REVX EDGE வரிசையின் மூலம் XUV 3XO எஸ்யூவியில் அதிக வசதிகளை குறைந்த விலை வேரியண்ட்டுகளில் பெறும் வாய்ப்பை மஹிந்திரா வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.


Click it and Unblock the Notifications


