மாருதியின் 'மாஸ்டர் ஸ்ட்ரோக்'.. வெறும் ரூ7.40 லட்சத்தில் டர்போ எஞ்சினுடன் பிரெஸ்ஸா... போட்டியாளர்களுக்கு செக்!
இந்தியாவின் காம்பாக்ட் எஸ்யூவி சந்தையில் கடுமையான சந்தைப் போட்டி நிலவுகிறது. டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO, கியா சோனெட், ஹூண்டாய் வென்யூ, ஸ்கோடா கைலாக் போன்ற மாடல்கள் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் விற்பனையாகி வருகின்றன. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் காரில் டர்போ பெட்ரோல் எஞ்சின் சேர்க்கப்பட்டதுடன், மிக மிக சவாலான விலையில் இந்த மாடலை களமிறக்க போட்டியாளர்களுக்கு செக் வைத்துள்ளது மாருதி சுஸுகி நிறுவனம்.
பொதுவாக டர்போ எஞ்சின் வேரியண்ட்டுகளின் விலை சாதாரண எஞ்சின் தேர்வுகளைவிட மிக அதிகமாக நிர்ணயிக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த யுக்தியை உடைக்கும் விதமாக டர்போ வேரியண்ட்டுகளின் விலையை மிக சவாலாகவும், குறைவாகவும் நிர்ணயித்து தரமான சம்பவத்தை செய்துள்ளது மாருதி.

மாஸ்டர் ஸ்ட்ரோக்!
இதுவரை டர்போ பெட்ரோல் எஞ்சின் வேண்டுமென்றால் வாடிக்கையாளர்கள் கியா சோனெட், ஹூண்டாய் வேன்யூ அல்லது மஹிந்திரா XUV 3XO போன்ற மாடல்களின் உயர்ந்த வேரியண்ட்களை தேர்வு செய்ய வேண்டியிருந்தது. ஆனால், புதிய பிரெஸ்ஸாவில் டர்போ வேரியண்ட்களை மிகவும் குறைவாகவும், சவாலான விலையில் மாருதி அறிமுகப்படுத்தியுள்ளது. சில வேரியண்ட்களில் 1.5 லிட்டர் பெட்ரோல் மாடலைவிட டர்போ வேரியண்ட்டுகள் ரூ.65,000 முதல் 90,000 வரை குறைவான விலைக்கு கிடைப்பதும் கவனிக்கத்தக்க விஷயம்.
ரூ.10 லட்சத்திற்குள் டர்போ டாப் வேரியண்ட்
குறிப்பாக, ZXi டர்போ மேனுவல் வேரியண்ட் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகமாகியுள்ளது. இதன் மூலம் டர்போ எஞ்சின் என்பது பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கான தேர்வு என்ற எண்ணத்தை மாருதி தகர்த்துள்ளது. செயல்திறன் விரும்பும் வாடிக்கையாளர்களை நேரடியாக கவரும் வகையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மாருதி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் விலைப் பட்டியல்
| Powertrain | Variant | Price (Rs lakh) |
|---|---|---|
| 1.0L Turbo MT | LXi | 7.39 |
| 1.0L Turbo MT | VXi | 8.54 |
| 1.0L Turbo MT | ZXi | 9.84 |
| 1.0L Turbo MT | ZXi Dual Tone | 9.99 |
| 1.0L Turbo MT | ZXi+ | 11.15 |
| 1.0L Turbo MT | ZXi+ Dual Tone | 11.31 |
| 1.5L Petrol MT | LXi | 8.29 |
| 1.5L Petrol MT | VXi | 9.25 |
| 1.5L Petrol MT | ZXi | 10.49 |
| 1.5L Petrol MT | ZXi Dual Tone | 10.65 |
| 1.5L Petrol AT | VXi | 10.60 |
| 1.5L Petrol AT | ZXi | 11.84 |
| 1.5L Petrol AT | ZXi Dual Tone | 12.00 |
| 1.5L Petrol AT | ZXi+ | 13.54 |
| 1.5L Petrol AT | ZXi+ Dual Tone | 13.70 |
| CNG | LXi | 9.29 |
| CNG | VXi | 9.99 |
| CNG | ZXi | 11.49 |
| CNG | ZXi Dual Tone | 11.65 |
இதன் மூலம் மாருதி ஒரே நேரத்தில் இரண்டு வாடிக்கையாளர் பிரிவுகளை இலக்காக வைத்துள்ளது. அதிக மைலேஜ் மற்றும் சிஎன்ஜியை விரும்புபவர்களுக்கு 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் சிஎன்ஜி வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. அதேநேரத்தில், அதிக செயல்திறன் மிக்க மாடலை விரும்புபவர்களுக்கு புதிய டர்போ எஞ்சின் வழங்கப்படுகிறது.புதிய 2026 மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவில் முதல் முறையாக 1.0 லிட்டர் Boosterjet டர்போ பெட்ரோல் எஞ்சினும், தொடர்ந்து 1.5 லிட்டர் K15C Smart Hybrid பெட்ரோல் எஞ்சினும் வழங்கப்படுகின்றன.

