FIVA உலக பாரம்பரிய விருதை தட்டித் தூக்கிய மாருதி 800 கார்.. சர்வதேச அளவில் கிடைத்த பெரும் கவுரவம்!
இந்தியாவில் கார் என்பது ஒரு காலத்தில் வசதி படைத்தவர்களின் அடையாளமாக மட்டுமே இருந்தது. நடுத்தரக் குடும்பத்தினர் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற கனவு பலருக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. அந்த நிலையை மாற்றி, சாதாரண மக்களையும் கார் உரிமையாளர்களாக மாற்றிய பெருமை மாருதி 800 காருக்கு உண்டு. நான்கு தசாப்தங்களைக் கடந்தும் இந்திய மக்களின் நினைவுகளில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ள இந்தக் கார் தற்போது சர்வதேச அளவில் முக்கிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
ஃபெடரேஷன் இன்டர்நேஷனல் டெஸ் வெஹிக்யூல்ஸ் அன்சியன்ஸ் (FIVA) என்ற அமைப்பின் உலக வாகன பாரம்பரிய விருது (World Vehicle Heritage Award) மாருதி 800 காருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறும் முதல் இந்திய வாகனம் என்ற பெருமையையும் மாருதி 800 பெற்றுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 21 வரலாற்றுச் சிறப்புமிக்க வாகனங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இந்தியாவின் சார்பில் இந்த அங்கீகாரத்தைப் பெற்ற ஒரே வாகனம் மாருதி 800 என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனை படைத்த கார்
1982ஆம் ஆண்டு இந்திய அரசும் ஜப்பானை சேர்ந்த சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷனும் இணைந்து மாருதி நிறுவனத்தை உருவாக்கின. இதன் தொடர்ச்சியாக 1983 டிசம்பரில் மாருதி 800 கார் உற்பத்தி செய்யப்பட்டது. எளிமையான வடிவமைப்பு, சிறிய அளவு, குறைவான பராமரிப்புச் செலவு மற்றும் பயன்படுத்துவதற்கு எளிதான தன்மை ஆகியவை இந்தக் காரை மக்களிடம் விரைவாகப் பிரபலமாக்கின.
அந்தக் காலகட்டத்தில் கார் வாங்குவது என்பது பல குடும்பங்களின் நீண்டகாலச் சேமிப்புக் கனவாக இருந்தது. ஆனால் மாருதி 800 அறிமுகமான பிறகு கார் வாங்குவதற்கான அணுகுமுறையே மாறியது. முதல் முறையாக கார் வாங்க விரும்பிய நடுத்தரக் குடும்பங்களுக்கு இது முக்கியமான தேர்வாக அமைந்தது. நகரங்களின் குறுகிய சாலைகளிலும் எளிதாக ஓட்டக்கூடிய அதன் வடிவமைப்பும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்தது.
முதல் காருக்கு பெருமை
மாருதி 800 காரின் முதல் வாடிக்கையாளர் வாகனம் இந்திய வாகன வரலாற்றில் தனி இடத்தைப் பெற்றுள்ளது. 1983 டிசம்பர் 14ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹர்பால் சிங்கிடம் முதல் காரின் சாவியை வழங்கினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கார் தற்போது மாருதி சுஸுகியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டு உள்ளது.
முதல் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட சேஸிஸ் எண் 100014 கொண்ட முதல் மாருதி 800 காருக்குத்தான் இந்த அங்கீகாரம் பெற்றுள்ளது. இதன் பதிவு எண் DIA 6479 என்பதும் குறிப்பிடத்தக்கது. மாருதி நிறுவனத்தின் தலைமையகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் இந்தக் கார், இந்தியாவில் தனிநபர் கார் பயன்பாடு வளர்ந்த வரலாற்றின் முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது.
மாருதி 800 காரின் வெற்றி இந்தியாவுடன் மட்டும் நின்றுவிடவில்லை. 1987ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்தக் கார் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்கள் சர்வதேச சந்தைகளிலும் விற்பனை செய்ய முடியும் என்ற நம்பிக்கை வாகன உற்பத்தித் துறையில் உருவானது.
கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக உற்பத்தியில் இருந்த காலத்தில் 29 லட்சத்திற்கும் அதிகமான மாருதி 800 கார்கள் தயாரிக்கப்பட்டதாக சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தக் காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அதற்குள் இந்தியாவின் கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
சர்வதேச அங்கீகாரம்
இந்த விருது காரின் விலை, வேகம் அல்லது தொழில்நுட்ப வசதிகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுவதில்லை. ஒரு வாகனம் சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றம், நாட்டின் தொழில்துறை வளர்ச்சியில் ஆற்றிய பங்கு மற்றும் வரலாற்றுச் சிறப்பு ஆகியவை முக்கியமாகக் கருதப்படுகின்றன. அந்த வகையில் மாருதி 800 பெற்றுள்ள இந்த அங்கீகாரம் இந்திய வாகனத் துறைக்கே கிடைத்த பெருமையாகும்.
ஒரு சிறிய காராகத் தனது பயணத்தைத் தொடங்கிய மாருதி 800, லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது. இன்று இந்தியா உலகின் மூன்றாவது பெரிய கார் சந்தையாக வளர்ந்துள்ள நிலையில், அந்த வளர்ச்சிப் பயணத்தின் முக்கியமான தொடக்கங்களில் ஒன்றாக மாருதி 800 தொடர்ந்து நினைவுகூரப்படும்.


Click it and Unblock the Notifications


