தங்கம் மாதிரி இந்த காருக்கு மட்டும் மதிப்பு கூடிட்டே போகுது! தாராளமா 34 கிமீ மைலேஜ் கிடைக்கும்! விலை இவ்ளோதானா
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதை போல், செடான் ரக கார்களின் விற்பனையும் படுத்தே விட்டது. இந்தியாவில் மட்டுமல்லாது, உலகம் முழுக்க இதுதான் நிலைமை. ஆனால் இந்தியாவில் ஒரே ஒரு செடான் ரக காரின் விற்பனை மட்டும், தங்கம் விலையை போல், கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) காரை பற்றிதான் நாங்கள் பேசி கொண்டுள்ளோம். அனேகமாக ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் (Hindustan Ambassador) காருக்கு பிறகு, இந்தியா கண்ட மிகவும் வெற்றிகரமான செடான் ரக கார் இதுவாகதான் இருக்கும். எனவே மாருதி சுஸுகி டிசையர் காரை, ஹிந்துஸ்தான் அம்பாஸிடரின் வாரிசு என்று கூட கூறலாம்.

இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் மிகவும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை மாருதி சுஸுகி டிசையர் பதிவு செய்து வருகிறது. இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதமும் விதிவிலக்கு அல்ல. மாருதி சுஸுகி டிசையர் காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய சந்தையில் 19,629 மாருதி சுஸுகி டிசையர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் வெறும் 15,383 மாருதி சுஸுகி டிசையர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 4,246 மாருதி சுஸுகி டிசையர் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மாருதி சுஸுகி டிசையர் கார் விற்பனையில் 27.60 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
அத்துடன் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars January 2026), மாருதி சுஸுகி டிசையர் 2வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் டாடா நெக்ஸான் (Tata Nexon) காருக்கு முதலிடம் கிடைத்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி டிசையர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 6.26 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 9.31 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
இந்த விலைக்கு மாருதி சுஸுகி டிசையர் மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது. ஏனெனில் எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் சிஸ்டம், ஸ்மார்ட்ப்ளே ப்ரோ ப்ளஸ் 22.86 செமீ மற்றும் 17.78 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்கள், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்படுகின்றன.
மேலும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஸ்மார்ட் கீ உடன் இன்ஜின் புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், ஃபாலோ மீ ஹோம் அம்சத்துடன் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், ஓடிஏ அப்டேட்கள் போன்ற வசதிகளையும் மாருதி சுஸுகி டிசையர் கொண்டுள்ளது. அத்துடன் குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனையில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (5 Star Safety Rating) வாங்கிய மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் கார் என்ற பெருமையும் இதற்கு உண்டு.
மாருதி சுஸுகி டிசையர் காரின் பெட்ரோல்-மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 24.79 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. அதே நேரத்தில் இந்த காரின் பெட்ரோல்-ஏஎம்டி வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 25.71 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகின்றன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்த காரின் சிஎன்ஜி-மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 33.73 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுக்கின்றன. இவை அனைத்துமே அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி டிசையர் காரின் விற்பனை ஏன் இவ்வளவு சிறப்பாக உள்ளது? என்பதை நாங்கள் உங்களுக்கு தனியாக விளக்க வேண்டியதில்லை. அதன் விலை, மைலேஜ், வசதிகள் மற்றும் பாதுகாப்பு ரேட்டிங் ஆகியவற்றை பார்க்கும்போதே உங்களுக்கு இந்த கேள்விக்கான பதில் புரிந்திருக்கும்.


Click it and Unblock the Notifications








