கண்ணை மூடிக்கிட்டு இந்த மாருதி காரை வாங்கலாம்.. எந்தப் பிரச்சினையும் வராது.. ஏன் தெரியுமா?
குறைவான விலையில் செடான் ஒன்று வாங்க வேண்டும் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது மாருதியின் டிசையர் தான். பெரும்பான்மை மக்களும், கார் தயாரிப்பாளர்களும் எஸ்யூவிக்கள் பக்கம் தங்களது கவனத்தைத் திருப்பியிருக்கும் இந்த நேரத்திலும் அதிகம் விற்பனையாகும் ஒரு செடான் காராக மாருதியின் டிசையர் இருக்கிறது. அதற்கு மாருதி என்ற பிராண்டு முக்கியமான ஒரு காரணம்.
குறைவான விலையில் மற்றொரு செடானும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அது வேறெதுவும் இல்லை, ஹோண்டாவின் அமேஸ் தான். இரண்டுமே சப் 4 மீட்டர் பிரிவில் விற்பனை செய்யப்பட்டு வரும் சப்-காம்பேக்ட் செடான்களே. இந்த இரண்டு கார்களில் எதனை வாங்கலாம். எது சிறப்பான பெர்ஃபாமன்ஸ் மற்றும் பயன்பாட்டு அனுபவத்தைக் கொண்டுள்ளது என்பதனை இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

டிசைன்:
டிசைனைப் பொறுத்தவரை எப்போதுமே அது தனிப்பட்ட நபரின் தேர்வு தான். இங்கே அமேஸ் மற்றும் டிசையர் இரண்டுமே அதனதன் வகையில் தனித்துவமான டிசைன் லாங்குவேஜையே கொண்டிருக்கின்றன. தனிப்பட்ட முறையில் டிசைன் அடிப்படையில் எந்தக் காரை தேர்ந்தெடுப்பீர்கள் எனக் கேட்டால் நான் இரண்டையுமே தான் சொல்வேன். நான்காம் தலைமுறை டிசையர் மற்றும் மூன்றாம் தலைமுறை அமேஸ் ஆகிய இரண்டு மாடல்களின் டிசைனும் எனக்குப் பிடித்தமானதாகவே இருக்கிறது.
இடவசதி:
சப்-காம்பேக்ட் கார்களில் ஐந்து பேர் தாராளமாக அமர்ந்து பயணம் செய்ய முடியுமா என்ற கேள்வியைக் கேட்காமல் கார் வாங்க முடியாது. இரண்டு கார்களிலும் பின்வரிசை இருக்கைகளில் மூன்று நபர்கள் சௌகரியமாக அமர முடியாது. ஆனால் அமேஸை விட டிசையரில் இடவசதி கொஞ்சம் அதிகமாக இருக்கும். இத்துடன் டிசையரின் உயரமும் சற்று அதிகம் என்பதால் மிகவும் நெருக்கமான இடத்திற்குள் அமர்ந்திருக்கிறோம் என்ற உணர்வு அமேஸில் இருப்பதை விட கொஞ்சம் குறைவாக இருக்கும்.

ஒட்டுமொத்தமாக சொகுசைப் பார்க்கும் போதும் அமேஸை விட டிசையர் கொஞ்சம் சொகுசாகவே இருக்கும். அதன் கொஞ்சம் அகலமான சீட்கள், கால்களுக்கான சப்போர்ட் ஆகியவை பயணத்தை இன்னும் கொஞ்சம் எளிமையாக்கும். அமேஸிலும் சீட்டிங் நன்றாகவே இருக்கும் என்றாலும் டிசையருடன் ஒப்பிடும் போது சற்று குறைவு தான். குறிப்பாக காரின் முன்பக்க சீட்டிங் சொகுசுத் தன்மையில் ஹோண்டா இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தலாம்.
விலை:
மேற்கொண்டு மற்ற அம்சங்களைப் பார்ப்பதற்கு முன்னாள் இரண்டு கார்களும் என்ன விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பதைத் தெரிந்து கொண்டால் ஒப்பிடுவதற்கு இன்னும் கொஞ்சம் எளிதாக இருக்கும். மூன்றாம் தலைமுறை அமேஸ் செடானை 7.51 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி விற்பனை செய்து வருகிறது ஹோண்டா. டிசையர் செடானானது மிகவும் குறைவாக 6.25 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இரண்டு செடான் கார்களின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட வேரியன்ட்களும் முறையே 8.65 லட்சம் ரூபாய் மற்றும் 7.62 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அமேஸ் மாடலானது 10 லட்சம் ரூபாய் வரையிலான விலையைக் கொண்டிருக்கும் நிலையில், டிசையர் 9.31 லட்சம் ரூபாய் வரையிலான விலையைக் கொண்டுள்ளது.
வசதிகள்:
இரண்டு செடான் கார்களின் டாப் எண்டு வேரியன்ட்களிலும் LED முகப்பு விளக்குகள், 15 இன்ச் அலாய் வீல்கள், கீலெஸ் எண்டரி, வயர்லெஸ் சார்ஜிங், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், ரியர் ஏர் வென்ட்கள், க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகிய தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோகிராம், 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
டிசையரில் 360 டிகிரி கேமரா, சன்ரூஃப் மற்றும் பெரிய 9 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கிறது. அமேஸில் 8 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் தான். கேமரா இருக்கிறது ஆனால் 360 டிகிரி இல்லை. சன்ரூஃப் வசதி இல்லை.
டிசையரை விட சுமார் 1 லட்சம் ரூபாய் வரை கூடுதல் விலையைக் கொண்டிருக்கும் அமேஸில் பேடில் ஷிப்டர்கள் (ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியன்ட்களில்), பகுதி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ADAS பாதுகாப்பு அம்சங்கள் (லேன் கீப்பிங் அசிஸ்ட், பிளைண்டு ஸ்பாட் மானிட்டரிங், அட்டானமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல்) ஆகிய வசதிகள் கூடுதலாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இவை எதுவும் டிசையரில் இல்லை.
இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ்:
அமேஸில் 1.2 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளை ஹோண்டா கொடுத்திருக்கிறது. மிட்-ரேஞ்சில் நல்ல பெர்ஃபாமன்ஸைக் கொடுக்கிறது இந்த இன்ஜின். ஆனால் குறைவான RPM-களில் அவ்வளவு சிறப்பாக இருக்கிறது என்று சொல்ல முடியாது. இதன் CVT கியர்பாக்ஸ் சிறப்பான ஒரு அம்சம் என்றாலும், நெடுஞ்சாலைகளில் சில நேரங்களில் நாம் எதிர்பார்க்கும் அளவு பெர்ஃபாமன்ஸ் கிடைக்கவில்லை.
டிசையரில் Z12E 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை மாருதி பயன்படுத்தியிருக்கிறது. அமேஸை விட 8 hp குறைவாக 82 hp பவரை உற்பத்தி செய்கிறது இந்த இன்ஜின். இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. குறைவான RPM-களில் இதன் பெர்ஃபான்ஸ் சிறப்பாக இருக்கிறது. திராட்டில் ரெஸ்பான்ஸ் சூப்பர்.
ஆனால் இதன் 5 ஸ்பீடு AMT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அவ்வளவு சிறப்பான ஒன்று எனக் கூற முடியாது. அமேஸின் CVT அளவிற்கு ஸ்மூத்தாக இந்த AMT இல்லை. எனவே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உங்கள் தேர்வு என்றால் டிசையரில் மிகவும் ஸ்மூத்தான அனுபவத்தை எதிர்பார்க்க வேண்டாம்.
