பெயர் மாற்றத்தினால் அதிகம் விற்பனையாகும் மஹிந்திரா கார்.. இது புதுசா இருக்கே
பெயர் மாற்றியதால் ஒரு காரை நிறைய வாடிக்கையாளர்கள் வாங்கத் தொடங்குவார்களா. ஆனால் அப்படித் தான் இந்தக் காரை அதிக வாடிக்கையாளர்கள் இப்போது வாங்கி வருகிறார்கள். மஹிந்திராவின் மிகவும் பிரபலமான எஸ்யூவிக்களில் ஒன்று XUV 700. இதனை அப்டேட் செய்து, மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை XUV 7XO என்ற பெயரில் இந்தாண்டு தொடக்கத்தில் வெளியிட்டது மஹிந்திரா. இந்த பெயர் மாற்றத்திற்குப் பிறகு எப்போதும் இல்லாத அளவிற்கு விற்பனையில் சக்கைபோடு போட்டு வருகிறது இந்த எஸ்யூவி.
2021ம் ஆண்டு, அதுவரை விற்பனையில் இருந்த XUV 500 எஸ்யூவிக்கு மாற்றாக புதிய XUV 700 எஸ்யூவியை களமிறக்கியது மஹிந்திரா. அப்போதிருந்து கடந்த மே மாதம் வகையிலான தகவல்களை எடுத்துப் பார்க்கும் போது, பெயர் மாற்றத்தைத் தவிர வேறு எந்தக் காரணத்தினால் இந்த எஸ்யூவியை அதிகம் வாங்கத் தொடங்கியிருப்பார்கள் என்பது தான் மஹிந்திராவிற்கே புரியாத புதிராக இருக்கிறது.

கடைசியாக 2024ம் ஆண்டு தான் சராசரியாக ஒவ்வொரு மாதமும் 7,561 யூனிட்டுகள் என்ற அளவிற்கு XUV 700 விற்பனையாகியிருக்கிறது. 2025ல் அது சரிந்து 6,806 என்ற சராசரியை எட்டியிருக்கிறது. 2023ம் ஆண்டில் இந்தக் காரின் விற்பனை சராசரி 6,203 யூனிட்டுகள் என்ற அளவில் தான் இருந்திருக்கிறது.
ஆனால், XUV 7XO எனப் பெயர் மாற்றம் செய்த பிறகு கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 46,423 யூனிட்டுகள் வரை எஸ்யூவியை விற்பனை செய்துள்ளது மஹிந்திரா. மேலும், ஜனவரி மாதம் தான் முதல் முறையாக 10,000 யூனிட்டுகள் என்ற விற்பனை அளவையும் இந்த XUV 7XO எஸ்யூவி எட்டியிருக்கிறது. இதே வேகத்தில் விற்பனையாகும் பட்சத்தில் இந்தாண்டு முடிவில் சுமார் 1.10 லட்சம் யூனிட்டுகள் என்ற விற்பனை அளவை இந்த எஸ்யூவி எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தான் ஒரே ஆண்டில் XUV 7XO எஸ்யூவியின் அதிபட்ச விற்பனை அளவாகவும் இருக்கும். கடைசியாக 2024ம் ஆண்டு தான் அதிகபட்சம் 90,727 யூனிட்டுகள் வரை இந்த மஹிந்திரா எஸ்யூவி விற்பனையாகியிருந்திருக்கிறது. வெறும் பெயர் மட்டும் இவ்வளவு விற்பனை உயர்விற்கான காரணமாக இருக்க முடியாது இல்லையா. ஜனவரி மாதம் வெளியான ஃபேஸ்லிப்டில் மஹிந்திரா செய்த மாற்றங்களும் இந்த விற்பனை உயர்விற்கான முக்கியமான காரணமாக இருக்கும்.
மெக்கானிக்கலாக புதிய XUV 7XO-வில் மஹிந்திரா எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. அதே 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வுகளையே புதிய காரிலும் கொடுத்தது. பெட்ரோல் இன்ஜினானது 203 hp பவரையும், டீசல் இன்ஜினானது 185 hp பவரையும் உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருந்தன. டீசல் இன்ஜினுடன் உயர்நிலை வேரியன்ட்களில் ஆல் வீல் டிரைவ் வசதியையும் வாடிக்கையாளர்கள் இந்த எஸ்யூவியில் பெற முடியும்.
காரின் உள்ளே நுழைந்ததும் முழு அகலத்திற்கும் நீளும் வகையில் மூன்று ஸ்கிரீன்கள் செட்டப்பை XUV 7XO-வின் டேஷ்போர்டில் கொடுத்துள்ளது மஹிந்திரா. HVAC கண்ட்ரோல்களுக்கு டச் அடிப்படையிலான பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட் செய்யப்பட்ட முன்பக்க சீட்கள் ஆகிய வசதிகளுடன், முன்பக்க பயணிகள் சீட்டுக்கு பாஸ் மோடையும் கொடுத்திருக்கிறது மஹிந்திரா.
இத்துடன் டால்பி அட்மாஸ் வசதியுடன் கூடிய 16 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங், 7 ஏர்பேக்குகள், 540 டிகிரி கேமரா, லெவல் 2 ADAS பாதுகாப்பு அம்சங்கள் ஆகிய வசதிகளையும் புதிய 7XO-வில் மஹிந்திரா கொடுத்திருக்கிறது. பெயர் மாற்றத்தைக் கடந்து ப்ரீமியமான காராக புதிய XUV 7XO-வை மஹிந்திரா மாற்றியதும் இதன் அதிக விற்பனைக்கு முக்கியமான காரணமாக இருப்பதை நாம் மறுக்க முடியாது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எந்த வகையில் இருந்து பார்த்தாலும், XUV 700-ஐ விட XUV 7XO-வை வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்று மட்டும் தெரிகிறது. இந்த மேம்பாடுகளுடன் 13.66 லட்சம் ரூபாய் என்ற குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி இந்தக் கார் விற்பனை செய்யப்பட்டு வருவதும் இதன் அதிக விற்பனைக்கான காரணங்களில் ஒன்றாக நாம் கூறலாம்.


Click it and Unblock the Notifications