அடிப்படை வேரியன்டிலேயே அசத்தலான வசதிகளைக் கொண்டிருக்கும் மஹிந்திரா XUV 7XO எஸ்யூவி
XUV 700 எஸ்யூவியை XUV 7XO-வாக இந்தாண்டு ஜனவரி மாதம் அப்டேட் செய்தது மஹிந்திரா. டிசைன், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் எனப் பல்வேறு வகையிலும் XUV 7XO-வை அந்நிறுவனம் அப்டேட் செய்திருந்தது. இந்தப் புதிய ஃபேஸ்லிப்ட் மாடலின் அடிப்படை வேரியன்டின் டெலிவரியை தற்போதே அந்நிறுவனம் தொடங்கியிருக்கிறது.
எப்போது டாப் எண்டு வேரியன்ட்களின் டெலிவரியையே மஹிந்திரா முதலில் தொடங்கும். அப்படியே படிப்படியாகக் கீழே வந்து கடைசியாகவே அடிப்படை வேரியன்டின் டெலிவரியைத் தொடங்கும். அந்த வகையில் XUV 7XO எஸ்யூவியின் அடிப்படை வேரியன்டான AX-ன் டெலிவரியை அதன் வெளியீட்டிற்கு 6 மாதங்களுக்குப் பின்பு தற்போது தொடங்கியிருக்கிறது மஹிந்திரா. இந்த அடிப்படை வேரியன்ட் போதுமான வசதிகளைக் கொண்டிருக்கிறதா என்பதைப் பார்க்கலாம்.

பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு விதமான இன்ஜின் தேர்வுகளையும் XUV 7XO AX வேரியன்ட் கொண்டிருக்கிறது. ஆனால் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இல்லை. XUV 7XO AX பெட்ரோல் மேனுவல் ட்ரிம்மை 13.66 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், டீசல் மேனுவல் ட்ரிம்மை 14.96 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் நாம் வாங்கலாம்.
இங்கே நாம் பார்க்கப் போவது AX டீசல் மேனுவல் ட்ரிம் குறித்துத் தான். காரின் முகப்புப் பக்கத்தில், உயர்நிலை வேரியன்ட்களில் இருப்பதைப் போலவே இன்டகிரேட்டட் DRL-களுடன் கூடிய பை-LED ப்ரொஜெக்டார் முகப்பு விளக்குகள், ஃபாலோ மீ ஹெட்லேம்ப், கிளாஸ் பிளாக் ஃபினிஷில் சிக்னேச்சர் கிரில் மற்றும் பம்பரின் கீழ்ப்பகுதியில் சில்வர் கார்னிஷ் ஆகிய அம்சங்கள் இருக்கின்றன.

அடிப்படை வேரியன்ட் என்பதால், ADAS வசதிகளுக்கான ரேடார், முன்பக்க கேமரா, பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை இல்லை. மேலும் LED ஃபாக் விளக்குகள் மற்றும் கார்னரிங் விளக்குகள் ஆகியவையும் இல்லை. பக்கவாட்டில் 17 இன்ச் ஸ்டீல் வீல்கள் பிளாக் ஃபினிஷில் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு சில்வர் நிற ஃபினிஷில் வீல் கவர்களையும் மஹிந்திரா கொடுத்திருக்கிறது. உயர்நிலை வேரியன்ட்களில் 18 இன்ச் டைமண்டு கட் அலாய் வீல்களும், டாப் எண்டு வேரியன்டில் 19 இன்ச் வீல்களும் இருக்கும்.
ஃப்ளஷ் ஃபிட்டிங் டோர் ஹேண்டில்களுடன், எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்யும் வகையிலான ORVM-களையே இந்த XUV 7XO-வின் அடிப்படை வேரியன்டில் கொடுத்துள்ளது மஹிந்திரா. ஆனால் அது எலெக்ட்ரிக்கலாக ஃபோல்டு செய்வது கிடையாது. பின்பக்கம் ஷார்க் ஃபின் ஆண்டனா, ரூஃப் மவுண்டட் ஸ்பாய்லர்கள் மற்றும் LED பின்பக்க விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ரியர் வைப்பர், வாஷர், டீஃபாகர் மற்றும் ரியர் கேமரா ஆகிய வசதிகள் இல்லை.
காரின் உட்புறம் டேஷ்போர்டின் அகலத்திற்கு நீளும் மூன்று 12.3 இன்ச் ஸ்கிரீன்கள் நம்மை வரவேற்கின்றன. இத்துடன் 6 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம், அட்ரினோஎக்ஸ், ஸ்மார்ட் வாட்ச் கனெக்டிவிட்டி, சாட்ஜிபிட்டியுடன் கூடிய அலெக்ஸா, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, டைப்-C, டைப்-A சார்ஜிங் போர்ட்கள், மூன்றாம் வரிசைக்கும் 12V சார்ஜிங் போர்ட் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது AX வேரியன்ட்.
ஸ்டோரேஜுடன் கூடிய செண்டர் ஆர்ம்ரெஸ்ட், மேனுவலி டிம்மபிள் டே மற்றும் நைட் IRVM, மைக்ரோ ஹைபிரிட் தொழில்நுட்பம், இரண்டாம் மற்றும் மூன்றாம் வரிசை இருக்கைகளுக்கும் ஏசி வென்ட்கள், எலெக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங், புஷ் பட்டன் ஸ்டார்ட், டயர் பொசிஷன் டிஸ்பிளே, 4 பவர் விண்டோக்கள், ஸ்டீயரிங் மவுன்ட்டட் கண்ட்ரோல்கள் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகிய வசதிகளும் அடிப்படை வேரியன்டில் கொடுக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பிற்காக ஆறு ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ட்ராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், ஹில் டிஸண்டு கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அடிப்படை வேரியன்ட் என்பதால் ADAS பாதுகாப்பு வசதிகள், ஆட்டோ முகப்பு விளக்குகள் மற்றும் ரெயின் சென்ஸிங் வைப்பர்கள் ஆகிய வசதிகள் கொடுக்கப்படவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அடிப்படை வேரியன்ட் என்பதால் மிகவும் குறைவான வசதிகள் இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு, இந்த XUV 7XO-வின் அடிப்படை வேரியன்டில் போதுமான அளவில் வசதிகளைக் கொடுத்து அசத்தியிருக்கிறது மஹிந்திரா என்றே சொல்ல வேண்டும். அதே நேரம் அடிப்படை வேரியன்டே சற்று அதிக விலை தான் என்னும் போது இந்த வசதிகள் அவசியம் கொடுக்கப்பட வேண்டிய ஒன்று தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications