அடிமாட்டு விலையில் வெளியாகப் போகும் மாருதியின் புதிய எஸ்யூவி.. இப்போவே துண்டைப் போடுங்க இல்லைனா கிடைக்காது
மாருதியின் சப் 4 மீட்டர் எஸ்யூவி காராக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது பிரெஸ்ஸா. உலகில் இந்தியாவில் மட்டுமே சப் 4 மீட்டர் என்ற கார் பிரிவு இருக்கிறது. 4 மீட்டர்கள் நீளத்திற்கு உள்ளான இந்தக் கார்களுக்கு 18% வரை மட்டுமே மத்திய அரசு வரி விதித்துள்ளது. 4 மீட்டர்கள் நீளத்திற்கும் மேலான கார்கள் பெரிய கார்களாகக் கணக்கிடப்பட்டு 40% வரி விதிக்கப்பட்டு வருகிறது.
மாருதியின் பிரெஸ்ஸா காரானது 4 மீட்டர்கள் நீளத்திற்கு உள்ளாகவே இருந்தாலும், அதன் இன்ஜின் 1.5 லிட்டர் என்ற அளவில் இருப்பதால் மேலே கூறியது போல் குறைவான வரிப்பிரிவில் வராமல், பெரிய கார்களுக்கான வரியே பிரெஸ்ஸாவிற்கும் விதிக்கப்பட்டு வருகிறது. 4 மீட்டர்கள் நீளத்திற்குள் இருந்து 1.2 லிட்டர் மற்றும் அதற்கும் கீழான பெட்ரோல் இன்ஜினைக் (அல்லது 1.5 லிட்டர் மற்றும் அதற்குள்ளான டீசல் இன்ஜின்) கொண்டிருந்தால் மட்டுமே 18% என்ற வரிப்பிரிவில் அந்தக் காரை விற்பனை செய்ய முடியும்.

இந்த நிலையில் தான் பிரெஸ்ஸாவிற்கு புதிய இன்ஜினை மாருதி கொடுக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. புதிதாக மேம்படுத்தப்பட்டு வரும் பிரெஸ்ஸா எஸ்யூவி டெல்லிக்கு அருகே மாசுக் கட்டுப்பாட்டு சோதனை செய்யப்பட்டு வந்த போது ஸ்பைஷாட்டில் சிக்கியிருக்கிறது. இதன் மூலம் பிரெஸ்ஸாவிற்கு புதிய இன்ஜினை மாருதி கொடுக்கவிருப்பதை நாம் உறுதி செய்ய முடிகிறது.
இந்தப் புதிய இன்ஜின் 1.2 லிட்டர் பெட்ரோலாகவோ அல்லது 1.0 லிட்டர் டர்போ பெட்ரோலாகவோ இருக்கலாம் என்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. இரண்டையுமே கூட இந்த எஸ்யூவியில் மாருதி கொடுப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. இந்த இரண்டு இன்ஜினில் எது கொடுக்கப்பட்டாலும் 18% என்ற வரி விதிப்பு பிரிவிற்குள் பிரெஸ்ஸா வந்து விடும்.

தற்போது 40% வரியுடனேயே 8.26 லட்சம் ரூபாய் என்ற தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலையில் தான் இந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவி விற்பனை செய்யப்படுகிறது. புதிய இன்ஜினுடன் வரி குறைக்கப்பட்டால் பிரெஸ்ஸாவை இன்னும் குறைவாக 7 லட்சம் ரூபாய் என்ற விலையில் கூட நாம் எதிர்பார்க்கலாம். சப்-காம்பேக்ட் பிரிவைப் பொறுத்தவரை எவ்வளவுக்கெவ்வளவு குறைவான தொடக்க விலை இருக்கிறதோ அவ்வளவு கூடுதல் விற்பனையை எதிர்பார்க்க முடியும்.
புதிய சிறிய இன்ஜின் கொண்ட பிரெஸ்ஸா வெளியான பின்பு தற்போது பயன்பாட்டில் இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினையும் மாருதி தொடர்ந்து விற்பனையில் வைத்திருக்குமா அல்லது நிறுத்திவிடுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பிரெஸ்ஸா எஸ்யூவியானது CNG எரிபொருள் பயன்பாட்டுடனும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போதைய பிரெஸ்ஸாவில் CNG எரிபொருளுக்கான டேங்கானது பூட் ஸ்பேஸிலேயே கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பெட்ரோல பிரெஸ்ஸாவை விட குறைவான பூட் ஸ்பேஸையே CNG பிரெஸ்ஸா கொண்டிருக்கிறது. புதிதாக மேம்படுத்தப்பட்டு வரும் பிரெஸ்ஸா மாடலில் அண்டர்பாடி CNG டேங்கை மாருதி கொடுக்கவிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதுதான் வழக்கமான பூட் ஸ்பேஸ் அளவையே புதிய பிரெஸ்ஸாவில் நாம் எதிர்பார்க்கலாம்.
முதலில் கடந்த ஆண்டு வெளியான விக்டோரிஸ் மிட்-சைஸ் எஸ்யூவி காரிலேயே அண்டர்பாடி CNG டேங்கைக் கொடுத்து மாருதி. தற்போது அதனைத் தொடர்ந்து புதிய பிரெஸ்ஸா மாடலிலும் கொடுத்து அப்டேட் செய்யவிருக்கிறது. மொத்தத்தில் பிரெஸ்ஸா ஃபேஸ்லிப்ட் மாடலானது வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கக்கூடிய அம்சங்களுடன் முற்றிலும் புதிய காராக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்போத விற்பனையில் டாப் 10 கார்களில் ஒன்றாக வருகிறது இந்த பிரெஸ்ஸா எஸ்யூவி. மேற்கூறிய வசதிகளுடன் இந்தக் காரின் விலையும் குறைக்கப்பட்டால், தற்போது விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் டாடா பன்ச், மாருதி வேகன் ஆர் அல்லது மாருதி டிசையர் ஆகிய காருக்குப் போட்டியாக கூட பிரெஸ்ஸா வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. மாருதி என்ன செய்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications