ஒரே மாசத்துல 2.4 லட்சம் கார்களை விற்பனை செய்து அசத்திய மாருதி சுஸூகி!
இந்தியாவில் அதிகளவிலான கார்களை விற்பனை செய்து வருவது மாருதி தான். இந்திய விற்பனையைப் பொறுத்தவரை கார்களின் 'கிங்'காக மாருதியே இருந்து வருகிறது. இதில் எந்தவித மிகைப்படுத்தலும் இல்லை, உண்மையிலேயே மற்ற நிறுவனங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு அதிகளவிலான கார்களை ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது மாருதி. தற்போது கடந்த ஏப்ரல் மாதம் மாருதியின் கார் விற்பனை நிலவரம் குறித்த தரவுகள் வெளியாகியிருக்கின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி எல்லாம் சேர்த்து சுமார் 2.39 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது மாருதி. இதில் உள்நாட்டு விற்பனையை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால் சுமார் 1.87 லட்சம் கார்கள். இரண்டாவது இடத்தில் இருக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனமோ 60,000-த்திற்கும் கீழான எண்ணிக்கையிலேயே கார்களை விற்பனை செய்துள்ளது.

அப்படியென்றால் இரண்டாவது இடத்தில் இருக்கும் நிறுவனத்தை விட சுமார் மூன்று மடங்கு அதிக கார்களை ஒவ்வொரு மாதமும் விற்பனை செய்து வருகிறது மாருதி. இப்போது சொல்லுங்கள், இந்தியாவில் கார்களின் கிங் மாருதியா இல்லையா என்பதை. இன்னும் சொல்லப்போனால், இரண்டு, மூன்று மற்றும் நான்காம் இடங்களில் இருக்கும் டாடா, மஹிந்திரா மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கையை சேர்த்தால் கூட மாருதியின் விற்பனை அளவை எட்ட முடியாது.
அதிகளவிலான எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்து வருவதால் மற்ற நிறுவனங்களை விட விற்பனை வளர்ச்சி சதவீதம் குறைவாகவே இருக்கும் என நாம் எதிர்பார்ப்போம். ஆனால், கடந்தாண்டு ஏப்ரல் மாடம் விற்பனை செய்ததை விட 35.33% கூடுதல் கார்களை கடந்த ஏப்ரலில் விற்பனை செய்துள்ளது மாருதி. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 1.38 லட்சம் கார்களை விற்பனை செய்திருந்த நிலையில், தற்போது 49,000 யூனிட்டுகள் அதிகமாக 1.87 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது.

உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி ஏற்றுமதியும் உயர்ந்திருக்கிறது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 27,911 கார்களை வெளிநாடுகளுக்கு மாருதி ஏற்றுமதி செய்திருந்தது. இது கடந்த ஏப்ரலில், 43.51% உயர்ந்து 40,054 கார்களாக உயர்ந்திருக்கிறது. டொயோட்டாவின் ரீபேட்ஜ்டு கார்களையும் மாருதியே தயாரிப்பதால் அவற்றின் எண்ணிக்கையும் மாருதியின் விற்பனைத் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, டொயோட்டாவிற்கு மாருதி தயாரித்துக் கொடுக்கும் நான்கு கார் மாடல்களின் (டெய்ஸர், ஹைரைடர், கிளான்ஸா மற்றும் ரூமியான்) விற்பனை கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது 13.81% வரை குறைந்திருக்கிறது. கடந்தாண்டு இந்த ரீபேட்ஜ்டு கார் மாடல்கள் 9,827 யூனிட்டுகள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த ஏப்ரலில் 8,470 யூனிட்டுகளாகக் குறைந்திருக்கிறது.
இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக சேர்ந்து 2.39 லட்சம் கார்களை இந்த ஏப்ரல் மாதம் விற்பனை செய்துள்ளது மாருதி சுஸூகி. இது கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 1.79 லட்சம் யூனிட்டுகளாக இருந்தது. கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது ஒட்டுமொத்தமாக மாருதி கார்களின் விற்பனை 33.29% வரை உயர்ந்திருக்கிறது. அதிகளவிலான கார்களை விற்பனை செய்யும் நிறுவனத்திற்கு இது மிகச்சிறப்பான விற்பனை வளர்ச்சி சதவீதமாகும்.
கார் மாடல் வாரியாக விற்பனையை வளர்ச்சியைப் பார்க்கும் போது, கிட்டத்தட்ட அனைத்து கார் பிரிவுகளுமே கடந்தாண்டுடன் ஒப்பிடும் போத விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. சிறிய கார்களான ஆல்டோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோ ஆகிய இரண்டு மாடல்கள் மட்டும் 16,066 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன. இது கடந்தாண்டு வெறும் 6,332 யூனிட்டுகளாக இருந்தது. ஜிஎஸ்டி வரிக்குறைப்பினால் இந்த இரண்டு கார்களின் விலையும் ரூ.4 லட்சத்திற்குள் வந்தது அதிகப்படியான விற்பனைக்கு வழிவகுத்திருக்கிறது.
அதற்கு அடுத்தபடியாக மாருதிக்கு அதிகளவு விற்பனையைக் கொண்டு வருவது காம்பேக்ட் கார்கள் தான். பெலினோ, செலரியோ, டிசையர், இக்னிஸ், ஸ்விஃப்ட் மற்றும் வேகன்ஆர் ஆகிய கார் மாடல்கள் சேர்ந்து 80,659 யூனிட்டகள் விற்பனையாகியுள்ளன. இது கடந்தாண்டு 61,912 யூனிட்டுகளாக இருந்தது. இந்த காம்பேக்ட் கார்களுக்கு இணையாக எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்களும் மாருதிக்கு அதிகளவிலான விற்பனையைக் கொடுத்து வருகின்றன.
பிரெஸ்ஸா, எர்டிகா, e விட்டாரா, ஃபிராங்க்ஸ், கிராண்டு விட்டாரா, இன்விக்டோ, ஜிம்னி, விக்டோரிஸ் மற்றும் XL6 ஆகிய யுட்டிலிட்டி கார்கள் எல்லாம் சேர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 77,892 யூனிட்டுகள் விற்பனையைப் பதிவு செய்துள்ளது. இது கடந்தாண்டு 59,022 யூனிட்டுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வேன் வகையிான வாகனமாக மாருதி விற்பனை செய்து வரும் ஈகோவின் விற்பனை 11,438 யூனிட்டுகளில் இருந்து 13,087 யூனிட்டுகளாக உயர்ந்திருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது அனைத்து வகையிலும் மாருதி கார்களின் விற்பனை உயர்ந்திருக்கிறது. வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் புதிய கார்கள் மற்றும் அப்டேட்களையும் மாருதி கைவசம் வைத்திருக்கிறது. மேலும், சிறிய கார்களும் முன்பை விட தற்போது விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் வரும் ஆண்டுகளில் மாருதியின் விற்பனை மேலும் மேலும் உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது


Click it and Unblock the Notifications