35 கிமீ மைலேஜ்... பெட்ரோல் எஞ்சின் வெறும் ஜெனரேட்டர்... மாருதி ஃப்ரான்க்ஸ் காரில் வரும் புதிய தொழில்நுட்பம்!
மாருதி சுஸுகி நிறுவனம் தனது பிரபலமான ஃப்ரான்க்ஸ் காரில் புதிய ஹைபிரிட் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியகி உள்ளது. இந்த புதிய மாடல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை என்றாலும், இந்த ஹைப்ரிட் மாடல் நடைமுறை பயன்பாட்டிலேயே 35 கிமீ மைலேஜ் கொடுக்கும் வகையில் இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வழக்கமான ஹைபிரிட் கார்களைப் போல பெட்ரோல் எஞ்சின் நேரடியாக சக்கரங்களை இயக்காது என்பதுதான் இதன் முக்கிய ஹைலைட்டாக உள்ளது. அதற்கு பதிலாக பெட்ரோல் எஞ்சின் மின்சாரம் தயாரிக்கும் ஜெனரேட்டராக செயல்படும். அந்த மின்சாரத்தை பேட்டரியில் சேமித்து வைத்து, மின்சார மோட்டார் மூலம் காரின் முன் சக்கரங்கள் இயக்கப்படும்.

மாருதி டிசையர், பலேனோ கார்களில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய மூனறு சிலிண்டர் 1.2 லிட்டர் Z-சீரிஸ் பெட்ரோல் எஞ்சின்தான் புதிய ஃப்ரான்க்ஸ் காரிலும் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் சக்தி நேரடியாக சக்கரங்களை இயக்காமல் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு ஜெனரேட்டர் போல பயன்படுத்தப்படும். இது 'சீரிஸ் ஹைபிரிட்' அல்லது 'ரேஞ்ச் எக்ஸ்டெண்டர்' தொழில்நுட்பம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் நடைமுறையிலேயே 35 கிமீ வரை மைலேஜை பெற மாருதி இலக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது விற்பனையில் இருக்கும் ஃப்ரான்க்ஸ் காரில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் உள்ளது. இந்த எஞ்சின் அராய் சான்றுபடி லிட்டருக்கு 21.79 முதல் 22.89 கிமீ வரை மைலேஜ் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. சிஎன்ஜி மாடல் கிலோவுக்கு 28.51 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், சோதனைமுறைகளில் அல்லாமல் நடைமுறை பயன்பாட்டிலேயே கணக்கீடுகளின்படி, லிட்டருக்கு 35 கிமீ வரை இந்த புதிய ஹைப்ரிட் தொழில்நுட்பம் மூலமாக ஃப்ரான்க்ஸ் காரில் மைலேஜை பெறுவதற்கு மாருதி இலக்கு வைத்துள்ளது. இதன் மூலம் அதிக விலை கொண்ட பாரம்பரிய ஹைபிரிட் அமைப்புகளைவிட உற்பத்திச் செலவை குறைத்து, சிறிய கார்களிலும் இந்த தொழில்நுட்பத்தை வழங்க மாருதி முயற்சி செய்து வருகிறது.
அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ள ஃப்ரான்க்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இந்த புதிய ஹைபிரிட் தொழில்நுட்பம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சோதனை ஓட்டங்களில் புதிய ஃப்ரான்க்ஸ் கார் வைக்கப்பட்டுள்ள நிலையில், வடிவமைப்பு மாற்றங்கள், கூடுதல் வசதிகள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களும் இடம்பெறும். அத்துடன், இந்த ஹைப்ரிட் திட்டமும் முக்கிய அம்சமாக இருக்கும்.
மாருதி சுஸுகி இந்த தொழில்நுட்பத்தை ஃப்ரான்க்ஸ் காருடன் மட்டும் நிறுத்தாமல், எதிர்காலத்தில் பல சிறிய மற்றும் நடுத்தர கார்களுக்கும் கொண்டு செல்ல மாருதி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலேனோ, ஸ்விஃப்ட், பிரெஸ்ஸா போன்ற மாடல்களிலும் இந்த ஹைபிரிட் அமைப்பு இடம்பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், லிட்டருக்கு 35 கிமீ மைலேஜ் என்ற இலக்கை மாருதி எட்டினால், பெட்ரோல் கார்களின் எரிபொருள் செலவை குறைக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஃப்ரான்க்ஸ் ஹைபிரிட் புதிய தேர்வாக அமையலாம். தற்போதைய சூழலில் பெட்ரோல் விலை கணிசமாக அதிகரித்துள்ளதுடன், சுற்றுச்சூழல் மாசு குறைப்பு முயற்சிகளுக்கும் உதவிகரமாக இருக்கும்.
சுஸுகி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக Series HEV தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாக அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே இந்த புதிய தொழில்நுட்பம் இந்தியாவில் மாருதி கார்களில் வருவது கிட்டத்தட்ட உறுதியான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. முதலாவதாக, ஃப்ரான்க்ஸ் காரிலும், தொடர்ந்து சில சிறிய கார்களிலும் கொண்டு வர மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications


