மாருதியின் முதல் எலெக்ட்ரிக் கார் வெளிநாட்டில் அறிமுகம்! இந்தியர்கள் குடுத்து வெச்சவங்க! கம்மி விலையில் வருது!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara). இதுதான் மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். இந்தியாவில் இன்னும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை என்றாலும் கூட, இந்தோனோசியா (Indonesia) சந்தையில் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் இந்தோனேசியா இன்டர்நேஷனல் மோட்டார் ஷோ (IIMS - Indonesia International Motor Show) வாகன திருவிழாவில் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

குஜராத் மாநிலம் ஹன்சல்பூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில்தான் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து இந்தோனேசியாவிற்கு முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் ஏற்றுமதி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படவுள்ளது. முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் ஒரு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் கார்களை சிபியூ (CBU - Completely Built Units) என்பார்கள்.
பொதுவாக சிபியூ கார்களின் விலை அதிகமாக இருக்கும். வரிகள்தான் இதற்கு காரணம். இந்தோனேசியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இந்தோனேசிய சந்தையில் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 755 மில்லியன் ஆர்பி (Rp) என கார்டாக் தளம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rupiah என்பதன் சுருக்கம்தான் Rp. இது இந்தோனேசியாவின் கரன்சி ஆகும். இந்திய மதிப்பில் கணக்கிட்டால், இந்தோனேசியா சந்தையில், மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை சுமார் 40.56 லட்ச ரூபாய் வரும். இந்த அதிகப்படியான விலைக்கு இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீது விதிக்கப்படும் வரிகளும் மிக முக்கியமான காரணமாக கருதப்படுகின்றன.
ஆனால் இந்தியாவில் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 17 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படவுள்ளது.
அவை 61 kWh மற்றும் 49 kWh ஆகியவை ஆகும். இதில், 61 kWh பேட்டரியின் டிரைவிங் ரேஞ்ச் 543 கிலோ மீட்டர்கள் என மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் 49 kWh பேட்டரியின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. கூடிய விரைவில் இந்த பேட்டரியின் டிரைவிங் ரேஞ்ச் எவ்வளவு? என்பது அறிவிக்கப்படவுள்ளது.
அதே சமயம் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் வசதிகளை (Features) பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), 7 ஏர்பேக்குகள், சன்ரூஃப், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்களாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தோனேசிய சந்தையை தொடர்ந்து, இந்திய சந்தையிலும் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அனேகமாக நடப்பு பிப்ரவரி மாத இறுதிக்குள்ளாகவே இந்தியாவில் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








