5 பேர் மட்டும் போகக்கூடிய காராக இருந்தாலும் எல்லாரும் வாங்கி போடுறாங்க! ஒவ்வொரு நாளும் 600 பேர் டெலிவிரி!
மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் நம்பர் ஒன் கார் உற்பத்தி நிறுவனம். ஒவ்வொரு மாதமும் சளைக்காமல் லட்சக்கணக்கிலான கார்களை விற்பனை செய்யும் இந்த நிறுவனத்தின் கார்கள் விற்பனை கடந்த 2026 பிப்ரவரி மாதத்திலும் பெரியதாக மாற்றமின்றி அப்படியே தொடர்ந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
பிரம்மாண்டமான உற்பத்தி தொழிற்சாலைகளை வைத்து செயல்படும் மாருதி சுஸுகி கடந்த 2026 பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 61 ஆயிரம் கார்களை விற்பனை செய்துள்ளது. 2025 பிப்ரவரி மாதத்திலும் இதனை காட்டிலும் வெறும் 209 கார்கள் மட்டுமே குறைவாக 1 லட்சத்து 60 ஆயிரத்து 791 கார்களை விற்பனை செய்திருந்தது.

ஆனால், கடந்த 2026 ஜனவரி மாதத்தில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 529 மாருதி சுஸுகி கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, ஜனவரியை காட்டிலும் பிப்ரவரியில் மாருதி சுஸுகி கார்களின் விற்பனை 8% குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட மாருதி சுஸுகி காராக முதலிடத்தை டிசையர் (Dzire) என்கிற செடான் ரக கார் பிடித்துள்ளது.
கடந்த மாதத்தில் மொத்தம் 19 ஆயிரத்து 326 டிசையர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட கார்கள் லிஸ்ட்டில் டாடா நெக்ஸான் (Tata Nexon)-க்கு அடுத்து இரண்டாவது இடத்தை டிசையர் பிடித்துள்ளது. அதுவே, 2025 பிப்ரவரியில் 14 ஆயிரத்து 694 டிசையர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த வகையில் பார்க்கும்போது, அதிக விற்பனையாகும் மாருதி சுஸுகி காரான டிசையரின் விற்பனை 34%, அதாவது சுமார் 4,632 யூனிட்கள் இந்த பிப்ரவரி மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, கடந்த 2026 ஜனவரி மாதத்தில் பிப்ரவரியை காட்டிலும் 303 டிசையர் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
டிசையருக்கு அடுத்து கடந்த மாதத்தில் அதிக எண்ணிகையில் விற்பனை செய்யப்பட்ட மாருதி சுஸுகி காராக இரண்டாவது இடத்தில் பிரெஸ்ஸா (Brezza) உள்ளது. 2025 பிப்ரவரியில் 15 ஆயிரத்து 392 பிரெஸ்ஸா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த பிப்ரவரியில் 17 ஆயிரத்து 863 பிரெஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
2026 ஜனவரி மாதத்திலும் 17 ஆயிரத்து 486 பிரெஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வரிசையில் மூன்றாவது இடத்தில் மாருதி சுஸுகியின் அளவில் பெரியதான எம்பிவி (MPV) ரக காரான எர்டிகா (Ertiga) 17 ஆயிரத்து 807 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. ஆனால், 2025 பிப்ரவரியில் 14 ஆயிரத்து 868 எர்டிகா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
| Maruti Suzuki Models | Feb'26 (Sales) | Feb'25 | YoY Growth (%) |
| Dzire | 19,326 | 14,694 | 32% |
| Brezza | 17,863 | 15,392 | 16% |
| Ertiga | 17,807 | 14,868 | 20% |
| Wagon R | 14,885 | 19,879 | -25% |
| Swift | 14,833 | 16,269 | -9% |
| Baleno | 14,632 | 15,480 | -5% |
| Fronx | 13,898 | 21,461 | -35% |
| Victoris | 13,021 | 0 | 0% |
| Eeco | 11,620 | 11,493 | 1% |
| Alto | 9,787 | 8,541 | 15% |
4வது மற்றும் 5வது இடங்களில் மாருதி சுஸுகி வேகன்ஆர் (WagonR) மற்றும் ஸ்விஃப்ட் (Swift) கார்கள் உள்ளன. இவற்றின் கடந்த பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 14,885 மற்றும் 14,833 ஆகும். அதுவே, கடந்த ஆண்டு இதே பிப்ரவரி மாதத்தில் இவை சுமார் 19,879 மற்றும் 16,269 யூனிட்கள் முறையே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
6வது மற்றும் 7வது இடங்களில் பலேனோ (Baleno) மற்றும் ஃபிரான்க்ஸ் (Fronx) கார்கள் முறையே 14,632 மற்றும் 13,898 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளன. மாருதி சுஸுகியின் இந்த டாப்-10 கார்கள் லிஸ்ட்டில் கடைசி மூன்று இடங்களில் விக்டோரிஸ் (Victoris), ஈக்கோ (Eeco) மற்றும் ஆல்டோ (Alto) கார்கள் உள்ளன. இவற்றின் கடந்த பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 13021, 11620 மற்றும் 9787 ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி கடந்த 2026 பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதியும் சேர்த்து 2 லட்சத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்துள்ளது. இருப்பினும், இந்த எண்ணிக்கை பெரியதாக மாற்றம் இல்லாமலேயே தொடர்கிறது. இதற்கு காரணம், சமீப மாதங்களாக மற்ற டாடா மோட்டார்ஸ் (Tata Motors) மற்றும் மஹிந்திரா (Mahindra) நிறுவனங்களின் கார்கள் விற்பனை கணிசமாக உயர்ந்து இருப்பது ஆகும்.
அட்டவணையில் 'விட்டாரா பிரெஸ்ஸா' என தவறாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அது 'பிரெஸ்ஸா' என சரியாக மாற்றப்பட்டது.


Click it and Unblock the Notifications








