அதிக மைலேஜ் கொடுக்கும் வகையில் புதிய CNG காரை களமிறக்கும் நிறுவனம்.. என்ன கார்னு தெரியுமா?
மாருதி, டாடா மோட்டார்ஸ், டொயோட்டா, ரெனோ, நிஸான் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து மஹிந்திராவும் CNG மார்க்கெட்டில் கால் பதிக்கவிருக்கிறது. தற்போது பெட்ரோல், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் ஆகிய பவர்ட்ரெயின்களுடன் கார் மாடல்களை மஹிந்திரா விற்பனை செய்து வரும் நிலையில், CNG பவர்ட்ரெயின் கொண்ட கார்களையும் விற்பனை செய்வதில் அந்நிறுவனம் அதிக ஆர்வம் காட்டுவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
CNG பவர்ட்ரெயினை தங்களுடைய கார்களில் கொடுக்க வேண்டும் என்ற மஹிந்திராவின் விருப்பத்திற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் முக்கியமான காரணம், வாடிக்கையாளர்கள் அதிகளவில் ஈடுபாடு காட்டுவது தான். இந்தியாவில் தற்போது பெட்ரோல் பவர்ட்ரெயினுக்கு அடுத்தபடியாக, வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பி வாங்குவது CNG கார்களைத் தான். இவற்றில் பெர்ஃபாமன்ஸ் குறைவாக இருந்துவிட்டாலும், அதிக மைலேஜுடன், பயன்பாட்டுச் செலவும் குறைவாக இருப்பது வாடிக்கையாளர்களை அதிகளவில் ஈர்க்கிறது.

மாருதி சுஸூகி, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் CNG கார்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கின்றன. ரெனோ, நிஸான் உள்ளிட்ட நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளில் தான் CNG சந்தையில் புதிதாக நுழைந்திருக்கின்றன. இந்தியாவில் மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே லோகன் மற்றும் KUV 100 ட்ரிப் ஆகிய கார் மாடல்களில் CNG பவர்ட்ரெயினைக் கொடுத்திருக்கிறது. தற்போது மீண்டும் அதனை தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் கார் மாடல்களில் பயன்படுத்தத் திட்டமிட்டு வருகிறது.
பெரும்பாலான நிறுவனங்கள் CNG பவர்ட்ரெயினை தங்களுடைய சப்-காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களிலேயே பிரதானமாகக் கொடுத்திருக்கிறது. மஹிந்திராவும் அவற்றைப் பின்பற்றி, இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் சப்-காம்பேக்ட் எஸ்யூவி மாடலான XUV 3XO-வில் CNG பவர்ட்ரெயினைக் கொடுக்கவிருப்பதாகத் தெரிகிறது. இந்தக் காரில் இரண்டு 1.2 லிட்டர், 3 சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வுகளைப் பயன்படுத்தி வருகிறது மஹிந்திரா (ஒரு 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வும் உண்டு).

ஒரு இன்ஜினில் மல்டி பாயிண்ட் ஃப்யூல் இன்ஜெக்ஷன் (MPFI) சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றொரு இன்ஜினில் டைரக்ட் இன்ஜெக்ஷன் (DI) சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின்படி, MPFI சிஸ்டத்தைக் கொண்டிருக்கும் டர்போ பெட்ரோல் இன்ஜின் மாடலையே CNG பவர்ட்ரெயினுடன் மஹிந்திரா அப்டேட் செய்யவுள்ளது.
MPFI இன்ஜின் CNG எரிபொருளில் இயங்குவதற்கு ஏற்ப மேம்படுத்துவது எளிது, குறைவாக செலவாகக்கூடிய செயலும் கூட. DI இன்ஜினை CNG எரிபொருளில் இயங்குவதற்கு ஏற்ப மாற்றுவது அதிகம் செலவாகக்கூடிய மட்டுமின்றி பிராக்டிகலான ஒன்று கிடையாது. இந்த காரணங்களினாலேயே MPFI இன்ஜினை CNG எரிபொருளுக்கு ஏற்ப மாற்றியமைத்து XUV 3XO எஸ்யூவியில் மஹிந்திரா பயன்படுத்தவுள்ளது.
இந்தியாவில் விற்பனையில் இருக்கும் சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார்களிலேயே குறைவான அளவு பூட் ஸ்பேஸைக் கொண்டது இந்த XUV 3XO தான். 295 லிட்டர் பூட் ஸ்பேஸை மட்டுமே இந்தக் கார் கொண்டுள்ளது. CNG பவர்ட்ரெயினுடன் காரை மறுவடிவமைப்பு செய்யும் போது முதலில் அடிவாங்குவது பூட் ஸ்பேஸ் தான். அதனை ஏற்கனவே குறைவாகக் கொண்டிருக்கும் நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை மஹிந்திரா எப்படி பூர்த்தி செய்யும் என்ற கேள்வி எழுகிறது.
இங்கே மஹிந்திராவிற்கு மூன்று பாதைகள் இருக்கின்றன. பூட் ஸ்பேஸை மொத்தமாக ஏறக்கட்டும் வகையில் ஒரேயொரு பெரிய CNG சிலிண்டரைப் பயன்படுத்துவது. பூட் ஸ்பேஸே வேண்டாம் என நினைக்கும் வாடிக்கையாளர்கள் மட்டும் வாங்கிக் கொள்ளலாம் என் நினைப்பில் இதனை மஹிந்திரா தேர்ந்தெடுக்கலாம். இல்லையென்றால் இரண்டு சிறிய CNG சிலிண்டர்களைப் பயன்படுத்தி விட்டு, வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதற்கு கொஞ்சமே கொஞ்சம் பூட் ஸ்பேஸை மட்டும் மிச்சம் வைக்கலாம்.
இதுவே தற்போது மஹிந்திராவின் கண்முன்னே இருக்கும் பிராக்டிகலான தேர்வு. மூன்றாவது அண்டர்பாடி CNG டேங்க். CNG டேங்க்கை, தற்போதைய மாருதி விக்டோரிஸ் காரில் இருப்பது போல பூட் ஸ்பேஸுக்கு அடியில் கொடுக்கலாம். இது வாடிக்கையாளர்கள் மிகவும் விரும்பும் ஒன்றாக இருக்கும். ஆனால் அதற்கு காரை அடிப்படையில் இருந்து மறுவடிவமைப்பு செய்ய வேண்டும். எனவே உடனடி தீர்வாக இது இருக்காது. இரண்டாவதாக நாம் கூறிய ட்வின் சிலிண்டர் செட்டப்பையே மஹிந்திரா தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.
இந்த CNG காரின் வெளியீட்டுடன், நான்கு வகையான பவர்ட்ரெயின்களைக் கொண்டிருக்கும் கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் எஸ்யூவியைத் தொடர்ந்து மஹிந்திராவின் XUV 3XO-வும் பெறும். கடந்த இரண்டு நிதியாண்டுகளாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காராக நெக்ஸானே இருந்து வருகிறது. அதற்கு போட்டியாக இருக்கும் இந்த XUV 3XO அதில் பாதி அளவே விற்பனையாகி வருகிறது.
எனவே புதிதாகக் கொடுக்கப்படும் CNG பவர்ட்ரெயின் XUV 3XO-வின் விற்பனை உயர்த்த உதவும் என நினைக்கிறது மஹிந்திரா. 2026ன் இறுதியில் அல்லது 2027-ன் தொடக்கத்தில் மஹிந்திராவின் புதிய CNG காரின் வெளியீட்டை நாம் எதிரபார்க்கலாம். இந்த XUV 3XO CNG-யைத் தொடர்ந்து இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் வேறு சில கார்களிலும் CNG பவர்ட்ரெயினை மஹிந்திரா கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தப் புதிய CNG காரின் வெளியீடானது வாடிக்கையாளர்களுக்கு அதிக மைலேஜ் கொடுக்கக்கூடிய கார்களில் கூடுதல் தேர்வைக் கொடுக்கும். உத்தரப் பிரதேசம், குஜராத், டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட அதிக CNG வாகனப் பயன்பாடு கொண்ட மாநிலங்களில் இது மஹிந்திராவிற்கு முக்கிய கார் மாடலாக இருக்கும். பல்வேறு நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட வசதியை வழங்கத் தொடங்கும் போது, தொழில்நுட்ப ரீதியில் அந்த வசதி மேம்படும். இது சந்தைக்கும் நல்லதுதான்.


Click it and Unblock the Notifications