1.0லி டர்போ பெட்ரோல் எஞ்சின்
இந்த எஞ்சின் 3 சிலிண்டர்கள் கொண்ட 998cc டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக 110 எச்பி பவர் மற்றும் 200 என்எம் டார்க் விசையை வழங்குகிறது. குறைந்த வேகத்திலேயே அதிக டார்க் கிடைப்பதால் நகரப் போக்குவரத்தில் சிறப்பானதாகவும், நெடுஞ்சாலையிலும் செயல்திறனை காட்டி ஓவர்டேக் போன்ற சமயங்களில் சிறப்பானதாகவும் இருக்கும். அதேபோல் மலைப்பாதை பயணங்களிலும் சிறப்பான செயல்திறனை எதிர்பார்க்கலாம். இந்த எஞ்சினுடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
1.5லி பெட்ரோல் எஞ்சின்
இந்த எஞ்சின் 4 சிலிண்டர்கள் கொண்ட 1,462cc ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய ஆப்ஷனாக கொடுக்கப்படுகிறது. அதிகபட்சமாக 1-3 எச்பி பவரையும், 137 என்எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது. டர்போ எஞ்சினைப் போல அதிக செயல்திறனை விட, மைலேஜ், மென்மையான ஓட்டும் அனுபவம் மற்றும் நீண்டகால நம்பகத்தன்மையை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. தினசரி குடும்பப் பயன்பாடு மற்றும் நீண்ட பயணங்களுக்கு இது ஏற்றதாக இருக்கும். இந்த எஞ்சினுடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. சிஎன்ஜி எரிபொருள் வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும்.

கடும் போட்டி நிலவும் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV 3XO, ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட் மற்றும் ஸ்கோடா கைலாக் ஆகிய மாடல்களுக்கு இது நேரடி போட்டியாக இருக்கும். குறிப்பாக டர்போ எஞ்சினை குறைந்த விலையில் வழங்கியிருப்பது, இந்த மாடல்களை பரிசீலித்து வந்த வாடிக்கையாளர்களின் கவனத்தை பிரெஸ்ஸா பக்கம் திருப்பும் வாய்ப்பு உள்ளது.
இதனுடன் புதிய முன்புற வடிவமைப்பு, மேம்படுத்தப்பட்ட இன்டீரியர், கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளதால், பிரெஸ்ஸா மீண்டும் விற்பனையில் கலக்கும் என்று தெரிகிறது. மாருதியின் அரேனா டீலர்ஷிப் நெட்வொர்க் மற்றும் பராமரிப்பு செலவு குறைவாக இருக்கும் என்ற மாருதியின் தாரக மந்திரமும் இதற்கு கூடுதல் பலமாக அமையும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
புதிய டர்போ எஞ்சினை மட்டும் கூடுதலாக அறிமுகப்படுத்தியிருந்தால் அது ஒரு சாதாரண அப்டேட்டாக இருந்திருக்கும். ஆனால், அதனை மிக சவாலான விலையில் வழங்கியிருப்பதுதான் மாருதியின் உண்மையான மாஸ்டர் ஸ்ட்ரோக்காக கூற முடியும். செயல்திறன், விலை மற்றும் பிராண்டு நம்பிக்கை ஆகிய மூன்றையும் இணைத்து, காம்பாக்ட் எஸ்யூவி சந்தையில் மாருதி பிரெஸ்ஸா விற்பனையில் மீண்டும் எழுச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
