செலிரியோவை விட குறைவான விலையில் பாதுகாப்பான டாடா கார்! அதான் மாருதி ஷோரூம் காத்து வாங்கீட்டு இருக்கு!
இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக இருந்தாலும் கூட, மாருதி சுஸுகியின் (Maruti Suzuki) ஒரு சில கார்களின் விற்பனை சற்று மந்தமாகதான் இருந்து வருகிறது. இதற்கு மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio) காரை ஒரு உதாரணமாக கூற முடியும். காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்டே (Sales Report) இதற்கு சாட்சி.
மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 1,954 செலிரியோ கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் வெறும் 1,501 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது 453 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் குறைவாக விற்பனையாகியுள்ளன. இது 23 சதவீத வீழ்ச்சி ஆகும்.

வருடாந்திர ரீதியில்தான் இவ்வளவு பெரிய வீழ்ச்சி என்றால், மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டில், மாருதி சுஸுகி செலிரியோ கார் இன்னும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வி3 கார்ஸ் தள தரவுகளின்படி, கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2,272 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.
அதன் பின் வந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி 1,501 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில் பார்த்தால், 771 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் குறைவாக விற்பனையாகியுள்ளன. இது 33.93 சதவீத வீழ்ச்சி ஆகும்.

மாருதி சுஸுகி செலிரியோ, இந்திய சந்தையில் ஒரு தோல்வியடைந்த காராகவே கருதப்படுகிறது. இதற்கு போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகள் மட்டுமல்லாது, மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்புகளும் ஒரு காரணமாக அமைந்து விட்டன. உதாரணத்திற்கு டாடா டியாகோ (Tata Tiago) காரானது, மாருதி சுஸுகி செலிரியோவின் மிக முக்கியமான போட்டி மாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
டாடா டியாகோ காரின் ஆரம்ப விலை வெறும் 4.57 லட்ச ரூபாய் மட்டுமே. ஆனால் மாருதி சுஸுகி செலிரியோ காரின் ஆரம்ப விலை 4.70 லட்ச ரூபாயாக இருக்கிறது. விலை மட்டுமல்லாது, மாருதி சுஸுகி செலிரியோ உடன் ஒப்பிடும்போது, பாதுகாப்பிலும் டாடா டியாகோவே வெற்றி பெறுகிறது.
மாருதி சுஸுகி செலிரியோ கார், குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் (Crash Tests), பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 3 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (3 Star Safety Rating) மட்டுமே பெற்றுள்ளது. அதுவும் வெகு சமீபத்தில்தான் மாருதி சுஸுகி செலிரியோ காருக்கு 3 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் கிடைத்தது. முன்பு மாருதி சுஸுகி செலிரியோ கார், பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 2 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை மட்டுமே பெற்றிருந்தது.
ஆனால் டாடா டியாகோ கார் குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் கடந்த 2020ம் ஆண்டே 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று விட்டது. அத்துடன் மாருதி சுஸுகி செலிரியோ கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன்களில் (Engine Options) மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் டாடா டியாகோ காரானது, பெட்ரோல், சிஎன்ஜி ஆகியவற்றுடன், எலெக்ட்ரிக் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.
இது போன்ற காரணங்களால் டாடா டியாகோ காரின் விற்பனை சிறப்பாக இருந்து வரும் நிலையில், மாருதி சுஸுகி செலிரியோவின் விற்பனை மந்தமாக உள்ளது. போதாக்குறைக்கு மாருதி சுஸுகி செலிரியோ உடன் ஒப்பிடும்போது, அதே ஹேட்ச்பேக் செக்மெண்ட்டை சேர்ந்த மாருதி சுஸுகியின் மற்ற கார்களான மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) மற்றும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) ஆகியவற்றையும் வாடிக்கையாளர்கள் சிறந்ததாக கருதுகின்றனர்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் ஆரம்ப விலை 4.99 லட்ச ரூபாய் ஆகவும், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஆரம்ப விலை 5.79 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள அனைத்துமே அந்தந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
மாருதி சுஸுகி வேகன் ஆர் மற்றும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஆகிய 2 கார்களையும், இந்த விலைக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். எனவே இந்த 2 கார்களும் ஒவ்வொரு மாதமும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வரும் நிலையில், மாருதி சுஸுகி செலிரியோ தள்ளாடி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விற்பனை எண்ணிக்கை சிறப்பாக இல்லாவிட்டாலும் கூட, அதிக மைலேஜ் எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, மாருதி சுஸுகி செலிரியோ நல்ல ஆப்ஷன்தான். இதன் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 34.43 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகின்றன. இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும்.


Click it and Unblock the Notifications








