தனித்துவமான டிசைனுடன் வெளியாகும் மஹிந்திராவின் புதிய எஸ்யூவி
வணிக பயன்பாட்டிற்கு மட்டுமின்றி தனிநபர் பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையிலான பிக்-அப் ட்ரக்காக ஹைலக்ஸை பல ஆண்டுகளாக இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது டொயோட்டா. இந்நிலையில் அதற்குப் போட்டியாக புதிய கார் ஒன்றை வெளியிடவுள்ளது மஹிந்திரா. கடந்தாண்டே இந்தப் புதிய காரை இந்தியாவில் மஹிந்திரா காட்சிப்டுத்திய நிலையில், தற்போது அதனை இந்தியாவில் காப்புரிமையும் செய்துள்ளது.
கடந்தாண்டு நான்கு கான்செப்ட் எஸ்யூவி கார்களை இந்தியாவில் ஒரே நிகழ்வில் காட்சிப்படுத்தியது மஹிந்திரா. அதில் 'விஷன் S' (Vision S) என்ற மாடலின் தயாரிப்பு நிலை வடிவத்தை வேகமாக உருவாக்கி வருகிறது. அடுத்தாண்டு இந்தப் புதிய எஸ்யூவியை வெளியிட வேண்டும் எனத் தீவிரமாக செயல்பட்டு வருகறது மஹிந்திரா. அதற்கிடையில் 'விஷன் SXT' (Vision SXT) என்ற மற்றொரு கான்செப்ட் எஸ்யூவியின் டிசைனையே இந்தியாவில் தற்போது காப்புரிமை செய்துள்ளது அந்நிறுவனம்.

பார்ப்பதற்கு முழுமையான பிக்-அப் வடிவில் இல்லாமல், கார் போன்ற வடிவமைப்பிலேயே பின்னால் ஒரு ட்ரங்க் பெட்டிற்கு கொஞ்சம் இடம் விட்டதைப் போல இருக்கிறது விஷன் SXT காரின் டிசைன். இதனை பிக்-அப் ட்ரக் என்று சொல்வதை விட, பிக்-அப் எஸ்யூவி என்று சொல்வது தான் சரியாக இருக்கும். அப்படியான ஒரு டிசைனைத் தான் கொண்டிருக்கிறது.
கடந்தாண்டு கான்செப்ட் வடிவில் பார்த்ததைப் போலவே தான் தற்போது பேட்டன்ட் செய்யப்பட்டிருக்கும் டிசைனும் இருக்கிறது. காரின் பின்னால் இருக்கும் பெட்டில் இரண்டு வீல்களை வைத்து அதன் அளவைக் காட்டியிருக்கிறது மஹிந்திரா. பிக்-அப் என்று சொன்னாலும் பார்ப்பதற்கு ஸ்டைலான ஒரு காராகவே இருக்கிறது விஷன் SXT. தாரைப் போலவே தனி வாடிக்கையாளர் வட்டத்தை உருவாக்கும் திறனை இந்த தனிநபர் பயன்பாட்டு பிக்-அப் எஸ்யூவி கொண்டிருப்பதாகவே தெரிகிறது.

இதுவும் மஹிந்திராவின் புதிய NU_IQ பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டிருக்கும் கார் என்பதால், எரிபொருள், ஹைபிரிட், எலெக்ட்ரிக் என அனைத்து வடிவங்களுக்கும் தயாராகவே உள்ளது. தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி, பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் மட்டுமல்லாமல், எலெக்ட்ரிக் பவர்ட்ரெயினையும் இந்த எஸ்யூவிக்கு மஹிந்திரா கொடுக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தற்போது மிகவும் பாக்ஸியான மற்றும் மிகவும் ரக்கடான டிசைனைக் கொண்டிருந்தாலும், தயாரிப்பு நிலை வடிவம் இவ்வளவு ரக்கடாக இருக்காது எனத் தெரிகிறது. பாக்ஸியான டிசைனை வைத்துக் கொண்டு, ரக்கட்னஸை மஹிந்திரா கொஞ்சம் குறைத்து, இன்னும் பார்ப்பதற்கு கிளாஸியான ஒரு எஸ்யூவியாக விஷன் SXT-யின் தயாரிப்பு நிலை வடிவத்தை மாற்றிவிடும். தார் ஒரே நேரத்தில் கிளாஸியாகவும், ரக்கடாகவும் இருப்பது ஒரு நல்ல உதாரணம்.
2027ம் ஆண்டு விஷன் S எஸ்யூவியின் வெளியீட்டிற்குப் பின்பே, இந்த விஷன் SXT-யின் தயாரிப்பு மற்றும் வெளியீடு குறித்த முடிவுகளை மஹிந்திரா எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காரின் வெளியீட்டிற்குப் பிறகு, இது மற்றும் டொயோட்டா ஹைலக்ஸ் போன்ற பிக்-அப்புகளே கூட ஒரு ஸ்டைல் ஸ்டேட்மென்ட்டாக மாறலாம்.
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளிலும் தனி நபர் பயன்பாட்டு பிக்-அப் ட்ரக்குகளும் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வருகின்றன. ஆனால் இந்தியாவில் பிக்-அப் என்றாலே வணிகப் பயன்பாட்டு வாகனம் தான் என்ற மனநிலை இருக்கிறது. மிகவும் பிரபலமாக இல்லாத போதிலும் டொயோட்டா மட்டும் தொடர்ந்து ஹைலக்ஸை விற்பனை செய்து வருகிறது. மஹிந்திராவின் இந்தப் புதிய விஷன் SXT அந்த பிம்பத்தை மாற்றுமா எனப் பார்க்கலாம்.
ஒட்டுமொத்தமாக தனிநபர் பயன்பாட்டு பிக்-அப் ட்ரக்குகளின் மீதான பிம்பத்தை இந்த விஷன் SXT கார் மாற்றுமா எனத் தெரியாது. ஆனால் இந்திய சந்தையில் தனக்கென தனி இடத்தை இந்தக் கார் பிடித்துக் கொள்ளும் என்பது மட்டும் உறுதி. மஹிந்திராவின் நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கும் போது இந்தக் கார் தயாரிப்பு நிலையை எட்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications