இந்த 9 சீட்டர் எஸ்யூவியின் விலையை உயர்த்தியுள்ளது மஹிந்திரா
இந்தியாவில் எஸ்யூவிக்களுக்குப் பெயர் போன மஹிந்திரா நிறுவனம், தாங்கள் விற்பனை செய்து வரும் 9 சீட்டர் எஸ்யூவியின் விலையை உயர்த்தியிருக்கிறது. இந்த ஜூலை மாதம் தங்களது லைன்-அப்பில் இருக்கும் பல்வேறு கார்களின் விலையை மஹிந்திரா உயர்த்தி வருகிறது. XUV 3XO, தார் ஆகியவையும் அதில் அடக்கம். அந்த வரிசையிலேயே 9 சீட்டர் எஸ்யூவியான பொலேரோ நியோ பிளஸ் எஸ்யூவியின் விலையையும் அந்நிறுவனம் உயர்த்தியிருக்கிறது.
பொலேரோ என்ற பெயரிலேயே மூன்று எஸ்யூவிக்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது மஹிந்திரா. ஒவ்வொன்று ஒவ்வொரு தன்மையை, பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இதில் பொலேரோ மற்றும் பொலேரோ நியோ ஆகிய இரண்டு எஸ்யூவிக்களும் 7 சீட்டராக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், பொலேரோ நியோ பிளஸ் எஸ்யூவியானது 9 சீட்டராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த பிளஸ் எஸ்யூவியின் விலையையே மஹிந்திரா உயர்த்தியிருக்கிறது.

P4 மற்றும் P10 என இரண்டு வேரியன்ட்களாக இந்த எஸ்யூவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் P4 வேரியன்டின் விலையை 39,500 ரூபாய் வரை விலை உயர்த்தியுள்ளது மஹிந்திரா. இனி இந்த வேரியன்டை 11.39 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் நாம் வாங்கலாம். இது தான் பொலேரோ நியோ பிளஸ் எஸ்யூவியின் தொடக்க விலையும் கூட.
டாப் எண்டான P10 வேரியன்டின் விலை 49,500 வரை உயர்த்தியுள்ளது மஹிந்திரா. இனி இந்த வேரியன்டை 12.49 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் நாம் வாங்கலாம். அடிப்படையான P4 வேரியன்டை அடிப்படையாகக் கொண்டு மஹிந்திரா பொலேரோ நியோ பிளஸ் ஆம்புலன்ஸையும் மஹிந்திரா விற்பனை செய்து வருவது இங்கே கொசுறுத் தகவல்.

மஹிந்திரா விற்பனை செய்து வரும் பொலேரோ கார்களிலேயே உயர்நிலையில் இருப்பது இந்த பொலேரோ நியோ பிளஸ் தான். எனவே மற்ற பொலேரோ கார்களை விட பவர்ஃபுல்லான 2.2 லிட்டர் டீசல் இன்ஜினை இந்த எஸ்யூவி கொண்டுள்ளது. அனைத்து பொலேரோ எஸ்யூவிக்களுமே டீசல் இன்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுடன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதற்கு பொலேரோ நியோ பிளஸ்ஸும் விதிவிலக்கல்ல. இதிலும் மேனுவல் மட்டும் தான். ஆட்டோமேட்டிக் கிடையாது.
இந்தக் காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் எம்ஹாக்120 (mHawk120), அதாவது 2.2 லிட்டர் டீசல் இன்ஜினானது 4,000 rpm-ல் 118 hp பவர் மற்றும் 1800 - 2800 rpm-ல் 280 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வை மஹிந்திரா கொடுத்திருக்கிறது.
கூடுதல் சீட்டிங் ஆப்ஷன் வேண்டும் என்பவர்களுக்கான குறைவான விலை தேர்வாக இந்த பொலேரோ நியோ பிளஸ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஹூண்டாய் கிரெட்டா மற்றும் மாருதி விக்டோரிஸ் எஸ்யூவி கார்களின் அளவிலேயே, ஆனால் 9 சீட்களைக் கொண்ட காராக இந்த மஹிந்திரா பொலேரோ நியோ பிளஸ் உள்ளது.
முன்பக்கம் டிரைவர் மற்றும் பயணிகள் சீட், இரண்டாம் வரிசையில் மூன்று பேர் அமரும் வகையிலான பென்ச் சீட்டுடன், பின்பக்கம் பக்கவாட்டில் இரண்டு பக்கமும் நான்கு பேர் அமரும் வகையில் ஜம்ப் சீட்கள் கொடுக்கப்பட்டிருக்கும். மிகவும் சொகுசாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் அதிக நபர்கள் பயணம் செய்யும் வகையில் மட்டும் இருக்கும். இந்தக் காரின் நீளம் 4,400 மிமீ என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குடும்பப் பயன்பாட்டிற்கு மட்டுமில்லாமல், மற்ற விதமான பயன்பாடுகளுக்குமான எஸ்யூவிக்களையும் மஹிந்திரா விற்பனை செய்து வருகிறது. அப்படியான ஒரு எஸ்யூவியாக இந்த பொலேரோ நியோ பிளஸ்ஸை நாம் எடுத்துக் கொள்ளலாம். மேலும், குறைவான விலையில் இப்படியொரு பிராக்டிகலான தேர்வை கொடுத்து வருவதற்காக மஹிந்திராவை நாம் பாராட்டியும் ஆக வேண்டும்.


Click it and Unblock the Notifications