14 ஆண்டுகளில் 15 லட்சம் எர்டிகா கார்கள் விற்பனை... சூப்பர் ஹிட் மாடலாக வலம் வர காரணங்கள் என்னென்ன?
இந்தியாவில் 7 சீட்டர் கார்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக பயணம் செய்வதற்கு வசதியாகவும், தினசரி பயன்பாட்டுக்கு ஏற்றதாகவும் இருக்கும் கார்களுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் பல ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்று வரும் மாருதி சுஸுகி எர்டிகா தற்போது முக்கியமான மைல்கல்லை கடந்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமான மாருதி எர்டிகா கடந்த மாதம் வரை 15,13,574 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது. 2025-26 நிதியாண்டில் மட்டும் 1,98,327 எர்டிகா கார்கள் விற்பனையாகி அசத்தி உள்ளன. ஒரு 7 சீட்டர் கார் 14 ஆண்டுகள் சந்தையில் இருந்த பிறகும் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 2 லட்சம் கார்கள் விற்பனையாகி இருப்பதன் மூலமாக இது இந்தியர்களின் மனம் கவர்ந்த தேர்வாக மாறி இருப்பதை அறிந்து கொள்ளலாம்.

எளிதான கையாளுமை
மாருதி எர்டிகா கார் 7 சீட்டர் மாடலாக இருந்தாலும், நெருக்கடியான நகர்ப்புறங்கள், நெடுஞ்சாலை பயணம் என அனைத்து விதத்திலும் சிறந்த கையாளுமையை வழங்கும் மாடலாக இருக்கிறது. இந்த கார் 4,395 மிமீ நீளமும் 1,735 மிமீ அகலமும் கொண்டதாக இருந்தாலும், நகரச் சாலைகள் மற்றும் பார்க்கிங் இடங்களில் பயன்படுத்துவதும் எளிதாக இருக்கிறது. 4 பேர் அல்லது 7 பேர் என அனைத்து குடும்பத்தினருக்கும் ஏற்ற ஒரே காராக வைத்துக்கொள்ள நினைப்பவர்களுக்கு இந்த கார் மிகச் சிறந்த தேர்வாக உள்ளது.
மைலேஜிலும் கில்லி
பொதுவாக 7 சீட்டர் கார்கள் மைலேஜை சாதாரண கார்கள் போன்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், மாருதி எர்டிகா கார் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்குகிறது. அராய் சோதனைப்படி சிஎன்ஜி மாடல் ஒரு கிலோவுக்கு 26.11 கிமீ மைலேஜையும், பெட்ரோல் மாடல் 20.51 கிமீ மைலேஜையும் வழங்கும் என மாருதி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. நடைமுறை பயன்பாட்டிலும் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்குகிறது.
ஆட்டோமேட்டிக் வசதி
நகரங்களில் தினசரி கார் ஓட்டுபவர்களுக்கு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் முக்கியமான வசதியாக மாறியுள்ளது. எர்டிகாவின் பெட்ரோல் மாடலானது 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நகரங்களில் ஆட்டோமேட்டிக் மாடல் ஓட்டுனருக்கு அதிக சவுகரியத்தை வழங்கும்.
வணிக பயன்பாடு
தனிநபர் பயன்பாட்டு மார்க்கெட் மட்டுமின்றி, வாடகை கார் மார்க்கெட்டிலும் எர்டிகாதான் சிறந்த தேர்வாக முத்திரை பதித்து வருகிறது. இதனால், தனிநபர் பயன்பாடு, வணிக பயன்பாட்டு சந்தைகளில் எர்டிகா தொடர்ந்து ஸ்திரமான வர்த்தகத்தை பெற்றுள்ளது. மேலும், மைலேஜ் மட்டுமின்றி, ஒரு சாதாரண பட்ஜெட் காரை வைத்திருக்கும் அளவுக்குத்தான் இதன் பராமரிப்பு செலவுகளும் இருக்கும்.
மாருதி நிறுவனத்திற்கு பெரிய நகரங்கள் மட்டுமின்றி, சிறிய நகரங்கள், கிராமப்புறங்கள் வரை வாடிக்கையாளர்கள் அருகாமையிலேயே தங்களது காரை சர்வீஸ் செய்து கொள்ளும் அளவுக்கு சர்வீஸ் சென்டர் நெட்வொர்க்கை மிக அதிக அளவில் வைத்துள்ளது. இதனுடன் உதிரிபாகங்கள் மற்றும் வழக்கமான பராமரிப்பு வசதிகள் எளிதாக கிடைப்பது நீண்டகால அனுபவத்தில் உரிமையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கிறது.
நம்பகமான எஞ்சின்
மேலும், இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் போதுமான பவரை வழங்குகிறது. 7 பேர் செல்லும்போதும் திணறாமல் ஓட்டுனருக்கு சவுகரியமான அனுபவத்தை கொடுக்கிறது. அதேபோன்று, இதன் விலையும் போட்டியாளர்களைவிட சவாலாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், அனைத்து விதத்திலும் எர்டிகா ஒரு சிறந்த தேர்வாக தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது.
அதிக ஆடம்பரத்தை முன்னிலைப்படுத்தாமல், ஒரு குடும்பத்தினர் அன்றாடம் பயன்படுத்தும் காரிடம் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டு இந்த கார் வழங்குகிறது. அதனால்தான் 2012 முதல் இதுவரை இந்த 7 சீட்டர் கார் விற்பனையில் வலுவாக இருந்து 15 லட்சம் என்ற மைல்கல்லை கடந்துள்ளது.


Click it and Unblock the Notifications