மணிக்கு 100 கிமீ வேகத்தை டிசையரை விட அமேஸ் 2 நொடிகள் வேகமாக 13 நொடிகளிலேயே எட்டினாலும், அதிகபட்சமாக 150 கிமீ வரையிலான வேகத்தை அமேஸ எட்டுகிறது. டிசையரோ மணிக்கு 170 கிமீ வேகத்தையும் தொடுகிறது. இன்ஜின் பெர்ஃபாமன்ஸில் டிசையர் சிறப்பாக இருந்தாலும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை தேர்வு செய்ய வேண்டும் என்றால் அமேஸின் CVT-யே இங்கே சிறந்த தேர்வாக இருக்கிறது.
மைலேஜ்:
இரண்டு கார்களில் அதிக மைலேஜ் கொடுப்பது கண்டிப்பாக டிசையர் தான். நகரப் பயன்பாடு என்றாலும் சரி, நெடுஞ்சாலைகளில் பறக்க வேண்டும் என்றாலும் சரி அமேஸை விட 2 கிமீ முதல் 3 கிமீ வரை டிசையரின் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கூடுதலாகவே மைலேஜ் கொடுக்கிறது.
நெரிசல் மிகுந்த நகரச் சாலைகளில் பயணிக்கும் போது டிசையர் 12 கிமீ வரையிலான மைலேஜையும், அமேஸ் 10 கிமீ வரையிலான மைலேஜையும் கொடுப்பதாக நிறைய வாடிக்கையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இது ARAI மைலேஜ் அல்ல, தினசரி பயன்பாட்டின் போது நமக்குக் கிடைக்கும் மைலேஜ் அளவு என்பது குறிப்பிடத்தக்கது.
நெடுஞ்சாலைகளில் டிசையர் செடானானது லிட்டருக்கு 20 கிமீ வரையிலான மைலஜையும், அமேஸ் செடான் லிட்டருக்கு 17 கிமீ வரையிலான மைலேஜையும் கொடுக்கிறது. ஒட்டுமொத்தமாகவும் சரி, சராசரியாகவும் சரி மேலே கூறியது போல அமேஸை விட 2 முதல் 3 கிமீ வரை டிசையர் கூடுதல் மைலேஜையே கொடுக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எந்தக் காரை தேர்ந்தெடுப்பது?
எல்லா இடங்களிலும் ஒன்றை விட மற்றொன்று தான் சிறப்பான கார் என அடித்துக் கூறும் வகையில் இரண்டுக்கும் இடையே வேறுபாடுகள் அதிகமாக இல்லை. எனினும் இடவசதி, சொகுசுதன்மை, இன்ஜின் மற்றும் மைலேஜ் ஆகிய முக்கியமான இடங்களில் எல்லாம் மாருதி டிசையரே இறங்கி அடிக்கிறது. வசதிகள், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளிட்ட சில இடங்களிலேயே அமேஸின் கை ஓங்கியிருக்கிறது.
ADAS, CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளிட்ட மேம்பட்ட அம்சங்கள் அமேஸில் கூடுதலாக இருக்கிறது என்றாலும் அதற்கேற்ற வகையில் விலையும் அதிகமாகவே இருக்கிறது. இன்னொரு பக்கம் போதுமான வசதிகளுடன், தேவையான இடங்களில் ஸ்கோர் செய்து பட்ஜெட்டிலும் இருக்கிறது டிசையர். எனவே ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது டிசையரே வாடிக்கையாளர்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கிறது.
பட்ஜெட் அதிகம் இருப்பவர்களும் டிசையரின் அதிக வசதிகள் கொண்ட உயர்நிலை வேரியன்டைத் தேர்வு செய்யலாம். இத்துடன் இந்தியாவில் மூலை முடுக்குகளில் எல்லாம் இருக்கும் மாருதியின் சர்வீஸ் செண்டர்களையும் நாம் மறந்துவிட முடியாது. எனவே கேள்விகளுக்கு இடமின்றி இந்த இடத்தில் வெற்றியாளர் மாருதி டிசையர் சப்-காம்பேக்ட் செடான் தான்.


Click it and Unblock the Notifications