5.85 லட்சம் கார்களை ரயில் மூலம் அனுப்பியதால் இவ்ளோ நன்மைகளா! ஸ்கெட்ச் போட்டு வேலை செய்யும் மாருதி சுஸுகி!
இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனம் என்ற பெருமையை மாருதி சுஸுகி (Maruti Suzuki) தன் வசம் வைத்துள்ளது. நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம், மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு டீலர்ஷிப்கள் உள்ளன. அங்கெல்லாம் கார்களை கொண்டு சென்று சேர்க்க பல்வேறு வழிகளை மாருதி சுஸுகி நிறுவனம் கையாள்கிறது.
இதில், ரயில்களும் ஒன்றாகும். இந்தியாவில் ரயில்கள் மூலமாக அதிக அளவு கார்களை அனுப்பி வரும் நிறுவனங்களில் ஒன்றாக மாருதி சுஸுகி நிறுவனம் இருந்து வருகிறது. கடந்த 2016ம் ஆண்டில் மாருதி சுஸுகி நிறுவனம் ரயில் மூலமாக 77 ஆயிரம் கார்களை அனுப்பியிருந்தது.

இதை தொடர்ந்து 2017ம் ஆண்டில் 1 லட்சம் கார்களையும், 2018ம் ஆண்டில் 1.46 லட்சம் கார்களையும் மாருதி சுஸுகி நிறுவனம் ரயில் மூலமாக அனுப்பியிருந்தது. அதை தொடர்ந்து 2019ம் ஆண்டில் 1.72 லட்சம் கார்களையும், 2020ம் ஆண்டில் 1.71 லட்சம் கார்களையும் மாருதி சுஸுகி நிறுவனம் ரயில் மூலமாக அனுப்பியிருந்தது.
இதற்கு பிறகு ரயில் மூலமாக மாருதி சுஸுகி நிறுவனம் அனுப்பும் கார்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர தொடங்கியது. 2021ம் ஆண்டில் 2.22 லட்சம் கார்களையும், 2022ம் ஆண்டில் 3.20 லட்சம் கார்களையும் மாருதி சுஸுகி நிறுவனம் ரயில் மூலமாக அனுப்பியது. இந்த வரிசையில் 2023ம் ஆண்டில் 4.22 லட்சம் கார்களும், 2024ம் ஆண்டில் 4.96 லட்சம் கார்களும் மாருதி சுஸுகி நிறுவனத்தால் ரயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன.

இதன் உச்சமாக கடந்த 2025ம் ஆண்டில் ரயில் மூலமாக 5.85 லட்சம் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது. இதுதான் மாருதி சுஸுகி நிறுவனத்தின் வரலாற்றிலேயே ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட கார்களின் அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். இதற்கு முன்பாக ஒரே காலண்டர் ஆண்டில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் ரயில் மூலமாக அனுப்பியது கிடையாது.
அத்துடன் கடந்த 2024ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, ரயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட கார்களின் எண்ணிக்கையில், மாருதி சுஸுகி நிறுவனம் 18 சதவீத வளர்ச்சியையும் மாருதி சுஸுகி நிறுவனம் பதிவு செய்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் கார்களை ரயில் மூலமாக அனுப்புவதில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன.
ரயில் போக்குவரத்தை தேர்வு செய்ததன் மூலமாக கடந்த 2025ம் ஆண்டில் மட்டும் 87,904 மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வை மாருதி சுஸுகி நிறுவனம் தவிர்த்துள்ளது. அத்துடன் 68.7 மில்லியன் லிட்டர்கள், அதாவது 687 லட்சம் லிட்டர்கள் எரிபொருளையும் மாருதி சுஸுகி நிறுவனம் மிச்சப்படுத்தியுள்ளது. இது குறித்து காடிவாடி தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வு குறைவு மற்றும் எரிபொருள் சேமிப்பு ஆகிய 2 காரணங்களால், மாருதி சுஸுகி நிறுவனம் சுற்றுச்சூழலுக்கும் நன்மைகளை உண்டாக்கி வருகிறது. வரும் ஆண்டுகளில், ரயில்கள் மூலமாக மாருதி சுஸுகி நிறுவனம் அனுப்பும் கார்களின் எண்ணிக்கை மேலும் வெகுவாக உயரும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.


Click it and Unblock the Notifications








