தமிழ்நாடு பக்கம் வர ஐடியாவே இல்லையா... வட மாநிலத்தில் ரூ.35,000 கோடியை கொட்டும் மாருதி!
மாருதி சுஸுகி இந்தியா (Maruti Suzuki India) நிறுவனம் குஜராத்தில் புதிய வாகன உற்பத்தி ஆலையை அமைக்க சுமார் ரூ.35,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய முதலீடு, நிறுவனத்தின் உற்பத்தி திறனை கணிசமாக உயர்த்தி, உள்நாட்டு விற்பனை வளர்ச்சி மற்றும் வாகன ஏற்றுமதி என இரண்டையும் ஆதரிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது.
அகமதாபாத் அருகே உள்ள சனந்த் பிராந்தியத்தின் கோராஜ் (Khoraj) பகுதியில், குஜராத் மாநில தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தால் (GIDC) வழங்கப்பட்ட சுமார் 1,750 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய ஆலை நிறுவப்படவுள்ளது. இது குஜராத்தில் மாருதி சுஸுகியின் இரண்டாவது உற்பத்தி ஆலையாகும்.

இந்த மெகா ஆலையின் மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் (1 மில்லியன்) வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும். இதன் மூலம் மாருதி சுஸுகியின் உற்பத்தித் தடம் கணிசமாக விரிவடையும். மேலும், இந்த திட்டம் நேரடியாக சுமார் 12,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
இவ்வாறான நேரடி வேலை வாய்ப்புகளுடன், கோராஜ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாகன பாகங்களுக்கான சப்ளையர்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) துறைகளிலும் பல புதிய வேலை வாய்ப்புகளை இந்த புதிய ஆலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் மூன்றாவது பெரிய கார் சந்தையான இந்தியாவில் அதிகரித்து வரும் கார்கள் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், உலகளாவிய வாகன உற்பத்தி மையமாக மாருதியின் பங்கை வலுப்படுத்துவதற்கும் இந்த விரிவாக்கத் திட்டம் அவசியமானது. மாருதி சுஸுகியின் தற்போதைய உற்பத்தி ஆலைகள் குருக்ராம், மானேசர், கார்கோடா (ஹரியானா) மற்றும் ஹன்சல்புர் (குஜராத்) ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.
சுஸுகி மோட்டார் குஜராத் என்று அழைக்கப்படும் தற்போதைய ஹன்சல்புர் ஆலையுடன், இந்த புதிய கோரஜ் ஆலை இணைந்து செயல்படும். இந்த புதிய குஜராத் ஆலையில் 2029ஆம் நிதியாண்டில் வாகன உற்பத்தி பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு கட்டங்களாக உற்பத்தி வழித்தடங்கள் நிறுவப்பட்டு, திட்டமிடப்பட்ட ஆண்டுக்கு 10 லட்சம் கார்கள் உற்பத்தித் திறன் எட்டப்படும்.
இது மாருதி சுஸுகியின் தற்போதுள்ள ஆண்டுக்கு சுமார் 24 லட்சம் வாகனங்கள் உற்பத்தி திறனுடன் கூடுதலாக இணைந்து மொத்த உற்பத்தித் திறனை சுமார் 34 லட்சம் வாகனங்களாக உயர்த்தும். கோராஜ் பகுதியில் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் ஆயத்தப் பணிகளுக்காக இந்த ஜனவரியில் கிட்டத்தட்ட ரூ.4,960 கோடி முதலீட்டிற்கு ஏற்கனவே மாநில அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது.

மாருதி சுஸுகியின் இந்த புதிய முதலீடு குறித்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தனது எக்ஸ் (X) தள பதிவில், "மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட், ரூ.35,000 கோடி முதலீட்டில் கோராஜில் ஒரு பெரிய கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க குஜராத் அரசுக்கு முதலீட்டு கடிதத்தை வழங்கியதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த திட்டம் ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் மற்றும் 12,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும். மேலும் துணை வேலை வாய்ப்புகள் மற்றும் MSME-களின் வளர்ச்சியை ஊக்குவித்து, ஒரு வலுவான வாகன உற்பத்தி சூழலை உருவாக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகியின் இந்த புதிய முதலீடு ஆனது அதன் நீண்டகால வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பரந்த வாகனத் துறையின் போக்குகளுடன் ஒத்திருக்கிறது. நிறுவனத்தின் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தை தேவையைப் பூர்த்தி செய்ய மாருதி சுஸுகி இந்த புதிய உற்பத்தி திறன் விரிவாக்கத்தைத் திட்டமிட்டு வருவதை அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications









